அந்திமந்தாரை கவிதை – இரா.கலையரசி
மாலையின் காதலுக்காக
மணத்தை இறுக்கியபடி
காத்துக் கிடக்கிறாள்.
மெல்ல மெல்ல விரியும்
மெல்லியவளின் பூவிதழ்கள்
கண்களைக் களவாடுகிறாள்
தண்டனைகள் பெறாமல்!
இளஞ்சிவப்பில் விரியும் இதழ்கள்
விதைகளை மத்தியில் தேக்கி
வம்ச விருத்தியில் திளைக்கிறாள்.
அந்தியில் அலைபாயும் மனம்
அஞ்சரை மல்லியிடம் அடங்கி
அழகாய்ச் சிறை இருக்கிறது.
ஒரே வண்ணச் சீருடையில்
இயற்கைப் பள்ளிகளில் படிக்கும்
இவர்கள் எந்த வகுப்பினரோ?
சாதிக்கு மறுப்பு தெரிவித்து
ஒரே நிறத்தில் மலர்கின்றனர்
அதுவும் சிவப்பாய்!
மொட்டவிழக் காத்திருக்கும்
என் கண்களை சில நொடிகளில்
ஏமாற்றிவிட்டு மலர்ந்த
குறும்புத்தனத்தை ரசிக்கவே
செய்கிறேன் சிரித்தபடி.
கூட்டமாகவே இருக்கிறீர்கள்!
மாநாடு நடத்துகிறீர்களோ?!
தனித்து வாழும் மனிதனுக்கு
கூட்டத்தோடு வாழும் வலிமையை
வழி எல்லாம் சிதறிக் கிடந்து
சிற்றுரை நிகழ்த்துகிறீர்கள்?
அந்தி சாயும் வேளையில்
அன்பைச் சாய்த்துக் கொண்டு
அடுத்தடுத்து மலரும் நீங்கள்
சாலையின் விளிம்பு மனிதர்கள்
ரசித்து மகிழத்தான்
அந்தியில் மலர்கிறீர்களோ?
ஒத்தையில் நடந்த எனக்கு
ஒத்தாசைக்கு வந்த நீங்கள்
என் நடையை நிறுத்தி
பேசிய வார்த்தைகள்
எனக்கும் உங்களுக்கு மட்டும்
புரிவதே தனி அழகுதான்!