Urakkathai Thedi Kavithai By Sakthi உறக்கத்தை தேடி....!!! கவிதை - சக்தி

உறக்கத்தை தேடி….!!! கவிதை – சக்தி




யார்
களவாடிப்போனது
என் உறக்கத்தை?
எப்படிக்
களவாடப்பட்டது
என் உறக்கம்?
எப்போது
களவாடப்பட்டது?
எதுவும் தெரியவில்லை
கதவு
உள்புறமாகப் பூட்டப்பட்டுள்ளது
சன்னல்களும்
சாத்தப்பட்டிருக்கின்றன

மெதுவாய்க்
கதவைத் திறந்து
வெளியே
வந்து பார்க்கிறேன்,
நட்சத்திரங்கள்
மேகங்களுக்குள்
மறைந்து
தூங்கிக்கொண்டிருக்கின்றன,
செடிகளில்
மாலையில்
மலர்ந்த பூக்கள்
இலைகளின் மீது
தலைவைத்துத்
தூங்கிக்கொண்டிருக்கின்றன,
எப்போதேனும்
குரைக்கும்
எதிர்வீட்டு நாயும்
தூங்கிக்கொண்டிருக்கிறது
உடலுக்குள் தலைவைத்து

வேறு
எந்த அறையிலாவது
ஒளிந்திருக்கிறதா
என
வீட்டுக்குள் வந்து
குளியலறை
சமையலறை
பூஜையறை
என
எல்லா அறைகளிலும்
தேடிப்பார்த்தேன்
கிடைக்கவில்லை

இன்று
படித்த புத்தகங்களின்
எழுத்துக்களுக்குள்
விழுந்து தொலைந்ததா
என
வாசித்த
புத்தகங்களையெல்லாம்
அவசர
அவசரமாய்ப்
புரட்டிப்பார்த்தேன்
அகப்படவில்லை

ஊருக்குச்
சென்றுவிட்டதா
என
வீட்டுக்கு
அலைபேசியில் போனேன்
அலைபேசியின்
அலறலைக் கேட்காமல்
எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள்,

புகார் தெரிவித்தால்
கட்டாயம் கண்டுபிடித்துத் தருவார்களென
இருபத்து நான்கு மணி
நேரக்காவல் நிலையம் சென்றால்
வெளிச்சமாய் விளக்குகளைப் போட்டுவைத்துவிட்டு
காவலர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள்,

சோர்ந்துபோய்
வீட்டுக்குத் திரும்பி
படுக்கையில்
படுத்தபடி யோசிக்கிறேன்
யார் களவாடியது தூக்கத்தை?
எங்கே தொலைந்து போனது தூக்கம்?
கண்டேபிடிக்கமுடியவில்லை,

களவாடப்பட்ட
தூக்கத்தையோ
அல்லது
தொலைந்த தூக்கத்தையோ
கண்டுபிடித்தல்
அவ்வளவு
சுலபமான காரியம் அல்ல,