புத்தகம் – வ. பூப்பாண்டி
“என்னை நேசியுங்கள்”
அனைவருக்கும் வணக்கம். நான் தான் புத்தகம். இந்தக் கட்டுரை மூலம் உங்களிடம் சில நிமிடம் பேசுவதற்கு வந்துள்ளேன். ஆமாம் நண்பர்களே புத்தகமாகிய என்னைப் பற்றியும் பற்பல தகவல்களையும் உங்களிடம் நான் கூற இருக்கிறேன்.
“இதயம் உருவானது துடிப்பதற்கு; மூளை உருவானது சிந்திப்பதற்கு; கண்கள் உருவானது படிப்பதற்கு” என்னும் எனது சொந்த வரியை முன்வைத்து துவங்குகிறேன் நண்பா.
நான் புத்தகம்:
புத்தகம் என்பது நான்கு காகிதங்களை இணைத்து, நான்கு எழுத்துகளை அடைத்து வைப்பதல்ல. உனக்கு தெரிந்ததையும் எனக்குத் தெரியாததையும் நமக்கு முன்னர் இருந்தவர் சொல்லிவிட்டுப் போன முறையில் தயாரித்து நமக்குப் பிறகு வரும் தலைமுறைக்குத் தருவது புத்தகம். சிரிப்பதையும் அழுவதையும் கருணையையும் கோபத்தையும் உணர்ச்சியையும் எழுத்தாகக் கொண்டது புத்தகம். சிந்தனையைத் தூண்டுவதும் புத்தகம். கவிதையையும் கதையையும் கட்டுரையையும் பலரது கற்பனைகளையும் சுமந்து செல்வது புத்தகம்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் என அனைவரின் கைகளிலும் நான். பள்ளி முதல் இல்லம்வரை பற்பல இடங்களிலும் நான். அக்காலம் முதல் இக்காலம் வரை பரவிக் காணப்படுவதும் நான். இப்படி எல்லா இடங்களிலும் நான் நான் நான். கற்காலத்தில் கல்வடிவில் இருந்ததும் இடைக்காலத்தில் ஓலை வடிவில்; இருந்ததும் தற்காலத்தில் காகித வடிவில் இருப்பதும் நான். எழுதுவது எழுத்தாளர்களின் கடமை, அவற்றை சுமப்பது புத்தகமாகிய எனது கடமை. என்னைப் படிப்பது உங்கள் கடமை.
எனது வரலாறு:
பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சுமப்பவனாகிய நான், எனது வரலாற்றைச் சொல்கிறேன், கேளுங்கள் நண்பர்களே. புத்தகம் இன்று உங்கள் கைகளில் இருப்பதால் அதன் அருமை உங்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புத்தகம் இன்றைய வடிவத்திற்கு வந்தடைவதற்கு வரலாற்றில் எவ்வளவு இன்னல்களை சந்தித்து வந்துள்ளது என உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.
இப்போதெல்லாம் கணினியில் அழகழகான வடிவமைப்புகளைச் செய்து புத்தகங்களை சீக்கிரமாக அச்சிட்டு விடுகிறார்கள். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் எப்படி அச்சிட்டிருப்பார்கள் என எனக்கு குழப்பம் ஏற்பட்டது. அதைத் தீர்க்க நான் தேடிய தகவல்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
ஆமாம் நண்பா, பல ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகத்தை கையில்தான் எழுதினார்களாம், அப்போது காகிதம் என்பது இல்லை. அதற்கு மாற்றாக ஓலை போன்ற பொருட்களை பயன்படுத்தினார்களாம். கையால் எழுதிய புத்தகத்தை பிரதி எடுக்க மீண்டும் அந்த புத்தகத்தை பார்த்து எழுத வேண்டியிருந்தது. அதற்கு மாதங்கள, இல்லையெனில் ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். ஆனால் அச்சடிக்கும் முறை வந்ததும் இந்தச் சிக்கல்கள் இல்லாமல் போனது. அச்சடிக்கும் முறை சீனாவில் கி.பி. 868 ஆம் ஆண்டுதான் உருவானது. எழுத்துக்களை ஒரு பலகையில் செதுக்கி அதில் மையைத் தடவி அச்சு எடுத்தனர்.
ஆனால் அதற்கு அதிக பலகைகளும் அதிக காலமும் பிடித்தது. பின்னர் கி.பி.1041 ஆம் ஆண்டு பிஷெங் என்பவர் அதனை இன்னும் எளிதாக்கினார். இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜொகன்னஸ் கூட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இந்த அச்சு இயந்திரமே சில மாற்றங்களுடன் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. இன்று என்னைப் போன்ற பல கோடிக்கணக்கான புத்தகங்களைப் புதுமையான தொழில்நுட்பம் மூலம் அச்சடிப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்புகள் தான் மூலக்காரணம்.
புத்தகத்தின் பயன்கள்:
புத்தகம் மட்டும் இல்லாவிட்டால் மனிதன் மீண்டும் மிருகமாக மாறிவிடுவார்கள். புத்தகம் யாரும் செய்ய இயலாத அரிய பணியை செய்கிறது. இன்று நாம் எழுதும் புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாழும் மக்களுக்கு நாம் இன்று எப்படி வாழ்ந்தோம் என்பதை அறிய உதவுகிறது. அது மட்டுமல்ல கோடிக்கணக்கான தகவல்களை தன்னுள் சுமந்து காலம் கடந்தும் நிற்கிறது புத்தகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் இன்றும் நம்மோடு வாழ முடியுமா? நம் சிந்தனையை வழிநடத்த முடியுமா? ஆம் முடியும். திருவள்ளுவரும் அவர் எழுதிய திருக்குறளும் தான் அதற்கு எடுத்துக்காட்டு.
சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றும் பணியை செய்வதே புத்தகம்தான். வேறெந்த உயிரினத்திற்கும் இல்லாத ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே கிடைத்த ஆற்றல், அது சிந்திக்கும் ஆற்றல். அந்த சிந்தனையைத் தூண்டுவதற்கு புத்தகங்களை வாசிப்பது அவசியம். ஆனால் இன்று மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. மாணவர்களும் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே என்னை எடுக்கிறார்கள். அறிவுத் தேடலுக்காக என்னைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. எப்படியோ மனிதர்களுக்கு பயன்பட்டோம் என்ற திருப்தி போதும் எனக்கு.
“வாசிப்பது மனித இயல்பு; சிந்திப்பது அறிஞரின் இயல்பு; படைப்பது கலைஞர்களின் இயல்பு” வாசியுங்கள் சிந்தியுங்கள்: பிறகு என்னைப் போன்ற பல புத்தகங்களை நீங்களும் படைப்பீர்கள்.
நன்றி: வ. பூப்பாண்டி