Muthal Rayil Payanam Short Story By Kavitha Ramkumar. முதல் ரயில் பயணம் சிறுகதை - கவிதா ராம்குமார்

முதல் ரயில் பயணம் சிறுகதை – கவிதா ராம்குமார்




ரிங் ரிங், ரிங் ரிங் என அலைபேசி அலறியது .

சாப்பிட்டுக்கொண்டிருந்த லாவண்யாவிற்கு தொடர்ந்து மூன்று முறை அலைபேசி அலறியதால் பொறை ஏறிவிட்டது. உணவைப் பரிமாறிக் கொண்டிருந்த லக்ஷ்மணன் தன் உள்ளங்கையை அவளின் தலையில் வைத்து இதமாக தட்டிக் கொடுத்தபடி 

“இரு இரு பொறுமையா உக்காந்து சாப்பிடு வருஷத்துல இன்னிக்கு ஒரு நாள்தான் நான் சமைச்சு உனக்கு  பரிமாறது. அதனால பதற்றப்படாம சாப்பிடு நான் போயி யாருன்னு பார்க்கிறேன்”என்றபடி அலைபேசியை எடுத்த லக்ஷ்மணன். 

“ஹலோ யார்” என்று கேட்டார்.

எதிர்முனையில் இருந்து “நான் ஜெயஸ்ரீ பேசுகிறேன் லாவண்யா இருக்காளா?”என்ற குரல் ஒலித்தது….

“அவள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாள் சற்று பொறுங்கள் இதோ வந்து விடுவாள்” என்று சொல்லி ரிசீவரை கீழே வைத்தார்.

உணவருந்திக் கொண்டிருந்த லாவண்யாவுக்கும் தகவலைச் சொல்லிவிட்டு இனிப்புடன் உணவை முடித்து வைத்தார் லட்சுமணன்…. ரிசீவரை எடுத்த லாவண்யா,”ஹலோ ஜெயஸ்ரீ எப்படி இருக்க?”

மறுமுனையில் இருந்த ஜெயஸ்ரீ, “நான் நலமுடன் இருக்கிறேன் திருமண நாள் வாழ்த்துக்கள்!”என்ற வாழ்த்துக்களுடன் இவர்களது கலகலவென பேச்சு தொடங்கியது …

இருவரும் அலைபேசியில் மறக்க முடியாத நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“லாவண்யா உனக்கு அந்த நாள் ஞாபகம் இருக்கா, நம் கல்லூரிக்கால நண்பன்”என்றாள். கல கல வென சிரித்தவள் ,”மறக்ககூடிய  நிகழ்வா அது. இக்கணம்  நினைத்தால் கூட எனக்கு சிலீர்த்துவிடுகிறது ஸ்ரீ”என்றாள். அன்று நல்ல வெயில், பகுதி நேரக் கல்லூரி என்பதால் மதியம் இரண்டு மணிக்கு முன்னதாகவே முடிந்துவிடும்.

லாவண்யா தனது வீட்டின் அருகாமையில் பேருந்து நிலையம் இருப்பதாலும்,சிறிது நேரம் தாமதம் ஆனாலும் அடுத்தடுத்து தனது கல்லூரிக்கு செல்லும்  பேருந்துகள்  கிடைப்பதால் எப்பொழுதும் அவள் பேருந்தில் பயணிப்பது வழக்கம்.

ஒரு சமயம்  ஜெயஸ்ரீ வகுப்பு நேர இடைவேளையின்போது தான் எப்பொழுதும் ரயில்பயணத்தையே அதிகம் விரும்புவதும்,அதன் அனுபவங்கள் மிக சுவாரசியமாக இருப்பதைப் பற்றியும்  லாவண்யாவிடம் சொல்லிக்கொண்டுயிருந்தாள் .

இடைவேளை முடிந்து வகுப்புகள் ஆரம்பித்தது. லாவண்யாவால் பாடங்களை கவனிக்கமுடியவில்லை,அவளின் சிந்தனை முழுவதும் ரயில் பயணங்கள் மீதே இருந்தது …. 

“வீட்டில் இருந்து ரயில் நிலையத்துக்கு சொல்வதென்றால் குறைந்த பட்சம் இருபது நிமிடங்கள் ஆகிவிடுமே”என்ன செய்வது என குழம்பிக் கொண்டே இருந்தவள், இன்று ஜெய ஸ்ரீ வுடன் ரயிலில் பயணிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். 

கல்லூரி நேரம் முடிந்ததும்,அவளின் நடை ஸ்ரீ உடன் ரயில் நிலையத்தை நோக்கி சென்றது…..புத்தாண்டு முந்தைய நாள் என்பதாலும்,பகுதி நேரக்கல்லூரி என்பதாலும்  பயணிகள் மற்றும் மாணவர்களின் கூட்டம் வருவதும்,செல்வதுமாக  அலைமோதியிருந்தனர்.

மாணவர்கள் அனைத்து பிளாட்பாரத்திலும் நிறைந்திருந்தனர்…. அதீத உற்சாகத்தோடு கைகளை அசைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு இருந்தனர்…. 

லாவண்யாவின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை… முதல்முதலாக ரயில் நிலையத்திற்கு வந்தவளுக்கு இவளையே அனைவரும் வரவேற்பது போல் இவளது கண்களில் காட்சிகள் நிரம்பி வழிந்திருந்தது…. 

பிளாட்பாரம் எண் மூன்றில் இருந்த தொடர்வண்டியானது ரயில் நிலையத்தை விட்டு செல்லுகையில்  அப்போது பிளாட்பாரம் எண் இரண்டில் இருந்த லாவன்யா மிகுந்த சத்தத்துடன் தனது வலது கைகளை உயர்த்தி “பாய் டாட்டா” என அசைக்க  ஸ்ரீ “ஏய் லாவண்யா என்ன பன்ற அமைதியா இரு” என அவளை பிடித்து அத்தட்ட சிறு குழத்தைப்போல் “அய்யய்யோ”என அமைதியானாள். இருவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு அன்று நடந்தது.

“லாவண்யா அங்க பாரு”என ஸ்ரீ அவளின் தோளைப் பிடித்து அசைக்க இருவராலும் அதை நம்ப முடியவில்லை தொடர்வண்டி கிளம்புகையில் தான் பாய்,டாட்டா என கையசைத்த அதே மாணவர்கள், இவர்களை நோக்கி வருவதை உணர்ந்தனர் ….

இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு ஓடுகையில் இருவரையும் சுற்றிவளைத்தனர் அந்த மாணவர்கள். ஒன்றும் புரியாமல் இருவரும் திகைத்து போனார்கள்.

கும்பலில் இருந்த ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நாங்களும் மாணவர்கள்தான்  பதட்டப்படாதீர்கள் எனக் கூறினான்.  ஜெயஸ்ரீயும், லாவண்யாவும்  பெருமூச்சு விட்டனர்…. 

“உங்கள பாத்து நாங்க ஏன் பயப்படணும்” என்று  தனக்குத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டு பதில் கூறினாள் லாவண்யா…

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் தைரியமாக  “என் பெயர் லட்சுமணன் ,நாம் அனைவரும் நண்பர்கள் ஆகலாமா” என கேட்டான்….

“ஏற்கனவே இருந்த அதிர்ச்சியில் இன்னுமொரு அதிர்ச்சியா” என நினைத்துக் கொண்ட ஜெயஸ்ரீ லாவண்யாவை பார்க்க இருவரும் நண்பர்கள் ஆகலாம் என ஒப்புக் கொண்டனர்…. அனைவரும் சேர்ந்து தொடர்வண்டியில் பயணித்தனர்…. 

முதல் ரயில் பயணம் மறக்கக் கூடியதல்ல…… இன்றுவரை லாவண்யா உடன் லக்ஷ்மணன் பயணித்துக் கொண்டிருக்கிறார்….

Engirundho Oru Kural Poem by Williams எங்கிருந்தோ ஒரு குரல் கவிதை - வில்லியம்ஸ்

எங்கிருந்தோ ஒரு குரல் கவிதை – வில்லியம்ஸ்




அகவை இருபதிருக்கும்
அப்போது ஆசை வந்தது
மீசை வந்தது
கன்னத்தில் பருக்கள் வந்தன
கண்டிப்பாய் காதல் வந்தது
காதலுடன் கவிதையும் வந்தது
உடலின் சுரப்பிகள்
உசுப்பி விட
இதயத்தின் ஆழத்திலிருந்து
எழுந்து வந்த இளமை
விழிகள் வழியே காதலாகவும்
விரல்கள் வழியே
கவிதைகளாகவும்
உருகி உருகி
பெருக்கெடுத்தோடியது
பின்னாலிருந்து
அசரீரி போலொரு குரல்
ஆவணக் கொலை
அறிவாயா தம்பி..

கனவு பழுத்து
கல்யாணமாய் கனிந்து
மகிழ்ச்சியின் வண்ணம்
மத்தாப்பாய் விரிய
குடும்பத் தோட்டத்தில்
குழந்தைகள் பூத்தன
அந்தி மழையாய்
ஆனந்தம் பொழிய
சிந்து கவிகள் சிந்தையில்
எழுந்தன
மழலைகளை கையில்
தவழவிட்ட மனைவி
மாட விளக்காய் வீடு நிறைத்தாள்
வாய்க்கு ருசியாக
வடித்துக் கொட்டியதில்
பித்தம் தலைக்கேறி
சந்தோஷம் ஜதி போட
சந்தங்கள் சதிராட
அந்தாதிகள் கிளம்பி
அருவி போல் கொட்டின
அப்போதும் ஒரு குரல்
அருகில் வந்து கேட்டது
அடுப்பங்கரை சிறைக்குள்
ஆயுள் கைதியாய்
அடைபட்டு கிடக்கும்
மனைவியை விடுவிக்கும்
பரணியை எப்போது
பாடப் போகிறாய்.

தாராளமாய் செலவு செய்து
வாழ்வின் தேவைகளை
வாங்கிக் குவித்தாயிற்று
மாடி வீடு மகிழுந்து
ஆளுக்கொருஅலைபேசி
வாசனைத் திரவியங்கள் என
ஆளே மாறி
அடையாளம் தொலைத்தாயிற்று
நினைத்த போது படுத்து
விரும்பிய போது எழும்
வசதியான வாழ்வு
மடிக்கணினியில் நீள் கவிதை
அலைபேசியில் ஹைகூ
ஒளிப்படங்களோடு
தினமொரு‌ பதிவு
பண்டமாற்று முறையில்
பாராட்டுக்கள் பரிமாறி
படைப்பாளியென்ற
பட்டியலில் இணைந்தாயிற்று
மீண்டும் அதே குரல்
ஆணவம் மிதித்து அநீதி அழித்து
மானுடம் மீட்கும்
மகத்தான போரின்
வீர முழக்கத்தை
யோசித்து எழுத மாட்டாயா..