தங்கேஸ்வரன் கவிதைகள்



உருகவைக்கும் எழுத்து
ஒரு கவிதையாகிறது
அதன் செல்கள் முழுவதும்
நீ தான் நிரம்பிக் கொண்டிருக்கிறாய்

பற்களை கிட்டிக்க வைக்கும்
பொருளாதாரச்சுமையை மீறி
அது நம்மை புன்னகைக்க வைக்கிறது

சாதி நகம் கொண்டு
இரத்தம் வரக் கீறும்
இந்த சமூகத்தின் வன்முறையிலிருந்து
சற்று நேரம் அது நம்மை
பாதுகாக்கிறது

நான் ராஜ குமாரனாகிறேன்
நீ யுவராணி
மலர்கள் அட்சதையாக தூவப்படும்
மாடவீதிகளில் பவனி வருகிறது
நமது தேர்

சட்டென்று
இந்த கற்பனை வேண்டாமென்று
சொல்கிறது நம் இதயம்
நாம் அதன் பேச்சை கேட்கிறோம்

நான் உனக்காக
புதியதொரு வானத்தை திறக்கிறேன்
இப்போது
நாம் இருவரும் பறவைகள்

பறக்க பறக்க பரவசம்
எட்டாத தொலைவினில்
எண்ணித் தொலையாத சுகம்
விழிகளை மூடிக் கொண்டு
இப்படியே சிறகடிப்பை நிறுத்திவிட்டால்
நாம் தான் மிதக்கும் சொர்க்கம் ஆவோம்

புளித்த கூழுக்கு
உரித்த வெங்காயம்போல்
அத்தனை சுவையாக இருக்கிறது
இந்த நிமிடம்

குறிப்பாக இன்று மாதத்தின் முதல் தேதி
இங்கே வீட்டு வாடகை கேட்பதற்கும்
ஆள் வரப்போவதில்லை
என்று நினைக்கும் போது
பேசாமல் இங்கே இந்தக்கவிதையிலே
வாழ்ந்து விடலாமென்று
சத்தியமாக தோன்றுகிறது
நம் இருவருக்கும்