நூல் அறிமுகம்: சு.உமாமகேஸ்வரியின் ‘உரையாடும் வகுப்பறைகள்’ – பேரா.வையவன்

நூல் அறிமுகம்: சு.உமாமகேஸ்வரியின் ‘உரையாடும் வகுப்பறைகள்’ – பேரா.வையவன்




நூல் : உரையாடும் வகுப்பறைகள்
ஆசிரியர்கள் : சு.உமாமகேஸ்வரி
விலை: ரூ.80/-
பக்கம் : 88

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் , (பாரதி புத்தகாலயம்)
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கல்வி குறித்த கற்பித்தல் குறித்த ஏராளமான கட்டுரைகள் நூல்கள் வருகின்றன. அதில் சமீபத்தில் புக்ஸ் ஃபார் சில்ரன் வழியாக உமாமகேஸ்வரி எழுதியுள்ள புத்தகம் ஓர் உயிர் துடிப்பு மிக்க ஆவணம். வகுப்பறை உரையாடல் எவற்றையெல்லாம் சாதிக்கும்? வகுப்பறை உரையாடல் வழியாக என்னவெல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்பதற்கு ஒரு பெரிய சாட்சியம். 88 பக்கம். 24 கட்டுரைகள். அல்லது 24 உரையாடல் நிகழும் களங்கள். காலத்தை கடத்தும் நிற்கும் விசயங்கள் கூட உரையாடல் வழி கல்விப் புலத்திற்கு உள்ளீடாக கிடைத்துள்ளன.

ஆங்கிலத்தில் inclusive என்ற ஒரு சொல்லை அடிக்கடி கேட்க நேர்கிறது. அதற்கு உள்ளடக்கிய அல்லது அனைவரும் உள்ளடக்கிய என்றே பேசியும் எழுதியும் வருகிறோம். ஆசிரியர் உமா சொல்கிறார், “புறக்கணிக்கப்படாத வகுப்புகளுக்கு திட்டமிடுவோம்” என்று அதனை சாதித்தும் காட்டுகிறார். முதல் கட்டுரையில் மட்டுமல்ல. ஒவ்வொரு உரையாடலும் ஒவ்வொரு வகுப்பும் புறக்கணிக்கப்படாத வகுப்பறையாக இருக்கிறது. உமாவிடம் படிக்க கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். குழந்தைகளின் மனதில் இருப்பதை கொட்ட வகுப்பறை வாய்ப்பு தரவில்லை என்றால் அது வகுப்பறை அல்ல.அது பெரும் சிறைச்சாலை என்கிறார். எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பை போகிற போக்கில் சொல்லிக் கொண்டு செல்கிறார். இதற்காகவே அவருக்கு ஓர் டாக்டர் பட்டம் தரலாம்.

இரண்டாவது கட்டுரை “வாய் விட்டுப் படீங்க” . அது ஓர் பரிசோதனை. அந்தப் பரிசோதனை முடிவுகள் அந்த வகுப்பில் அலசப்படுகிறது. இதற்கு முன்பும் கூட வாய் விட்டு வாசிக்க வேண்டும் என்பதன் அவசியம் பேசப்பட்டு இருக்கிறது. பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வரை கல்வி முறையில் அது மைய நீரோட்டமாக கலக்கவில்லை. குழந்தைகளை வகுப்பறையில் உரையாட வைத்தால் டிஸ்லெக்சியா பாதித்த குழந்தையா என்று சந்தேகப்படும் குழந்தையை கூட சிரித்த முகத்துடன் பேச வைக்க முடியும். தண்ணீர் மூன்று நிலைகளை அந்த திவ்யா விளக்கும் தருணம் குழந்தைகள் ஜடப் பொருட்கள் இல்லை என்று நிரூபிக்க போதுமான எடுத்துக்காட்டு. கணக்கு மாணவர்களுக்கு செயல்பாடுகள். பாடல்கள், கணக்கு கதைகள். அறிவியல் பாடத்திற்கோ பட்டிமன்றம் நாடகம். இத்தனை நாட்களாக இவை மொழித் திறன் பயிற்சிகள் என்று மூடநம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு ஒரு பெரிய பாடம் இந்த வகுப்பறை உரையாடல்.

பயிற்சி ஆசிரியர்கள் தான் பள்ளிக் குழந்தைகளிடம் இயல்பாக பேசுவார்கள். நிரந்தரமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தன்முனைப்பு இருக்கும். அவ்வளவாக பேச மாட்டார்கள் என்றால், மாணவர் மைய கற்றல் கற்பித்தல் எங்கிருக்கிறது? இந்த கட்டுரையில் உமாமகேஸ்வரி பேசும் கனமான விசயம். மிக்க தேவை .சின்ன சின்ன பிஞ்சுகளுக்கு வரும் காதல் கடிதங்களை எப்படி அணுக வேண்டும் என்று உமா உரையாடல் வழி புரிய வைக்கும் பாங்கு அற்புதம். ஆறாவது உரையாடலை தொடங்கும் போது உமாமகேஸ்வரி இவ்வாறு தொடங்குகிறார்.” வகுப்பறை சந்தேகங்களால் நிரம்பி வழிகிறது. அதனை சரி செய்யாமல் கடந்து செல்ல நன்கு பயிற்சி பெற்று இருக்கிறோம்” என்பது. இதில் *, கடந்து செல்ல நன்கு பயிற்சி பெற்று இருக்கிறோம்* என்பது மிக மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களில் எத்தனை வகைமை இருக்கிறது. எவ்வளவு தேடுதல் நிரம்பி இருக்கிறது? எவ்வளவு நுட்பம் மிகுந்து காணப்படுகிறது? ஆனால் இவற்றை எப்படி கடந்து போக பெற்றார்கள் ஆசிரியர்கள். ஆனால் ஆசிரியர் உமா அதற்கு நேர் எதிரான பயிற்சி பெற்றவர். அத்தகைய பயிற்சி அனைவரும் பெற வேண்டும். வாசிப்பை நேசிப்போம் என்பதை எடுத்து உரைக்கும் உரையாடல் வகுப்பறை வழியாக குழந்தைகளிடம் புத்தகத்தை கையில் கொடுத்தால் அவர்கள் மட்டுமே படிப்பதில்லை. யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம். இது குழந்தைகளிடம் உயிர் துடிப்போடு உலா வருகிறது. சமூக அங்கீகாரம் பெற தான் செய்ய வேண்டும் என்று தொடங்கும் உரையாடல் வழியாக சங்கர் கௌசல்யா காதல் கொலை வரை நீள்கிறது. அத்தோடு பள்ளி செல்லா குழந்தைகள் வழியில் அலைவது கண்டு மௌனம் காக்காமல் விடுமுறை எடுத்துக் கொண்டும் சரி செய்ய போராடும் மனம். அதே உரையாடலில். பாலின சமத்துவம் இன்மை பற்றி பேசுவதும் தேவையான ஒன்று. தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆங்கிலத்தின் அவசியம் எங்கெல்லாம் எழுகிறது. எங்கே தாய் மொழி வழிக் கல்வி தன்னை தக்க வைத்துக் கொள்ள இயலாமல் தடுமாறுகிறது என்பது ஒரு உரையாடல் பகுதி.

வகுப்பறைக்கு செல்லும் முதல் நாள் முதல் தன் குழந்தைகளை ஆரத்தழுவி அன்பு மிளிர்ந்திட உரையாடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார் உமா. அப்படியான ஆசிரியர் அடுத்த வருடம் தங்களுக்கு வரவில்லை என்ற ஏக்கப் பெரு மூச்சும் அதனை ஒட்டிய வெளிப்பாடுகள் அடுத்த பதிவு. ஒரு வகுப்பறை உயிரோட்டமாக மாற என்ன செய்யலாம். அந்த வகுப்பறையை அவர்கள் வசமே விட்விடுவது. அப்படி என்ன செய்வார்கள் குழந்தைகள்? உமாமகேஸ்வரி அவர்களின் உரையாடும் வகுப்பறை நூலினை படித்துப் பாருங்கள். வாய்ப்புகளை பரவலாக்குவோம் வகுப்பறை மாணவர்கள் தலைவர்களின் தேர்வு பற்றிய உரையாடல். மாணவர் தேர்தலில் அவர் கடைபிடிக்கும் உத்திகள் தனித்துவம். ஆரோக்கியமான ஜனநாயக செயல்பாட்டின் துவக்கம் என்றும் கூறலாம்.

உமாமகேஸ்வரி அடிப்படையில் கணித ஆசிரியர். தான் சார்ந்த கணிதத்தில் கூடுதல் சிரத்தை எடுக்கிறார். அங்கும் அவரது தனித்துவ வகுப்பறை மிளிர்கிறது. மாணவர்கள் இரவு ஏழு மணி இருந்து கற்று செல்ல தயாராக உள்ளனர். அதற்கு என்ன காரணம்? மெல்லிய புன்னகையும் இதமான வார்த்தைகளும் போதும் என்கிறார். எப்படி என்று கேட்போர். மீண்டும் அந்த நூலை தான் வாசிக்க பரிந்துரை செய்ய முடியும். வகுப்பறை நூலக உருவாக்கம். அதனை ஒட்டிய அன்பொழுகும் உரையாடல் நல்ல சமூக மலர் வித்திடும். இதனை இயல்பாக சொல்லிச் செல்கிறார் உமா.
தாய் மொழி வழிக் கல்வியை ஒட்டி ஓர் உரையாடல் நடக்கிறது. முடிவில், ” கண் முன்னே கருகும் குழந்தைகளின் சிந்தனை திறன்… என்ன செய்து மீட்டெடுக்க முடியும்?” உமாவும் சேர்ந்து துயரும் இடம் மிகுந்த வேதனை மிக்கது. புதிய கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களில் உருவாவதில்லை. அது உண்டாக்கும் இடங்கள். மெய்யான சிந்தனை உதிக்கும் இடமே அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாகும் அடிப்படையான இடம். அதனை உமா நிரூபிக்கும் விதம் அற்புதம். போஸ்கோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏன் வேண்டும்? அதை எப்படி செய்வது? அதற்கான மொழி உமாமகேஸ்வரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். புத்தக விமர்சனங்களை எப்படி உருவாக்குவது என்பதற்கு உமா முன்னெடுத்துச் செல்லும் உரையாடல் ஓர் உன்னதம். அது உரையாடல் மட்டும் அல்ல. பெரும் பயிலரங்கம். கல்வியின் ஆழமான அரசியல் எங்குள்ளது? அடிப்படையில் அது வகுப்பறையின் மௌனத்தில் அடங்கியுள்ளது. அது உடைத்தெறியும் செயல்பாடு ஆகச் சிறந்த அரசியல் செயல்பாடு. அதற்கு என்ன செய்யலாம்? வகுப்பறையில் சுதந்திரமாக கற்றல் நடைபெற வேண்டும். இதனையும் தனது உரையாடும் வகுப்பறை வழியாக சாதித்து உள்ளார் உமாமகேஸ்வரி.
ஆண்களும் வயசுக்கு வருவார்கள் என்ற உரையாடல் தொகுப்பு பாலியல் கல்வியின் அவசியத்தை கூறும் ஒரு ஒளிக் கீற்று. பள்ளி சமூகத்தின் ஓர் அங்கம் தானே! சமூகத்தில் நடப்பதை குழந்தைகள் அறிந்து கொள்வதும் அவசியம் தானே! அதற்கு எதேச்சையாக புதிய கல்விக் கொள்கை பற்றிய ஓர் உரையாடல் களமாகிறது வகுப்பறை. அந்த உரையாடலில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளும் போது புதிய கல்விக் கொள்கை விசயத்தில் நம் குழந்தைகளுக்கும் இவ்வளவு கேள்விகள் சந்தேகங்கள் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள பயன்படுகிறது.”பள்ளி ஓர் ஆலயம். ஆசிரியர் அதில் உள்ளுறையும் தெய்வம்” என்று கூறுதல் எளிது. எப்படி என்பதற்கு ஓர் சாட்சியம் காது கொடுத்து கேட்க சி நிமிடங்கள் என்று உரையாடல் தொகுப்பு. நமது ஓய்வு நேரங்களில் உருப்படியான காரியம் செய்தால் குழந்தைகளின் ஏக்கப் பெரு மூச்சையும் எதிர்பார்ப்பையும் ஈடு கட்ட முடியும் என்பதற்கு சாட்சியம் கூறுவது கடைசியாக முன் வைக்கும் உரையாடல். படைப்புகளை ஊக்குவிப்போம் என்ற முழக்கத்துடன் முடிகிறது. அர்த்தமுள்ள உரையாடல் உலகை மாற்றும் என்பதற்கு உமாமகேஸ்வரி அவர்களின் உரையாடும் வகுப்பறை ஓர் சாட்சியம்.
– பேரா வையவன்