கொரோனா வைரஸைத் துரத்தியடித்த வகுப்புவாத வைரஸ் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு
முஸ்லீம் பெண்கள் தங்களுடைய தலையில் ஹிஜாப் என்று குறிப்பிடப்படுகின்ற முக்காடு அணிந்து கொள்ள விரும்புவதில் சர்ச்சைக்குரியதாக எதுவொன்றும் இருக்கவில்லை. பாஜக ஆளுகின்ற கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை ‘ஹிஜாப் சர்ச்சை’ என்று விவரிப்பது தவறாகும். அதுவொன்றும் அதுபோன்ற சர்ச்சையாக இருக்கவில்லை. உண்மையில் இளம் முஸ்லீம் பெண்களின் கல்வி உரிமையின் மீது நேரடியாக நடத்தப்படுகின்ற தாக்குதலாகவே இந்த சர்ச்சை இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கான கல்வி உத்தரவாதம் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படுகின்ற புதிய தலைமையின் கீழ் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட இது குறித்த புகார் பெற்றவுடனே ஜனவரி 27 அன்று ‘இந்த விவகாரத்தின் உண்மைகள் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றன. ‘கல்வி உரிமை’ தொடர்பாக இந்தப் புகார் மிகவும் தீவிரமானதாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனித உரிமைகளைக் கடுமையாக மீறுவதாகவே இந்த விவகாரம் உள்ளது’ என்று உடுப்பியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது.
இறுதியாண்டில் படிக்கின்ற, இன்னும் இரண்டு மாதங்களில் தங்களுடைய பன்னிரண்டாவது வகுப்புத் தேர்வுகளை எழுதப் போகின்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளம் பெண்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்ற கர்நாடக அரசின் முற்றிலும் தேவையற்ற, தவறான எண்ணத்துடன் கூடிய பிப்ரவரி 5ஆம் நாளிட்ட உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதிக்காதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாகவே இருக்கிறது.
கர்நாடக அரசின் அந்த உத்தரவு கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது புகுமுகக் கல்வித் துறையின் கீழ் வருகின்ற புகுமுகக் கல்லூரிகளின் நிர்வாக வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற உடையையே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிடுகின்ற கர்நாடகா கல்விச் சட்டம் – 1983இன் பிரிவு 133(2)ஐத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரிவு நிர்வாகக்குழு சீருடையைத் தேர்ந்தெடுக்காத பட்சத்தில் ‘சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளை மாணவர்கள் அணியக் கூடாது என்று குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட அந்தப் பிரிவு 133(2) கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களில் மாநில அரசு நேரடியாகத் தலையிட அனுமதிப்பதாகவே இருக்கிறது. சீருடைகள் அந்த வகைக்குள் நிச்சயமாகப் பொருந்தாது என்பதால் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கேள்விக்குரிய செயலாகவே உள்ளது.
சந்தேகத்திற்குரிய அந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதன் நோக்கம் மிகவும் தெளிவாகவே உள்ளது. கர்நாடகாவில் கல்லூரி மேம்பாட்டுக் குழுக்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் தலைமையிலேயே செயல்பட்டு வருகின்றன. தலையில் முக்காடு அணிவதற்கு எதிரான விதிகள் எதுவும் கல்லூரிகளில் இல்லை. ஆயினும் இந்தப் பிரச்சனை முதலில் தொடங்கிய உடுப்பி மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உள்ள புகுமுகக் கல்லூரியில் முஸ்லீம் பெண்கள் முக்காடு அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பஜ்ரங் தள் அமைப்பின் உடுப்பி மாவட்டச் செயலாளரான சுரேந்தர் கோட்டேஷ்வர் ‘கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய அனுமதித்தால், வளாகத்திற்குள் உள்ள ஹிந்து மாணவர்கள் அனைவரையும் நாங்கள் காவித் துண்டு அணியச் செய்வோம்’ என்று எச்சரித்தார்.
அவர் இந்தத் திட்டத்தை அரசாங்கத்தின் அனுசரணையுடனே செயல்படுத்தினார். அவர் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அரசு சாரா அமைப்புகள் என்று தங்களுக்குள்ள வலைப்பின்னல் மூலம் அரசாங்கம் காவித் துண்டு அணிந்த ஆக்ரோஷமான இளைஞர்களை முஸ்லீம் பெண்களுக்கு எதிராக முதலில் அணிதிரட்டியது. அவர்கள் அனைவரையும் முஸ்லீம் மாணவிகளை உள்ளே விடாமல் வாசலில் தடுத்து நிறுத்தி வைத்திருந்த கல்லூரிகளுக்குப் பேரணியாகச் செல்வதற்குப் பின்னர் அனுமதித்தது. பெண்களை நோக்கி கூச்சலிட்டு அவர்களைக் கேலி செய்தவர்களை காவல் துறையினர் வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர் ‘சமமான நடவடிக்கை’ என்ற பெயரில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உண்டாக்கும் என்பதால், கல்லூரியில் அப்படி ஒரு விதி இருக்கிறது அல்லது இல்லையென்றாலும் முஸ்லீம் மானவிகள் முக்காடு அணிந்து கொண்டு வருவதைத் தடைசெய்வது என்ற உத்தரவை வெளியிட்டது.
உண்மையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மற்றொரு கல்லூரியான பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முஸ்லீம் பெண்கள் தலையில் முக்காடு அணிய அனுமதித்துள்ளதுடன், அது துப்பட்டாவின் வண்ணமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு அந்தக் கல்லூரி தன்னுடைய விதியையே மீறி முஸ்லீம் மாணவிகளை கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. இது அப்பட்டமான அநியாயம் இல்லையா?
முஸ்லீம் பெண்களை இவ்வாறு குறிவைப்பது சமூகத்தின் மத்தியில் எதிர்வினைக்கே இட்டுச் செல்கிறது. இதுவரையிலும் முக்காடு அணியாதவர்களும் கூட இப்போது அதை அணிந்து கொள்வதை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றனர். கர்நாடகாவில் அதுபோன்ற நிலைமை உருவாவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற நிலைமை பெண் சுதந்திரத்திற்கு ஆதரவாக இல்லாத தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தங்களுடைய அடிப்படைவாத சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்கு அடித்தளமிட்டுத் தருவதாகவும் இருக்கிறது.
கல்வி நிறுவனங்களில் சீருடை என்ற கருத்தையே இந்தப் பெண்கள் அடியோடு எதிர்த்து வருவது போன்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில் ‘மாணவர்கள் அனைவரிடமும் அரசு நிர்ணயித்துள்ள சீருடையை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அரசாங்கம் விதித்துள்ள பள்ளிச் சீருடை விதிமுறைகளை மீறுபவர்கள் பள்ளிகளுக்குள் நுழைந்து தங்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதையும் நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்’ என்றார். முஸ்லீம் பெண்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட சீருடையையே அணிந்துள்ளனர். கூடுதலாக அவர்கள் தங்கள் தலையை ஒரு முக்காடு கொண்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீருடைக்குப் பதிலாக புர்காவுடன் அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ள முக்காடைப் பயன்படுத்துவதில்லை. தலைப்பாகை அணிந்து கொள்ளும் சீக்கிய மதம் சார்ந்த மாணவர்கள் சீருடை குறித்த அரசின் உத்தரவை மீறுவதில்லை. சீக்கிய மாணவன் அல்லது மாணவி தன்னுடைய தலையை மூடிக் கொண்டு வரக் கூடாது என்று இந்தியாவில் எங்காவது விதிகள் இருக்கின்றனவா? இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் இருக்க வேண்டும்? கல்வி நிறுவனங்களில் சீருடைகளை யாரும் எதிர்க்கவில்லை. முக்காடு அணிவதில் முஸ்லீம் பெண்கள் அனைவருக்குமான விதிமுறைகளை மீறுவதும் இல்லை.
இதனை சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்று முன்வைக்கின்ற வாதம் மிகவும் அபத்தமானது. இத்தனை ஆண்டுகளாக கர்நாடகாவிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்குமோ இது சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக இருந்ததே இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லீம் மாணவர்கள் தாங்கள் விரும்பினால், முக்காடு அணிந்து கொள்ளலாம் என்றாலும் அதனை வேண்டாம் என்றே பலரும் தேர்வு செய்து கொள்கிறார்கள். எந்த வகையிலும் அது கட்டாயம் என்று அங்கே இருக்கவில்லை. பெண்கள் முக்காடு அணிவதால் கேரளாவில் சட்ட ஒழுங்குப் பிரச்னை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. முஸ்லீம் பெண்களிடையே அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட மாநிலமாக கேரளா இருக்கிறது. அங்கே உயர்நிலைப் பள்ளிகளில் முஸ்லீம் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.
கர்நாடக அரசின் உத்தரவில் பொது ஒழுங்கு பற்றிய குறிப்பு வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் இருபத்தைந்தாவது பிரிவு ‘(1) பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கும் உட்பட்டு, மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக மதநெறி ஓம்புதல், ஒழுகுதல், ஓதிப் பரப்புதலுக்கும் அனைவரும் சரிசமமாக உரிமை கொண்டவர் ஆவார்’ என்று கூறுகிறது. இப்போது ‘மதநெறியை ஓம்புவது, ஒழுகுவது, ஓதிப் பரப்புவதற்கான உரிமை’ பொது ஒழுங்குப் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது என்று கூறி இந்த விவகாரத்தில் பொது ஒழுங்குப் பிரச்சினையைக் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் தனது நிலைப்பாடு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதான தொனியைக் கட்டமைத்துக் கொள்ளப் பார்க்கிறது.
கேரள உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வழக்கு (2016ஆம் ஆண்டு அம்னா பின்ட் பஷீர் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) உள்ளது. முஸ்லீம் பெண்கள் முக்காடு, நீண்ட கை உள்ள சட்டை போன்றவற்றை அணிவது ‘அத்தியாவசியமான மதப் பழக்கம்’ என்று குறிப்பிட்டு, அந்த வழக்கம் அரசியலமைப்பின் பிரிவு 25இன் பாதுகாப்புடன் இருப்பதாக அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் தேர்வர் ஒருவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். பெண் தேர்வர்கள் குட்டை கை சட்டை அணிய வேண்டும், தலையை மூடக் கூடாது என்றிருந்த அந்த ஆடைக் கட்டுப்பாடு விதி அரசியலமைப்பு பிரிவு 25-ன் கீழ் தனக்குள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கிறது என்று அந்தப் பெண் கூறியிருந்தார்.
தேர்வு அறைக்குள் ஏமாற்றி தேர்வு எழுத உதவும் பொருட்களைத் தேர்வர்கள் கொண்டு சென்று விடுவார்கள் என்பதற்காகவே அந்த விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அவை பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் கூறி நீதிமன்றம் அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. மேலும் தனது தீர்ப்பில் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் அந்த தேர்வர் தன்னை உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தேர்வருக்கு அறிவுறுத்தலையும் வழங்கியிருந்தது. இவ்வாறாக அந்த தீர்ப்பின் மூலம் தேர்வு முறையின் நியாயமும், பெண் தேர்வரின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்பட்டது.
முன்னதாக 2015ஆம் ஆண்டு இதேபோன்ற மற்றொரு வழக்கில் (நாடியா ரஹீம் எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), மத நம்பிக்கையின் அடிப்படையில் தலையில் முக்காடு மற்றும் நீண்ட கையுடனான சட்டை அணிய அனுமதியளிக்க வேண்டும் என்று இரண்டு முஸ்லீம் பெண் தேர்வர்கள் சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் உறுதி செய்து தந்தது. பல மதங்கள், பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்டதொரு நாட்டில், குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாத மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று கூறி அந்த ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கிலும் வாரியத்தின் கவலைகளைப் போக்குகின்ற வகையில் உடல் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்ற தீர்ப்புகளின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே கர்நாடக அரசு வேண்டுமென்றே சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
கல்வி உரிமையை அதிக அளவிலான குழந்தைகளுக்கு விரிவுபடுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்திட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளாக இணையவழி வகுப்புகளின் போது மாணவிகள் அளவுக்கதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயால் இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் மேனிலைப் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறக் கூடும் என்று கல்வி உரிமை மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 2021 ஜூலை மாதம் மாநில உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கர்நாடகா கிராமப்புறங்களில் 1.59 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறிவித்துள்ளன.
ஆனாலும் இந்த அரசாங்கம் மிகக் குறுகிய கண்ணோட்டத்துடனான தன்னுடைய திட்டத்தை முன்னிறுத்தி, பள்ளிக்குச் செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துகிறது. அரசாங்கம் முன்வைக்கின்ற ‘மகள்களைக் காப்பற்றுங்கள், மகள்களுக்குக் கற்றுக் கொடுங்கள்’ (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற முழக்கத்தில் இருந்து பேட்டிகளாக – மகள்களாக – இல்லாமல் இந்த முஸ்லீம் சிறுமிகள் ஒதுக்கி வைக்கப்படப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது.
இந்தச் சக்திகளால் இளைஞர்களின் உணர்வுகள் இழிவான முறையில் கையாளப்படுவதைப் பார்க்கும் போது சோகமே ஏற்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இணையவழிக் கல்வியை அணுக முடியாமல் கல்வியை இழந்து தவித்து வருகின்ற இந்த நேரத்தில் இதுபோன்று இளைஞர்களிடையே மோதல்களும், பிளவுகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய குற்றச்செயல் என்பதைத் தவிர வேறாக இருக்கவில்லை. இப்போது நடந்திருப்பது ஹிந்துத்துவாவை வெளிப்படையாக, அப்பட்டமாக கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்துகின்ற திட்டமே ஆகும். கொரோனா தொற்றுநோயை ஹிந்துத்துவா சக்திகளின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸைக் கொண்டு பரப்பப்படுகின்ற இந்த வகுப்புவாத தொற்றுநோய் மாற்றீடு செய்து கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்களை மூடுவதற்கே வழிவகுக்கும் இந்தச் செயல் இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதாகவும் இருக்கிறது.
https://www.ndtv.com/opinion/are-muslim-girls-excluded-from-beti-bachao-beti-padhao-2760357
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு