நூல் விமர்சனம்: அப்டன் சிங்க்ளரின் காங்கிரீட் காடு (The Jungle) | தமிழில்: ச.சுப்பாராவ் – சுரேஷ் இசக்கிபாண்டி
நூல்: காங்கிரீட் காடு
ஆசிரியர்: அப்டன் சிங்க்ளர்
தமிழில்: ச.சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கம்: 352
விலை: 252
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.. thamizhbooks.com
எப்போதும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு நிறைவாகவும், பசுமையாகவும் தெரியும் காடுகள்தான், எளிமையான, ஏதுமற்ற அப்பாவி விலங்கினங்களுக்கு எதிரியாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காடாகத்தான் இந்த காங்கிரீட் காடு நூல் உங்கள் முன் காட்சியளிக்கும் என நம்புகிறேன். அப்படிப்பட்ட பசுமையும், அழகும் முகப்பு தோற்றத்தில் மட்டுமே இருக்கும் பல்வேறு காங்கிரீட் காடான தொழிற்சாலைகளில் சிக்குண்டு, முதலாளித்துவத்தின் லாபவெறிக்காக தன்னையே அறியாமல் அர்ப்பணிக்கிற எளிய மக்களின் வாழ்வை பேசும், பேசுவதோடு மட்டுமில்லாது அரசியல், சித்தாந்த மாற்ற எண்ணத்தை விதைக்கும் நாவல் இது.
காங்கிரீட் காடு (The Jungle) என்பது 1906 ஆம் ஆண்டு அமெரிக்க பத்திரிகையாளரும், நாவலாசிரியருமான அப்டன் சிங்க்ளர் (Upton Sinclair) எழுதிய நாவல் ஆகும். சிகாகோ, நியூயார்க், பாஸ்டன் மற்றும் இதே போன்ற தொழில்மயமான நகரங்களில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியால் சிதைவுக்குள்ளான குடும்பங்களில் இருந்து வந்து குடியேறியவர்களின் கடுமையான குடும்ப சூழ்நிலைகள் மற்றும் சுரண்டப்பட்ட வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது. இறைச்சித் தொழில் மற்றும் அதன் வேலை நிலைமைகளை விவரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி விடாத ஆசிரியர் சிங்க்ளரின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் சோசலிசத்தை முன்னெடுப்பதாக இருந்தது.
இருப்பினும், பெரும்பாலான வாசகர்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க இறைச்சி தொழிற்சாலைகளில் இருக்கிற சுகாதார மீறல்கள் மற்றும் சுகாதாரமற்ற நடைமுறைகளை அம்பலப்படுத்தும் பல பத்திகளில் அதிக அக்கறை கொண்டிருந்தனர். இதன் காரணமாக அமெரிக்காவில் உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் இறைச்சி ஆய்வு சட்டம் உட்பட சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்த ஒரு பொது மக்களின் கூக்குரலுக்கு பெரிதும் பங்களித்தது. இதுபற்றி இந்நாவலின் ஆசிரியர் சிங்க்ளர் சிலர் பேசுகையில், ‘நான் பொதுமக்களின் இதயத்தை இலக்காகக் வைத்து இந்நாவலை எழுதி கொண்டிருந்தேன், ஆனால் தற்செயலாக நான் அதை வயிற்றில் அடித்தேன்’ என்கிறார்.
இந்த புத்தகம் தொழிலாள வர்க்க வறுமை, சமூக ஆதரவுகள் இல்லாமை, கடுமையான மற்றும் விரும்பத்தகாத வாழ்க்கை, வேலை நிலைமைகள் மற்றும் பல தொழிலாளர்களிடையே நம்பிக்கையின்மை ஆகியவற்றை சித்தரிக்கிறது. இந்த கூறுபாடுகள் அதிகாரத்தில் உள்ள மக்களின் ஆழமாக வேரூன்றியுள்ள ஊழலுடன் முரண்படுகின்றன.
எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் சோசலிச அரசியல் செயற்பாட்டாளராக செயல்பட்ட சிங்க்ளர், முக்ரேக்கர் எனப்படுகிற முதல் உலப்போருக்குப் முந்தைய காலகட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் அரசு மற்றும் வணிக நிறுவனங்களின் ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் எழுத்தாளர் குழுவில் ஒருவராக கருதப்பட்டார். 1904 இல், சிங்க்ளர் ஏழு வாரங்கள் சிகாகோ ஸ்டாக்யார்டுகளின் இறைச்சி ஆலைகளில் மறைந்திருந்து ஒரு தொழிலாளியை போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டே, சோசலிச செய்தித்தாளான அப்பீல் டு ரீசனுக்காக தகவல்களைச் சேகரித்தார். அவர் முதன்முதலில் இந்த நாவலை 1905 இல் தொடர் வடிவத்தில் அப்பீல் டு ரீசன் செய்தித்தாளில் வெளியிட்டார், மேலும் இது 1906 இல் டபுள்டே என்னும் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
நாஜி கட்சி மற்றும் ஹிட்லரால் உலகத்திற்கு வரப்போகும் அபாயங்களை முன்னுணர்ந்து, ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது பற்றி அவர் எழுதிய ‘டிராகன்ஸ் டீத்’ என்ற நாவலுக்கு 1943ல் புலிட்சர் பரிசு கிடைத்தது. இப்போது இந்நூலின் மொழிபெயர்ப்பு குறித்து பேசியே ஆகவேண்டும், நான் இதுவரையில் வாசித்த மொழியாக்க புத்தகங்களில் சிறந்த மொழிபெயர்ப்பு புத்தகம் இதுவே. தமிழ்மொழியின் எளிய நடையில் மொழிபெயர்த்து தமிழ் சமூகத்துக்கு வழங்கிய தோழர். ச. சுப்பாராவ்-க்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
நாவலின் நாயகன் லித்துவேனியா நாட்டை சேர்ந்த யூர்கிஸ் ருட்குஸ், தனது பதினைந்து வயது காதலி ஓனா லுகோஸ்ஜைடை அவர்களது பாரம்பரிய லித்துவேனிய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் அவர்களும் அவர்களின் 12 பேர் கொண்ட குடும்பமும் லித்துவேனியாவில் இருந்து (பின்னர் ரஷ்ய பேரரசின் ஒரு பகுதி இருந்தது) பணவீக்கத்தால் ஏற்பட்ட வாழ்வாதார கஷ்டம் காரணமாக அமெரிக்காவின் சிகாகோவுக்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் சுதந்திரம் மற்றும் அதிக ஊதியங்களை வழங்குகிறது என்கிற அமெரிக்கா ஒரு சொர்க்கபுரி என்று அவர்களின் நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டு கனவுலகத்தில் வாழும் நாளை எதிர்நோக்கியுள்ளனர். இப்படியான கனவு மேதைமை எண்ணம் இன்றும் நமது தமிழ் சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கிறது.
சிகாகோ நகருக்கான அவர்களது பயணத்தில் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதி பணத்தை இழந்திருந்தாலும், பின்னர் திருமணத்திற்கு பணம் சேர்க்க வேண்டிய சூழ்நிலையிலிருந்தாலும் – ஒரு நெரிசலான தங்கும் இல்லத்திற்கு வந்த ஏமாற்றம் இருந்தபோதிலும் – யூர்கிஸ் ஆரம்பத்தில் சிகாகோவில் தனது வாய்ப்புகளைப் பற்றி நம்பிக்கையுடன் மனைவி ஓனாவிடம், ”குட்டிம்மா, கவலைப்படாதா, இது எல்லாம் ஒரு பெரிய விசயமல்ல, நான் முன்னைவிட இன்னும் கடினமா வேல பாக்குறேன்” என்று தனது புஜபலத்தின் மீது நம்பிக்கை கொண்டு குடும்பத்தினர் அனைவர்க்கும் உத்வேகம் அளிக்கிறான். அவனது இளமையான மற்றும் வலுவான உடலால், அங்கு வேலைக்காக காத்திருந்த நலிந்து, ஒடுங்கிப்போன மக்களிடையே அவனுக்கு மட்டும் வேலை உடனே கிடைக்கிறது. அது மற்றவர்களுக்கு துரதிர்ஷ்டம் என அவனே நினைத்து கொள்கிறான். அவர் விரைவாக ஒரு இறைச்சி தொழிற்சாலை பணியமர்த்தப்படுகிறார்; மிருகங்களின் கொடூரமான நடத்தையைக் காணும்போது கூட, அதன் திறமையைக் கண்டு அவர் ஆச்சரியப்படுகிறார்.
அங்கு கன்வெயரில் வரும் பன்றி மற்றும் மாடுகளின் உடலை வெட்டி இறைச்சியை எடுப்பதற்காக பல கைகள் அங்கு காத்திருக்கும். அந்த கைகளுக்கு அந்த விலங்கினங்கள் காசநோய் உள்ளிட்டு எந்த நோய் தொற்றும் உள்ளாய் இருக்கிறதா என்பதெல்லாம் தெரியாது அவர்களது வேளையிலே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். கிட்டத்தட்ட பனிரெண்டு மணிநேரத்திற்கு மேலாக அவர்கள் அந்த தொழிற்சாலை கட்டிடங்களுக்குள் இருந்து சூரிய வெளிச்சத்தையே பார்த்திராத ஒரு அரியவகை மனிதர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்ட அளவு உடலில் பலவீனத்தை இருந்தாலோ உடனடியாக மேற்பார்வையாளர் அவர்களை வேலையிலிருந்து நீக்குவார். இந்த நிலையில் அவனுக்கு இறைச்சிப் போக இதர கழிவுகளை குழியில் தள்ளி விடுவதற்கான வேலை கிடைக்கிறது. அவனுக்கும் தினமும் இரண்டு டாலர் அளவிற்கு ஊதியம் கிடைக்கிறது.
தனது குடும்பத்துடன் சந்தோஷத்தில் பகிர்ந்து கொள்கிறான். பின்னர் அடுத்தடுத்த நாளில் அவர்களது குடும்பத்தில் மூவருக்கு வேலை கிடைக்கிறது ஆகையால் அவர்கள் அவர்களது நண்பனின் வாடகை மேன்ஷனில் இருந்து, தாங்கள் பார்த்த விளம்பரத்தின் மூலம் சொந்தமாக ஒரு வீடு பார்ப்பதற்கு தயாராகிறார்கள். அப்போது அவர்களுக்கு தெரியாது இந்த நகர வாழ்க்கையை நமக்கு சம்பளத்தை கொட்டிக் கொடுக்கிறது என்றால் அதை இன்னொரு வகையில் பிடிங்கிக் கொள்ளும் என்று…
அதனால் அவர்களுக்கு அதிக அளவில் கூலி கொடுக்கப்பட்டாலும், அதே அளவிற்கு செலவுகள் அங்கு காத்திருக்கும். ஆகையால் அவர்கள் மற்ற நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு போல அவர்கள் என்றென்றும் ஏழையாக இருப்பர் என்பதை அறியாத வண்ணமே அவர்களது அன்றாட பயணம் இருந்தது.
நான்கு அறைகள் கொண்ட வீட்டில் விளம்பரத்தைக் கண்டு ஆசை கொண்ட குடும்பத்தினர் லிதுவனிய நண்பனின் வழிகாட்டுதல் மூலமாக ஒரு ரியல் எஸ்டேட் முகவரின் சாதுரியமான மற்றும் அமைதியான பேச்சை கேட்டு வீட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பின்னர் அந்த வீட்டிற்கு அவர்கள் கட்டும் தொகையோடு சேர்த்து வட்டியும் கட்ட வேண்டிம், வட்டியை கட்ட முடியாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறும் நிலை இருப்பதாக அண்டைவீட்டாரின் மூலம் அறிந்து கொண்டு செலவுகளைச் சமாளிக்க, ஓனா மற்றும் 13வயது ஸ்டானிஸ்லோவாஸ் (குடும்பம் பள்ளிக்கு அனுப்ப விரும்பியவர்கள்) வேலைசெய்ய வேண்டும் என்கிற எடுக்கப்படுகிறது. நோய் அடிக்கடி அவர்களுக்கு வரும் போது, அவர்கள் வேலை செய்யாமல் இருக்க முடியாது. அந்த குளிர்காலத்தில், யூர்கிஸின் தந்தை, ரசாயனங்கள் அதிகமாக இருக்கும் இறைச்சி சேமிக்கும் அறையில் வேதியியல் பொருட்களால் பாதிக்கப்பட்டு பலவீனம் அடைந்து இறுதியில் நோயால் இறக்கிறார்.
எனினும் அவர்களது குடும்பத்தில் இசைக்கலைஞன் வருகை, யூர்கிஸ் மற்றும் ஓனாவின் முதல் குழந்தை பிறப்பு ஆகியவற்றால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படுகிறது. ஆனாலும் குழந்தை பிறந்த அடுத்த வாரத்திலேயே ஓனா வேலைக்கு செல்ல வேண்டும் என்ற துன்பகர நிலையுடனே அனுதினமும் பயணிக்கிறார்கள். இந்நிலையில் பலவீனமடைந்த சக தொழிலாளிகள் ஏதோ காரணத்தைக் கூறி வேலையை விட்டு நிறுத்துகிறது. இதனைக் கண்டு மனமுடைந்த நாயகன் பின்னர் அவனும் தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பிக்கின்றான். அவனது குடும்பத்தினரையும் சங்கத்தில் இணைகிறான். அதற்கிடையில் அவனுக்கு ஏற்படும் விபத்து, அதனால் அவனது மனதளவில் ஏற்பட்ட வலி கோவமாக மாறன் அதுவரையில் அன்பாக அனைவரும் பேசிக் கொண்டிருந்த அவன் மிக கொடியவனாக அனைவருக்கும் காட்சி அளிக்கக் கூடிய வகையில் இருக்கிறான். அதன் பின்னர் குடும்பத்தினை தாங்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு மரிஜா, எலிசபெத், மற்றும் ஓனா தலையில் விழுகிறது.
காயத்திலிருந்து மீண்ட பிறகு, யூர்கிஸ் ஒரு உர ஆலையில் விரும்பத்தக்க வேலையைப் பெறுகிறார். துன்பத்தில், அவர் மது குடிக்கத் தொடங்குகிறார். பல இரவுகளில் தனது கர்ப்பிணி மனைவி வீடு திரும்பாததால் அவர் சந்தேகம் அடைந்தார். அவளது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பணிநீக்கம் செய்து கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதாக அச்சுறுத்தியதன் மூலம், அவர் அவளை தொடர்ந்து பாலியல் உறவிற்கு வலுக்கட்டாயப்படுத்துகிறார். ஓனா இறுதியில் தனது மேற்பார்வையாளன், பில் கானர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கணவனிடம் ஒப்புக்கொள்கிறார். குடும்பத்தினரைக் காப்பாற்ற மனைவி எடுக்கும் முடிவு. மனைவியின் காதலைப் புரிந்து கொள்ளாத கணவன், அவளை வெறுத்து அந்த நிலைக்கு ஆளாக்கிய தொழிற்சாலையின் மேலாளரை கடுமையாக தாக்குகிறான்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட நீதிமன்றம் அவனுக்கு சிறை தண்டனை விதிக்கிறது. பின்னர் சிறையிலிருந்து விடுதலையாகி, வந்த போது வீடு இன்னொரு குடும்பத்திற்கு விற்கப்பட்டு இருந்தது. அவரது குடும்பமும் கடுமையான வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்தது, இரண்டாவது குழந்தை பிறக்கும் தருவாயில் வறுமை, மனைவி ஓனாவையும் குழந்தையையும் கொல்கிறது. பரதேசியாக அலையும் அவர் பின்னர் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்று ஒரு போலந்து நாட்டைச் சேர்ந்த சோசலிஸ்ட் நண்பர், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவருடன் அவரது வாழ்க்கை மற்றும் சோசலிசம் பற்றி உரையாகிறார்.
யூர்கிஸ் ஓனாவின் சிற்றன்னை வீட்டிற்குத் திரும்பி சென்று, அவளையும் சோசலிச பாதைக்கு அழைத்து வருகிறார்; வேலை தேடுவதற்கு அவனது செயல் குடும்பத்தில் மீதம் இருப்பவர்களை காப்பாற்றுவதற்கான வழியாக இருப்பதால், போதை அடிமையிலிருந்து வெளிவர அவள் சமாதானமாகச் செல்கிறாள். சோசலிஸ்ட் கட்சியின் மாநில அமைப்பாளரால் நடத்தப்படும் ஒரு சிறிய ஹோட்டலில் அவர் வேலை பார்க்கிறார். ஜுர்கிஸ் தனது வாழ்க்கையை எப்படி சோசலிசத்திற்காக அர்ப்பணித்தார் என்பதுவே மீதி கதை.
வாசிப்போருக்கு, நகர்ப்புற ஆடம்பர வாழ்க்கைக்காக காணும் கனவு, காதல், பசி, வறுமை, அரசிற்குள் புதைந்து இருக்கும் ஊழல், இரக்கமற்ற முதலாளித்துவம், சுயநல விரும்பிகள் நடுவே முளைக்கும் மனிதாபிமானம், புதுமையான வாழ்க்கை நோக்கி அழைக்கும் சோசலிச பாதை குறித்தான புரிதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
நன்றி….