வசந்ததீபனின் கவிதைகள்
மின்மினிகளின் பகல்
*************************
மேய்த்த மிருகங்கள் திரும்பின
அவள் பிணமாய்ப் புதரில் கிடக்கிறாள்
ரத்தம் தோய்ந்து பறக்கிறது தேசியக்கொடி
தெய்வத்தைப் புசித்தேன்
சாத்தானைத் தின்றேன்
மனிதர் அனைவரையும் நேசிக்கிறேன்
குழந்தையைக் கடித்துத் தின்றிருக்கின்றன
வெறி நாய்கள் இன்றும்
விட்டு வைக்கலாமா இனியும் நாம் ?
ஆயுதங்கள் சார்பற்றவை
ஏந்துபவர்களுக்குத் தக்கபடி செயலாற்றும்
வன்முறை வன்முறையைக் கட்டவிழ்த்து விடும்
வென்ற குதிரைக்குப் புல் கிடைக்கும்
தோற்ற குதிரை பசித்துக் கிடக்கும்
வேண்டுதல் வேண்டாமை
சுயநலம் சார்ந்தது
பசிப்பவனுக்குப் பூவை கொடுக்கிறீர்கள்
புளிச்சேப்பக்காரனுக்குப்
பழம் தருகிறீர்கள்
பெரு நெருப்பு உங்களுக்காக
கனிந்து கொண்டிருக்கிறது
காக்கைச் சிறகினிலே துவேஷம்
கொக்கின் வண்ணத்தில் வெறித்தனம்
நிறம் பற்றிய உரையாடல்களில் உதிரம் பீறிடுகிறது
பூனை அழகானது
பவ்வியமாய் சுற்றித் திரியும்
அடைபட்ட அறைக்குள் பிசாசாகும்
பற்றி எரியத் தொடங்குகின்றன
சிறிய சந்தோஷமும்
சாம்பலாய்ப் பறக்கிறது
உறுமீனுக்காகக் கொக்கு ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது
ஆறு பெருமூச்சாய் நுரைகள் பூக்க
வழி போன போக்கில் போகிறது.
இவளும் மனுசி
******************
துளியாய் விழுந்தது
கடலாய்ப் பெருகுகியது
அவள் மூழ்கிக் கொண்டிருக்கிறாள்
மழுங்கச் சிரைக்கப்பட்ட தலை
சீழ்வடியும் புண்களும் ரணங்களுமான உடல்
எம் நாடு எம் இனம் எம் வாழ்வு ஈடேற வழியேது?
கானகத்தின் நடுவில் அழுகுரல்
துக்க நீரூற்றாய்ப் பீறிடுகிறது
எக்குரலையும் விழுங்கிச் செரிக்கிறது அக்குரல்
சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்
அழுவதற்குப் பயிற்சி தேவையில்லை
சிரிப்பும் அழுகையும்
மனிதரைப் பாடாய்ப்படுத்தும்
உடலை விற்கக் காரணமாய் இருந்தாய்
உடலை நாயாய் தின்றாய்
வேசி எனக் கூப்பிடுகிறாயே
வேசி நாயே
சபிக்கப்பட்ட தேசத்தில் வாழ்கிறேன்
என் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன
நாவு இழந்து கண்ணீர் வடிய
கற்சிலையாய் நிற்கிறேன்.
– வசந்ததீபன்