மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம் கட்டுரை- காயத்திரி

மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம் கட்டுரை- காயத்திரி




இன்றைய சமூகத்தில் மனித இனத்தின் மிகப்பெரிய ஆசையே “தான் சிறந்தவன்” என்று கோடிக்கணக்கான மனிதர்களை விட தனக்கான இடத்தை நிரூபிக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. அந்த வார்த்தைக்காக உடல் அளவிலும், மனதளவிலும் நிறைய வேலைகள் மனிதன் செய்ய நினைக்கிறான். இப்படி தன்னைத்தானே செதுக்கும் மனிதர்களை சமூகம் எப்பொழுதும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கும் இந்த உலகிற்கு இது புதிய விஷயமும் இல்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி அடையாளம் என்றுமே இருக்கும். அது அவனுடைய மொழியினால், அவனுடைய இனத்தினால், அவனுடைய மதத்தினால், அவனுடைய பண்பாட்டினால், அவனுடைய கலாச்சாரத்தினால், அவனுடைய உடல் ரீதியான நிறங்களால், அவனுடைய உடல் வடிவமைப்புகளால் என்று பல்வேறு அடையாளங்களில் அவனை வெளிப்படுத்துகிறான். அந்த அடையாளங்களோடு தான் சமூகத்தில் வாழவும் செய்கிறார்கள்.

“எங்கும் பாரடா இப்புவி மக்களை பாரடா உனது மானிட பரப்பை” என்று பாரதிதாசன் குறிப்பிட்டது போல் உலகெங்கும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தில் பல்வேறு வகையான அடையாளங்களை ஒருங்கே சுமந்து கொண்டு வாழும் மனிதன் தனக்கென சூட்டப்பட்ட பெயரின் அடையாளத்தோடு இயங்கி வருகிறான். தனித்தனி அடையாளங்களோடும், தனித்தனி பெயரோடும் இயங்கும் மனிதன் தான் பெற்ற கல்வியறிவினாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களினாலும், தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூக சூழலை ஒட்டியும் தனது தனித்தன்மையை வடிவமைக்கிறான். அப்படி ஒருவருடைய தனித்தன்மையை கட்டமைப்பதில் இன்றைய சூழலில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், மீடியாக்கள் என அனைவரும் மிகப்பெரிய ஆதிக்கத்தை அனைவரும் கூட்டாக செதுக்குகிறார்கள்.

“கர்வம்”என்றுமே மிக அழகான, உயர்வான உணர்வாக என்றுமே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் கர்வத்தோடு வாழ்வது மிகவும் பிடிக்கும். கர்வம் என்றைக்குமே எந்தவொரு தனிப்பட்ட மனிதனையும் அண்ணாந்து பார்க்க வைக்கும். தனிப்பட்ட மனிதனால் எதையும் சாதிக்க முடியும் என்றும், தோல்விகளில் இருந்து மீள முடியும் என்றும், அவை எல்லாம் கடந்தும் அவனுடைய சமூகத்திற்கு உதவ முடியும் என்றும் அவனை நம்பி ஒரு ஊரை ஒப்படைக்கலாம் என்றும் ஒரு அங்கீகாரத்தை வழங்கும் மிகப்பெரிய உணர்வு தான் கர்வம். ஆனால் இன்று அந்த “கர்வம்” என்ற அழகான உணர்வு மறைந்து “அகங்காரம்” என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. “தான்” என்கிற அடையாளத்தை மட்டுமே சிறை போல் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு இது தான் உலகம், இதில் என்னைத் தவிர வேறு யாரும் மேலோங்கி இல்லை என்கிற மாய பிம்பத்தோடு வாழ்ந்து கொள்ள ஆசைப்பட்டு அதனோடு இன்று ஒவ்வொரு நபரும் முட்டி மோதுகிறார்கள். “தான்” என்ற பிம்பத்தோடு மோதி மனதளவில் ஆரோக்கியம் இழந்து, மன அழுத்தத்திற்கு உள்ளாகி மிகப்பெரிய இழப்பை இன்றைய மாணவ சமுதாயம் உருவாக்கிக் கொண்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு மாணவன் தன் மகளை விட நன்றாக படித்தான் என்பதற்காக விஷம் கொடுத்தார் அந்த மாணவியின் தாய். தற்பொழுது அந்த மாணவனும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

பொதுவாக தன்னை விட அதிகமாக மதிப்பெண் எடுக்கும் பொழுது சக மாணவர்களின், பென்சிலை உடைத்து விடுவது, படிக்கும் புத்தகங்களை எடுத்து ஒளித்து வைப்பது, பாடங்களை கவனிக்கும் போது, கவனிக்க விடாமல் கவனத்தை சிதறச் செய்வது என்று செய்வார்கள். தற்பொழுது மதிப்பெண்ணின் தீவிரமும், அதில் “தான்” மட்டும் தான் முதற் மாணவன் என்றும், சிறந்த மாணவி என்றும் அந்த அங்கீகாரப் பெயர் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்றும் நினைக்க ஆரம்பித்து விட்டனர். இதற்காக பல விஷயங்களை செய்ய ஆரம்பித்து பெற்றோரும் சேர்ந்து செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதில் முதன்மையாக தன் குழந்தைகளுக்கு என்று தனித்தன்மையை கட்டமைக்க விதத்தில் பேசவும், செயல்படவும் செய்கிறார்கள்.

தனித்தன்மையை கட்டமைத்தல்:

இன்று அனைத்து பெற்றோர்களும் தன் குழந்தையை யாரும் திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது, இந்த வெளி உலகம் அவனைக் கொண்டாட மட்டுமே செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய பேராசையை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். அவமானம் இல்லாமல் வாழ்வில் வெற்றி இல்லை என்று நம் முன்னோர்களில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பல ஜாம்பவான்கள் கூறுகின்றனர்.

(Pampering) தடவி கொடுத்தல் என்பது வேறு, செல்லம் என்பது வேறு. ஆனால் இன்று அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை தடவிக் கொடுத்து அவர்களை காயத்தின் வலியை உணர விடாமல் தடுக்கின்றனர்.

பெற்றோர்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கு மீறி அளவு கடந்த செலவீனம் இன்று அனைத்து வீடுகளிலும் காண முடிகிறது. எனக்கு தெரிந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் குழந்தைகள் புது வருடப் பிறப்பின் போது ஒரு உறுதி மொழி எடுக்கின்றனர். அதாவது அவர்கள் அனைவரும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் எந்த விதமான பொருளையும் வாங்க மாட்டோம் என்றும், பிராண்டட் பொருட்களை மட்டும் தான் வாங்குவோம் என்று உறுதிமொழி எடுக்கின்றனர். அதற்கு அந்தப் பெற்றோர்கள் அனைவரும் அவர்களது குழந்தைகளின் ஸ்டேட்டஸ் உயர்ந்து இருக்கிறது என்றும், அவர்களது கல்வியறிவு அவர்களை மாற்றி விட்டது என்றும் ஜம்பம் அடித்து பெருமையாக நினைத்து கொண்டனர். இது ஒரு வகையான பொருட்களின் மீது ஒரு ஆதிக்கத்தை ஏற்படுத்துவது. தன்னுடைய பொருள் வேறு எந்த மனிதனிடமும் நான் பார்க்ககூடாது என்கிற மனோபாவம், அந்தப் பொருளை பயன்படுத்தும் தகுதி தனக்கு மட்டுமே உள்ளது என்கிற வெறித்தனத்தை உருவாக்கும் மனோபாவமாக இருக்கும்.

உதாரணமாக கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் அவள் வைத்து இருந்த காலர் டியூன் ரொம்ப பிடித்து வைத்து இருந்தாள். அவளிடம் இருந்த அந்தப் பாடலை அவளது தோழி வாங்கி, அதை அவளது காலர் டியூன் ஆக மாற்றினாள். ஆனால் கல்லூரியில் படிக்கும் அந்தப் பெண்ணோ அவளது காதலனுக்கு வைத்து இருந்த பாடல், அதனால் உடனே அந்தப் பாடலை தோழி மொபைலில் இருந்து அழித்துவிட்டாள். தனக்கென்று வைத்து இருந்த பாடலை வேறு யாரும் என்றால், அவளுக்கு நெருங்கிய நபராக இருந்தால் கூட அதை வைத்துக் கொள்ள உரிமை கிடையாது என்கிற மனோபாவத்தில் இருக்கிறாள்.

இவ்வாறாக இன்றைய மாணவ சமூகம் தன்னைச் சிறந்தவன் என்றும், தன்னிடம் இருப்பது வேறு யாரிடமும் இருக்ககூடாது என்றும் அதற்கு அவனது/அவளது உயிரை விட சிறப்பானவன் என்கிற பிம்பத்தை ஏற்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். இவன் சிறப்பானவன்/சிறப்பானவள் என்கிற எண்ணத்தை பெற்றோர் ஒரு விதையாக போட்டு விடுகின்றனர். இதனால் அவன்/அவள் தன்னுடன் படிக்கும் சகமாணவர்களை விட தன்னை மேலானவர்களாகவும், சிறப்பு மிக்கவனாகவும் கருதிக் கொள்வதால் அவன் /அவள் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு நடவடிக்கையிலும், தன்னுடைய தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் அவனது சொற்களும், செயல்களும், அமைந்து விடுகின்றன. அவன் வயது ஏற ஏற தனித்தன்மையின் குணாம்சமும், தனித்தன்மையின் பரிணாமமும் பல்வேறு வகைகளில் அதிகரிக்கின்றது. தன்னுடைய உணர்வுகளை கூட ஒரு குறிப்பிட்ட வடிவங்களில் மட்டுமே வெளிப்படுத்துவார்கள்.

“தான் சிறந்தவன்” என்பது தன்னுடைய குணநலன்/ குணாம்சத்தை மேம்படுத்தக்கூடிய தன்மையுடையதாக இருக்க வேண்டும். வீண் பிடிவாதமாகவும், வறட்டு ஜம்பமாகவும், முட்டாள்தனமான உணர்வுகளின் வெளிப்பாடாகவோ இருக்ககூடாது. பேஸ்புக், வாட்சப், ட்விட்டர் என்று அதில் அனைவரும் பாராட்ட வேண்டும், ரசிக்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

“சிறந்தவன்” என்ற எண்ணத்தோடு வாழ்வது அழகான விஷயம் தான். ஆனால் நான் மட்டும் தான் சிறந்தவன் என்ற எண்ணம் ஒரு வித மாயதோற்றமே ஒழிய நிஜம் அதுவல்ல, இதைப் புரிந்துகொள்ளுங்கள். பெற்றோர்கள் மிகைப்படுத்தாமல் ஒரு தனித்துவத்தை உங்கள் குழந்தைகளிடம் உருவாக்குங்கள்.

உனது திறமை, பழகும் விதம், குணநலன் இதைப் பொறுத்தே இந்தச் சமூகம் உன்னைக் கொண்டாடும். சமூகத்திற்கு என்றுமே கொண்டாட்டம் பிடிக்கும். அதுவும் மனிதனைக் கொண்டாடுவது என்பது சக மனிதனுக்கு தனி சந்தோசமாக இருக்கும். அதனால் தான் பதவிக்காகவும், நடிப்பின் மீதும் ஒரு தீராக்காதலுடன் பலரும் பயணிக்கின்றனர். இப்படி பயணிப்பவர்கள் எப்பவும் சிறந்தவன் என்கிற அங்கீகாரத்தை அடைய பல மனிதர்களை சம்பாதிப்பார்கள். மனிதக் கூட்டத்தோடு பயணிப்பார்கள். மனிதனை ஒதுக்கமாட்டார்கள். நிறை, குறையுடன் உள்ள மனிதக் கூட்டத்தை தனக்கு என்று சம்பாதிப்பார்கள். அதனால் சிறந்தவன் என்ற வார்த்தையை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். தனித்தீவாக மாறாமல், உங்களுடன் படிக்கும் மாணவர்களுடனும், நண்பர்களுடனும், அக்கம் பக்கத்து வீட்டினருடனும் பழக வேண்டும். அனைத்துப் பொருட்களை பயன்படுத்த தெரிய வேண்டும். அனைத்து வகையான உணவும், தண்ணீரும், காலநிலையும் சேர வேண்டும். அப்படி என்றால் தான் இயற்கையோடு நீ முழுமையாக ஆரோக்கியமாய் இருக்கிறாய் என்று அர்த்தம். என் இளைய தலைமுறையே வாழ்க்கையை மனித சமூகத்துடன் வாழ்ந்து அதில் சிறந்தவன் என்ற பெயரோடு கொண்டாட்டமாக வாழ கற்று கொள்ளுங்கள்

கர்வமாக இரு, ஆனால் அகங்காரமாக இருக்காதே.

– காயத்திரி