கற்பனை செய்தவர்களும் உண்மையை சொன்னவர்களும் – ஜி.ராமகிருஷ்ணன்
‘கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரை ‘டூரிங்கிற்கு மறுப்பு’ எனும் புத்தகத்தில் 3 அத்தியாயங்களாக இடம் பெற்றுள்ளன. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வாழ்ந்த காலத்திலேயே மார்க்சிய கொள்கைகளையோ, தத்துவத்தையோ அவ தூறு செய்தவர்களுக்கு தகுந்த சாட்டையடி கொடுத் துள்ளனர். மார்க்சிய தத்துவம் குறித்து தோழர் லெனின் தன்னுடைய மார்க்க்சியத்தின் மூன்று தோற்று வாய்களும், மூலக்கூறுகளும் என விவரிக்கிறார். தத்துவம், பொருளாதாரம், சோசலிசம் -இதுவே அடிப்படை.

மார்க்சுக்கு முந்தைய முன்னோடிகளின் முயற்சி களை பகுப்பாய்வு செய்து ஏங்கெல்ஸ் தன்னுடைய ‘கற்ப னாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு முதலாளித்துவ வளர்ச்சியில் தொழிலாளர்களின் வறுமை, ஏழ்மை, அவர்கள் ஒடுக்கப்படுவது, 18 மணிநேரம் வேலை வாங்கப்படுவது ஆகியவற்றை கண்டு சோசலி சத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற மூன்று சமூக சீர்த்திருத்தவாதிகளின் முயற்சியின் அனுபவம், தோல்வி ஆகியவற்றை தொகுத்து ஏங்கெல்ஸ் தன்னு டைய புத்தகத்தை எழுதினார்.
முதல் மூவர்
செயிண்ட் சைமன் (1760-1825)ஃபுயுரியர், ராபர்ட் ஓவன் உள்ளிட்டோர் மனிதநேயத்துடன் பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எவ்வாறு களைய வேண்டும் என்ற நோக்கத்துடன் சோசலிசம் என்னும் கருத்தையும், அதற்கான நட வடிக்கையையும் மேற்கொண்டனர். இவர்களை தனது நூலில் ஏங்கெல்ஸ் ‘சமூக சீர்திருத்தவாதிகள்’ எனக் குறிப்பிடுகிறார். முதலாளித்துவ வளர்ச்சி முழுமை பெறாத நிலையிலும், தொழிலாளர் வர்க்கத்தின் உரு வாக்கமும் முழுமை பெறவில்லை என்கிற சுழ லிலும் இம்மூவரும் சோசலிசம் எனும் கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
தோல்வியில் முடிந்த சைமனின் முயற்சி
பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு (1789) தொழில் வளர்ச்சியில் தொழிலாளர்கள் மத்தி யில் நிலவிய வறுமை, ஏழ்மை, ஒடுக்குமுறை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, கொடுமை ஆகியவற்றைக் களைய அறிவியல்பூர்வமாக பகுத்தாய்வுடன் இந்த சிக்கல்களை அணுகவேண்டும் என செயிண்ட் சைமன் வலியுறுத்தினார். வறுமையை போக்க முடியும், ஏழ்மையைப் போக்க, அவலங்களைப் போக்க சோச லிசத்தைக் கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்த சைமன் பிரசாரத்தின் மூலமும், பரிசோதனையின் மூலமும், சிலரின் முன்மாதிரியான செயல்பாடுகளின் மூலமும் பிரான்சில் புதிய சமத்துவ சோசலிச சமூகத்தை அமைக்க முடியும் எனத் தெரிவித்தார். முதலாளித்துவ வளர்ச்சி முழுமை பெறாத நிலையில் முதிர்ச்சியடையாத கருத்தை இம்மூவரும் முன்வைப்பதாக ஏங்கெல்ஸ் விமர்சித்தார்.
1789ல் நடந்த பிரெஞ்சு புரட்சியின் போது செயிண்ட் சைமன் 30 வயதுக்குட்பட்ட இளைஞராகவே இருந்தார். அந்த எழுச்சியைக் கண்ட சைமன் அதனால் உந்தப்பட்டு பிரான்சில் சமத்துவத்தை ஏற்படுத்த ஆர்வத்துடன் முயற்சியை மேற்கொண்டார். அப்போது பிரான்சில் முதலாளிகள், தொழிலாளிகள், வணிகர்கள் என பலரும் இருந்த சமூக அமைப்பு நிலவி வந்தது. சோசலிசம் மற்றும் சமத்துவத்தை உரு வாக்குவதற்கு அவர் முன்வைத்த கருத்துகளில் ஒன்று முதலாளிகள் அவர்களின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகவும், சமூகத்திற்காகவும் தங்களை அறங்காவலர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் நலன்விரும்பும் வகையில் முதலாளிகள் செயல்பட வேண்டும். இரண்டாவதாக முதலாளிகள் பொதுநிர்வாகிகளாக இருக்க வேண்டும், மூன்றாவதாக முதலாளிகளுக்கு கடன்வழங்கும் வங்கிகள், வங்கி உரிமையாளர்கள் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பொதுவானவர்களாக, நடுநிலைமையாக ஒரு ஒழுங்குமுறையான அமைப்பு முறையை உரு வாக்கக் கூடிய எல்லோருக்கும் பொதுவான பாரபட்சமற்ற அணுகுமுறையை வங்கி உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இது மனிதாபிமானத்துடன், நல்ல நோக்கத்துடன் செயிண்ட் சைமன் மேற்கொண்ட முயற்சி.

ஆனால், தொழில்வளர்ச்சி ஏற்படக்கூடிய அந்தக் காலகட்டத்தில்தான் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள், மோதல்கள், வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. முதலாளிகள் ஆளும் வர்க்கம் என்ற முறையில் தொழிலாளர்களு டன் முரண்பட்டே இருந்தனர். இதனால் செயிண்ட் சைமனின் முயற்சி தோல்வியடைந்தது. அவரால் வெற்றி பெற முடியவில்லை.
புயுரியர் சொன்னது என்ன?
1772ல் பிறந்து 1837ல் மறைந்த ஃபுயுரியர் பிரெஞ்சு புரட்சியின்போது இளைஞராக இருந்தார். ஃபுயுரியர் முதலாளித்துவ சுரண்டல்கள் குறித்து கடுமையாக விமர்சித்தும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் வாதாடினார். அன்றைக்கு இருந்த ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக சாடினார். முதலாளித்துவத்தையும், முத லாளிகளையும் கடுமையாக விமர்சித்தார். ஃபுயுரியர், செயிண்ட் சைமன் மாதிரியான பலரும் சமத்துவத்தை உருவாக்க வேண்டும், இணக்கமாக இருக்க வேண்டும் என முதலாளித்துவத்தை விமர்சித்துக் கொண்டே சமா தானப்பூர்வமாக இப்படிப்பட்ட முறையில் சோசலி சத்தை கொண்டுவர வேண்டும் என பிரச்சாரம் செய்த னர். பிரசாரத்தின்மூலமும், வேண்டுகோள் விடுப்ப தன்மூலமும் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனை களுக்கு தீர்வை கொண்டு வரமுடியாது, சமத்து வத்தைக் ஏற்படுத்த முடியாது. இதனால் ஃபுயுரியர் வாத மும் தோல்வியடைந்தது.
‘குழந்தை மனது’ ராபர்ட் ஓவன்
மூன்றாவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன் 1771ல் பிறந்து 1858ல் மறைந்தார். இவரும் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் ஆகியோருக்கு முன்னோடி. பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு பிரெஞ்சு நாட்டைக் காட்டிலும் இங்கிலாந்தில் தொழிற்வளர்ச்சி வேகமாக ஏற்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் உலகின் பல நாடுகளும் இங்கிலாந்தின் காலனி நாடுகளாக இருந்ததால் அந்நாடுகளை சுரண்டி இங்கிலாந்தில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இதன் பின்னணியில் சமூக சீர்திருத்தவாதியான ராபர்ட் ஓவன் நல்ல நோக்கத்துடன் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டார். ராபர்ட் ஓவன் குறித்து குறிப்பிடும் ஏங்கெல்ஸ் அவரை குழந்தை மனதுக்காரர் எனக் குறிப்பிடுகிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக மனிதநேயத்துடன் நடந்து கொள்பவராக இருந்தார். ஒருகட்டத்தில் பஞ்சாலை ஒன்றில் கூட்டாளியாக நிர்வாகப் பொறுப்புகளை கவனித்து வந்தார். பஞ்சாலை முதலாளி எனும் அடிப்படையில் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் கூடிய 2,500 பேர் வசிக்கக் கூடிய குடியிருப்புகளை ஓவன் அமைத்துக் கொடுத்தார். மேலும் அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இது புதுமாதிரியான சமூக அமைப்பாக தெரிகிறது. இப்படி இந்த குடியிருப்புகளை பல ஆண்டுகள் நடத்திவந்தார். இந்த முயற்சி குடியிருப்பு வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு இரண்டு வய திலேயே பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தி வந்தார். குழந்தைகள் பள்ளிக்கூடம் வந்தால் வீட்டிற்கு திரும்பிபோக மனமில்லாத அளவிற்கு பள்ளிகளை நடத்தினார். மற்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 12 மணி நேரம், 13 மணி நேரம், 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ராபார்ட் ஒவனை பொருத்தவரையில் அவருடைய தொழிற்சாலையில் 10.30 மணி நேர வேலை மட்டுமே. அந்த கால கட்டத்தில் அதுவே மனிதாபிமானமாக கருதப்பட்டது. ஏனெனில் அவர் மனிதாபிமானியாக இருந்தார்.
அடுத்ததாக பருத்தி பற்றாக்குறையினால் 4 மாதம் பஞ்சாலை இயங்காமல் பூட்டிக்கிடந்தது. சாதாரணமாக பஞ்சாலை இயங்காமல் போனால் கூலி கொடுக்க மாட்டார்கள். ஆனால் இங்கு நான்கு மாதம் ஆலை இயங்கவில்லை என்றாலும் தொழிலாளர்களுக்கு முழு சம்பளமும் வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட சோசலிச முறையில் தொழிற்சாலை இயக்கப்பட்டது. இதுபோன்று அனைத்து முதலாளிகளும் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கினால், வேலை நேரத்தை குறைத்தால் சோசலிச சமூகத்தை உருவாக்கமுடியும் என நம்பினார். அதற்கேற்ற வேலைகளை ராபர்ட் ஓவன் செய்தார். இப்படிப்பட்ட கொள்கையை இங்கிலாந்தில் ராபார்ட் ஓவன் முன்வைத்தார்.
ஆனால் அவர் எதிர்ப்பார்த்தபடி அவர் முன்வைத்த திட்டத்திற்கு வரவேற்பில்லை. முதலாளிகளும், மதகுருமார்களும் எதிர்த்தனர். எதிர்பாராத விதமாக பத்திரிக்கைகளும் கேளி கிண்டல் செய்து அவருடைய கருத்தை எதிர்த்தனர். அவரின் முயற்சியை யாரும் ஆதரிக்கவில்லை என மிகவும் வருத்தப்பட்டார். ஒருகட்டத்தில் தொழில் நலிவடைந்து அமெரிக்காவிற்கு சென்று பிரச்சாரம் செய்தார். ஒரு கட்டத்தில் அனைத்து மூலதனத்தையும் இழந்து பஞ்சாலையை விட்டு வெளியேறி கடைசியில் தொழி லாளிகளோடு தொழிலாளியாக சேர்ந்தார். இவ்வாறு 30 ஆண்டுகள் தொழிலாளியாகவே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதன்பின் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கத்தை தொடங்குகிறார்கள் அதற்கு தலைவராக பொறுப்பேற்றார். ஆக முதலாளியாக இருக்கும் ராபார்ட் ஓவன் தொழிலாளிகள் மத்தியில் சமத்துவநிலை ஏற்பட வேண்டும் என செயல்பட்டார். ஆனால் அவரை தவிர மற்ற முதலாளிகளும், பத்திரிக்கைகளும் இவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து இதுபோன்ற சமத்துவத்துக்கான வேலையில் ஈடுபட்டுகொண்டே தொழிற்சாலையை நடத்த முடியவில்லை, அவர் செல்வத்தை இழந்தார்.வரு மானம் இல்லை கடைசியில் அவரும் தொழிலாளியாக மாறும் நிலை ஏற்படுகிறது. இதுபற்றி ஏங்கெல்ஸின் அந்த நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
ஏங்கெல்சின் ஆய்வு
இங்கிலாந்தை சேர்ந்த ராபார்ட் ஓவன், பிரான்ஸை சேர்ந்த செயின்ட் சைமன் மற்றும ஃபுயுரியர் மூன்று பேரும் சோசலித்தை முன்வைத்தனர். ஆனால் அவர்களால் அதை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியவில்லை, அவர்கள் தோல்வியுற்றனர் என்பதை ஏங்கெல்ஸ் பரிசீலனை செய்து விரிவாக இந்த புத்த கத்தில் மூன்று கட்டுரையில் எழுதியிருக்கிறார். 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது. 1878 ஆம் ஆண்டு ஏங்கெல்ஸ் இந்த நூலை எழுதுகிறார். 1871 ஆம்ஆண்டு பிரெஞ்சு தலைநகரமான பாரீசை தொழிலாளி வர்க்கம் புரட்சியின் மூலம் கைப்பற்றி யது.

பாரீஸ் கம்யூன் என்று சொல்லக்கூடிய இப்புரட்சியினால் அதிகாரத்தை 71 நாட்கள் மட்டும தக்க வைக்க முடிந்தது. பாரீஸ் கம்யூன் அனுபவத்தையும் கணக்கில் கொண்டுதான் 1878ல் கற்பனாவாத சோசலிசமா? விஞ்ஞான சோசலிசமா? என்ற கட்டுரையை ஏங்கெல்ஸ் எழுதினார். அந்நூலில் இந்த மூன்று பேரின் அனுபவம் மட்டும் அல்லாமல் பொதுவாக தத்துவம், சோசலிசம், அரசியல் பொருளாதாரம் என மூன்று அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட மூன்று சீர்திருத்தவாதிகளும் சமத்துவத்தை கொண்டு வரவேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு முயற்சிசெய்தாலும் அவர்களால் அதை எட்ட முடிய வில்லை.
கற்பனாவாத சோசலிசமா? விஞ்ஞான சோசலிசமா? எனப் பார்க்கும்போது மார்க்சிய தத்துவத்தை முன்வைத்த பொருள் முதல்வாத கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனையை பரிசீலிக்கவேண்டும் என பரிந்துரைக்கிறார். அப்படி என்றால் ஜெர்மானிய தத்துவத்தை கருத்தில் கொண்டு செயல்படுகிறார் அதாவது இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இந்த தத்துவத்தின் அடிப்படையில் சோசலிசத்தை பற்றி பரிசீலிக்க வேண்டும் என ஏங்கெல்ஸ் வலியுறுத்துகிறார். இந்த தத்துவத்தை எதிர்ப்பவர்கள் இயக்கவியல் கண்ணோட்டத்தில் இந்த பிரச்சனையை அணுகவில்லை என குறிப்பிடுகிறார். பிரெஞ்ச் புரட்சியில் முதலாளிகள், கைவினை ஞர்கள் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக அந்த புரட்சியில் கலந்து கொள்கின்றனர். மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ அழிவுக் குவியலின்மீது உருவாகிறது என்றனர்.
முற்போக்கும்… சுரண்டலும்…
பிரெஞ்சு புரட்சி மற்றும் இங்கிலாந்தில் புரட்சி நடந்த காலத்தில் முதலாளிகள் நிலப்பிரபுத்துவத்தை அழிக்கிற பாத்திரத்தை வகித்த காரணத்தால் அன்றைக்கு அவர்கள் முற்போக்காளர்கள். ஒரு காலத்தில் முற்போக்கு சக்தியாக இருந்த முதலாளிகள் தொழில்வளர்ச்சி ஏற்படும் காலத்தில் சுரண்டு பவர்களாக, முற்போக்கு தன்மை இழந்தவர்களாக மாறுகின்றனர். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் ஒருகட்டத்தில் மாற்றம் ஏற்படும் என பார்க்க வேண்டியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் முதலாளித்துவம் வளர்கின்றபோது முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில் முதலாளிகள் உருவாக்கிய அரசியலமைப்பும், நீதிமன்றமும், நாடாளுமன்றமும் முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. மூலதனமும், உழைப்பும் ஒருமித்த நலனைக் கொண்டது என்பது கற்பனாவாத சோசலிஸ்டுகள் உருவாக்கிய கருத்து. முதலாளிகள் உருவாக்கிய அரசமைப்பும், நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கும் போது எப்படி உபதேசத்தின் மூலம் சோசலிசத்தைக் கொண்டுவர முடியும்?எப்படி கற்பனையில் சமத்துவத்தைக் கொண்டு வர முடியும்?
முதலாளித்துவத்திற்கும், தொழிலாளிகளுக்கும் இடையே நடைபெறும் வர்க்கப் போராட்டத்தின் விளைவுதான் சோசலிசம். முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும், தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும் வரலாற்றின் தவிர்க்க முடியாத நிகழ்வு என மார்க்சும், ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெரிவிக்கின்றனர். எனவே ராபர்ட் ஓவன், செயிண்ட் சைமன், ஃபுயுரியர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கமுடியாது. முதலாளிகளின் நலன் வேறு, தொழிலாளிகளின் நலன் வேறு. ஊதியம் கொடுக்கப் படாத உழைப்பே உபரி மதிப்பு. வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்து, உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறை பற்றிய ரகசியத்தை கண்டறிந்தது மார்க்ஸ் என்பதானால் நாம் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
வர்க்கப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என ஏங்கெல்ஸ் தெரிவிக்கிறார். இத்தகைய கருத்தை முதலாளிகள், தொழிலாளிகள், இரு வர்க்கங்களுக்கிடையேயான மோதல், முதலாளிகள் உரு வாக்கிய அரசு அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் எனவும், தொழிலாளர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிர்மாணிக்கப்படும் சோசலிசம் குறித்தும் விளக்கியுள்ளார். நிறைவாக இத்தகைய தொழிலாளர்களுக்கு பாட்டாளி வர்க்க கருத்தை கொண்டு செல்லவேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மார்க்சிய தத்துவத்திற்கு எதிராக எழுந்த கருத்துகளுக்கு மறுப்புகளையும், பதில்களையும் வழங்கியுள்ளனர். எனவே கற்பனைவாத சோசலிசத்தையும், விஞ்ஞான சோசலிசத்தையும் புரிந்து கொள்ள இந்த நூலை படிப்பதற்கு இந்த உரை உதவியாக இருக்கும்.
இன்று சர்வதேச சிவப்பு புத்தக தினம்
இப்புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com அல்லது 24332424 (அ) 24332924 என்கிற எண்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
நமது நிருபர் பிப்ரவரி 20, 2022