Pangai Thamizhanin Kavithaigal 2 பாங்கைத் தமிழனின் கவிதைகள் 2

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




மனிதனே…வா..வா…
***************************
மதங்களால் மனிதம் போச்சே…
மாயமோ உண்மை ஆச்சே!
பேயெலாம் ஆட்சி செய்தே
பிராணனை வாங்கலாச்சே!

மனிதர்கள் ஒன்று சேர
மதியிலா நிலைமை யாச்சே!
மதமது மதுவைப் போலே
மயக்கிடும் தன்மை யாச்சே!

புரிந்திடா மூடர் கூட்டம்
புவிதனில் அதிக மாச்சே!
பிறவியில் மனிதன் தானே
பெருமையாம் புவியின் மீதே!

அறிந்திடா மூடரெல்லாம்
அடித்திங்கே சாகின்றாரே!
தடுத்திட வேண்டும் தோழா
தரணியை ஆள்வோம் வா… வா…!

போவான்… போவான்… 
*****************************
படித்தவன் பாவம் செய்தால்
பாவியாய்ப் போவான் போவான்
பண்பதை கொடுக்கா கல்வி
படித்தென்ன பயனோ சொல்வீர்!

அரசாங்கப் பணியின் வாய்ப்பு
அனைவரும் பெறு வதில்லை;
பெறுவோர்கள் சிலபேர் கூட
சிரமங்கள் கடந்தே தீர்வர்!

மதிப்பெண்ணில் கூடும் குறையும்
படித்திட்டக் கல்வி தன்னில்
கூடுதல் மதிப்பெண் மட்டும்
கொண்டிட்டோர் திறமை இல்லை!

பணிபெறும் வாய்ப்பில் கொஞ்சம்
பள்ளங்கள் மேடு பார்த்தே
நிரவிடல் சமூக நீதி;
நியாயமே யார்க்கும் நன்றே!

அரசாங்கப் பணியில் சேர்வோர்
அனைவர்க்கும் பொதுவாய் ஆவர்;
பணியிலே சேர்ந்தோர் பலரோ
பண்பிலே தவறு கின்றார்!

தன்சாதிப் பார்த்துப் பார்த்து
தன்கடன் தவறிச் செய்வோர்
தரித்திரர் என்று சொல்வோம்
தரங்கெட்ட மனிதர் தம்மை!

சாதியால் ஒன்றாய்ச் சேர்ந்து
நீதியில் தவறு கின்ற
நீசரே அதிகம் என்பேன்
நிதர்சனம் இதுதான் இங்கே!

உழைக்கின்ற மக்கள் ஈயும்
உவர்ப்பான வியர்வை வரியில்
ஊதியம் பெறுவோர் யார்க்கும்
உயர்வென்ன தாழ்வே என்ன?

படித்தவன் பாவம் செய்தால்
போவானே போவான் போவான்
அய்யோ என்றழிந்தே போவான்
பாரதி சாபந் தானே
பலியாக வேண்டாம் தோழா!

ஹிஜாப் என்பது…’       
***********************
அறியா வயதில்
அவளின்
முகம் பார்க்க முடியவில்லையே
என்று
வருத்தப்பட்டதுண்டு….
பிறை நிலவா
முழு நிலவா
தங்கை… தமக்கை
தாய் முகமா?
மேகமென
மறைத்த திரையின் மீது
வருத்தப்பட்டதுண்டு….
அது
கோபமல்ல!
அவள்
முகம் மறைத்த
அந்தத் திரையை
மத அடையாளமென்று
கருதியதே இல்லை!
ஒரு
ஆடையாக மட்டுமே
அறிந்ததுண்டு!
ஒரு
பெண்ணின் ஆடை…
அவ்வளவே தெரியும்!
ஒரு பெண்ணின்
விருப்ப உடையை…
உடையாகப் பார்த்தே
பழகிய தேசம்!
அந்த
உடையின் பெயரை
அறிந்திடக்கூட
ஆர்வம் இல்லை!
அது
ஒரு பெண்ணின் ஆடை!
அவ்வளவே….
அதில் என்ன
ஆராய்ச்சி?
மத ஆராய்ச்சி?
அவளின்
நாகரிக உடையது….
அவளின்
விருப்ப உடை அது….
போ….
போடா…..
சகோதரியை
சங்கடப்படுத்தாதே!
மதத்தைத் தூக்கி
மாக்கடலில் போடு!