சக்திராணியின் கவிதைகள்
‘மனிதம்
***********
எனக்கான உறவொன்றும்
என் நலன் விரும்பவில்லை…
நரைத்த முடியில்…நரைக்காத தெம்பில் நானும் இங்கு வாழுறேன்…
ஆசையா பேச…மனசெல்லாம்
வார்த்தைகள் அடங்கிக் கிடந்தாலும்…
என் மனம் கேட்க ஒருத்தருக்கும்…
மனசில்லை…
போற வழியெல்லாம்…போக்கிடமில்லாம
சுத்துறேன்…போற போக்கில்
என் கதையெல்லாம் உங்கிட்ட நானும்
பொலம்புறேன்…
மடி மீது தூக்கியணைக்க…
உறவு இங்க இல்ல…உறவில்லா
உறவா…உன் அன்பை நானும் நாடுறேன்…
என் மொழி புரிய…உனக்கிங்கே…
உணர்விருப்பதாலே…உன் விரல் இங்கே
என் கன்னம் உரசி கிடக்குதே…
உணர்வால் உறவான நாம்…இனி
உயிராய் ஓர் உறவாய் கொஞ்சம்
அன்பைச் சொல்லி வாழ்ந்து தான் பார்ப்போமே…
மனுசனுக்கும்…விலங்குக்கும்
அன்பு ஒன்று தானு உணர்த்துவோமே…
‘இருக்கை’
************
உனக்காகக் காத்திருக்கும்…
ஒவ்வொரு நொடியும்…
அழகாக இருக்கின்றன…
தூர வருகிறாய் நீ…
துவண்டு நிற்கும் என்னை…
தூக்கி விடுவதற்காய்…
விழி தேடிய காட்சிகள்…
கண் முன்னே…பிம்பங்களாகத்
தெரிகின்றன…என்னை நானே…
சோதித்துக் கொள்கிறேன்…
நடப்பது நிஜமா…என்றே…
மூச்சின் வேகம்…புதுப் புயலாய்
என்னுள் அடிக்க…குளிர்ந்த
பனியில் என் கைவிரல்…நடுங்குகின்றன…
பேசுவதற்காகவே சேர்த்து வைத்த
சொற்கள்…தொண்டைக் குழிக்குள்…
விழுங்கப்படுகின்றன…என்னையும்
அறியாமல்…
தயங்கிய…நடையும்…
தயங்காமல் காட்டிய அன்பும்…
பேருந்தில் இருக்கை தந்தே…
எழுந்த போது முடிவடைந்தது…
– சக்திராணி