நூல் அறிமுகம்: ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் உங்கள் வருங்காலத்தை செதுக்குங்கள் (தமிழில்: சிவதர்ஷினி) – மீ.யூசுப் ஜாகிர்
ஒரு புத்தகம் வாசித்தால் அதிலிருந்து ஒரு புதிய வார்த்தையையாவது புதியதாய் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இந்த பிரபஞ்சத்தில் வாழும் எல்லாருடைய மனதிலும் என்றேனும் சிந்திக்கும் ஒரு விஷயத்தை எல்லாருக்கும் புரியும் படி சில பேரின் கேள்விகளுக்கு நம் அனைவருக்குமான பதிலை தந்திருக்கிறார். டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். இந்திய பதிப்புத்துறையில் முதல்முறையாக ஒரு புத்தகத்தின் தலைப்பு வாசகர்களால் இணையத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டு அதிகபட்ச வாக்குகளின் அடிப்படையில் இந்த தலைப்பு சூட்டப்பட்டிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
முன்னுரையில் இந்த நூல் உருவாக்கத்திற்கான காரணங்களை நமக்கு தெளிவுப்படுத்தி நம் வாழ்க்கையை செதுக்கி கொள்ளும் பதில்களை ஒவ்வொரு சூழ்நிலையோடு தொடர்புடைய கேள்விகளுக்கு விசாலமாக நமக்கு எடுத்துரைக்கிறார். இதில் கேள்வி கேட்டிருக்கும் அனைவரும் நம்மைப்போல சராசரி இளைஞர்களும், மனிதர்களும் தான்.
ஒரு பிரச்சனையை எப்படி கையாளவேண்டும், நமக்கு நடக்கும் அனைத்திலிருந்தும் அனுபவங்களை எப்படி படிக்கவேண்டும். நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்துவது, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி, இந்த சமூகத்தில் தவறு இழைப்பவர்களுக்கு சரியான பதில் கொடுக்க முடியுமா..? ஊழல் இல்லாத அரசியல் சாத்தியமா.? கனவு காண்பது நனவாக எத்தனை அளவு உழைப்பு கொடுக்க வேண்டும். ஆன்மீகம் உண்மையா அறியாமையா..? தலைமைப்பண்பு எப்படியிருக்க வேண்டும். சிறந்த தலைவனாக இருப்பது எப்படி, என்று ஒவ்வொருவரின் தனிப்பட்ட கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு அவருக்கே உரிய அனுபவத்தோடும், ஆற்றலோடும் தெள்ளத்தெளிவாக நமக்கு வார்தைகளினூடே கடத்துகிறார்.
நம் வருங்காலத்தை யாரோ ஒருவர் கையில் உளியை கொடுத்து செதுக்க சொல்லாமல் நம்மை நாமே செதுக்கிக்கொள்வோம். நம்மை மதிப்பீடு செய்யவும், சுயபரிசோதனை செய்து கொள்ளவும் நம்மை விட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்முடைய பலம் என்ன, பலவீனம் என்ன, நாம் செய்யும் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன, நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம், நம்மை சுற்றி இருப்பவர்களோடு எப்படி பழகுகிறோம், இந்த சமுதாயத்திற்கு நம்மால் செய்யப்பட்ட காரியம் என்ன..? என்றெல்லாம் நம்மை நமக்குள் கேள்வி கேட்டுக்கொண்டால் ஒரு வேளை நமது மனமும் சரியான திருப்தியான பதிலை கொடுக்க முடியுமானால் நாம் சரியாகத்தான் பயணிக்கிறோம். எனவே வாய்ப்பு கிடைத்தால் வாசித்து உங்களை நீங்களே செதுக்கி கொள்ளுங்கள். கலாம் ஐயா வழியில் நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நமது இறப்பு சரித்திரமாகட்டும்.
படித்து முடித்தும் கூட பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டிய புத்தகம்.
மீ.யூசுப் ஜாகிர்