Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 22: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி



Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

என் அன்பிற்கினிய தம்பி உசிலை பகவான், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் மதுரை வந்திருந்த ஒரு தருணத்தில் தான் இயக்கவிருந்த ஒரு திரைப்படத்தின் நீளமான ட்ரெய்லருக்கு என் குரலில் கதைக்கருவைப் பதிவு செய்யக் கேட்டார். டெரிக் ஸ்டுடியோவில் பதிவு செய்தோம். நன்றாக வந்தது. மிக நேர்த்தியாக மண் வாசனையோடு படம் பிடித்திருந்தார், காரணம் அடிப்படையில் பகவான் ஒரு ஒளிப்பதிவாளர். ஏற்கனவே அவரின் “பச்ச மண்” குறும்படத்தால் நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். இவர் “காக்கா முட்டை”, “கடைசி விவசாயி” போன்ற முக்கிய படங்களை இயக்கிய இயக்குநர் மணிகண்டனின் உற்ற தோழன். ஒரு நாள் நான் பேசிக்கொடுத்த அந்த ட்ரெய்லர் படமாகப் போகிறதெனவும் அதில் ஒரு பாடல் நான் எழுதவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள நான் எழுதிக் கோடுத்தேன். அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜெய கே தாஸ். “ஆரம்பமே அட்டகாசம்” “நாய்க்குட்டி படம்” போன்ற படங்களுக்கு அப்போது இசையமைத்திருந்தார். அந்தப் பாடல் தமிழ் சினிமா இதுவரை தொடாத சூழல்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் செய்முறை கலாச்சாரம் ஒரு விவசாயம் போல் நடக்கிறது. ஏன் இப்போது செய்முறை மட்டுமே நடக்கிறது விவசாயம் எங்கே நடக்கிறது என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. திருமண விழா, காதணி விழா, மார்க்கக் கல்யாணம், பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, முடியிறக்கு விழா என எண்ணற்ற பெயர்களில் விசேசம் நடத்துகிறார்கள். வழியே இல்லையென்றால் “வீட்டு விசேசம்” என்று வைத்து மொய் வாங்கிவிடுகிறார்கள். அந்த வீட்டு விசேசத்தை வீட்டில் வைக்காமல் மண்டபத்தில் வைப்பதை என்ன சொல்வது. “திருமண மண்டபம்” என்று பெயர் சூட்டிய மண்டபங்களில் திருமணம் மட்டுமா நடக்கிறது என்பதும் ஏன் இதுவரை “காதணி மண்டபம்” என்று ஒன்றில்லை என்பதும் ஒரு நகைச்சுவையான கேள்வி தான்.

Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அந்தக் காலத்தில் திருமண பத்திரிக்கைகளில் “இரவு 10 மணி அளவில் “நாடோடி மன்னன்” “பாசமலர்” போன்ற திரைப்படங்கள் திரையிடப்படும்” என்கிற பின் குறிப்பு இருக்கும். காரணம் அன்றைக்கு பெரும்பாலும் திருமணம் இரவுகளில் தான் நடக்கும் அதிலும் வீட்டில் தான் என்பதால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த குடும்பங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும். எல்லாரும் வீட்டிற்குள் படுத்துவிட்டால் “முதல் இரவு” எப்படி நடக்கும் என்பதாலேயே இந்தத் திரைப்பட ஏற்பாடு. இன்றைக்கு பத்திரிகை பின் குறிப்பில் மாலைகள் பண்ட பாத்திரங்களைத் தவிர்க்கவும் என்றிருக்கிறது. அப்படியெனில் உங்களுக்கு ஏன் வீண் செலவென்று பொருளல்ல, விரயமாகும் பணத்தை எங்களுக்கு மொய்யா வையுங்கள் என்று அர்த்தம். சரி இதிலாவது ஒரு நாகரீகம் இருக்கிறது, ஆனால் பல பத்திரிகைகளில் பழைய மொய் நோட்டைத் திருப்பிப் பார்க்கவும் என்றெல்லாம் சொல்கிறார்கள், இதன் உட்பொருள் உங்களுக்குப் புரியுமென்றே நம்புகிறேன். அதுவும் முன்பு இல்லாத ஒரு பழக்கம் நாளை திருமணம் என்றால் இன்றைக்கு இரவு மண்டபத்தில் பார்ட்டி கொடுக்கிறார்கள். அந்த பார்ட்டியே நண்பர்கள் நாளைய விழாவிற்கு அவசியம் வரவேண்டும் என்பதற்காகத்தான் ஆனால் இரவு வந்த நண்பர்களால் யாரும் காலை விசேசத்தில் கலந்து கொள்ள முடியாது காரணம் இரவு பார்ட்டி அப்படி இருந்திருக்கும்.

முன்பெல்லாம் விசேச வீடுகளிலோ மண்டபங்களிலோ மொய் எழுத ஆள் தேட வேண்டும். அப்படித் தேடும் போது அக்கம் பக்கத்தில் ஒரு படித்த ஆள் கிடைத்துவிட்டால் அவர் கருப்பனுக்கு நேர்ந்துவிட்ட ஆடுதான். அதிலும் வீட்டைச்சுற்றி யாரும் கிடைக்காவிட்டால் விசேச வீட்டுப் பையனே பலி கிடாய் ஆவான். அவன் புதிய ட்ரெஸெல்லாம் போட்டு பணம் வாங்கிப் போடும் ஒரு பெருசுக்கும் வெற்றிலை பாக்கு கொடுக்கும் இன்னொரு பெருசுக்கும் நடுவில் உட்கார்ந்து மொய் எழுதுதல் என்பது நெருப்பில் நிற்பதாய்த் தெரியும். காரணம் வந்திருக்கும் சொந்தபந்தங்களோடு பேச முடியாது நண்பர்களோடு ஜாலியா அரட்டைகள் செய்ய இயலாது. குறிப்பாய் புதிய தேவதைகளை லுக் விடவும் முடியாது பழைய தேவதைகளுக்கு ஒரு ஹாய் சொல்லவும் முடியாது. இப்படியாக ஒன்றுமில்லாமல் ஒரு விழா முடிந்த போவதை எந்த இளைஞனின் மனம் தான் தாங்கும் சொல்லுங்கள். இதற்காக ஒரு மாற்றம் செய்து சில பெரியவர்களை மொய் எழுத உட்கார வைத்தால் அந்த எழுத்தை விசேச வீட்டுக்காரன் நாளைக்கு வாசிப்பது கடினமாகி விடும் காரணம் அவர்கள் சித்திர எழுத்துக்களை உடையவர்கள். அந்த எழுத்து சீட்டாட்டத்தில் பணிபுரிந்த சித்தர்களுக்கு மட்டுமே புரியும். அதனால் இவர்கள் எப்பாடு பட்டாவது ஓர் இளைஞனை அந்த இடத்தில் நியமிப்பது. மொய் எழுத ஆள் கிடைக்காத பட்சத்தில் அது திருமண விழாவெனில் மணமகன் மொய் எழுத அமர்ந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி தான், ஏனெனில் அவர்கள் கல்யாணத்தையே இந்த மொய்க்காகத் தான் வைக்கிறார்கள். இதில் என் மாமாவும் நண்பருமான சிவமணி அவர்கள் மண்டபங்களில் மொய் எழுதுவதற்காக தன் வாழ்நாட்களின் பெரும்பகுதியை தியாகம் செய்தவர். என்ன ஆச்சரியம் என்றால் ஒரு ஊரில் பத்து மண்டபத்தில் விசேசம் என்றால் அந்த பத்து மண்டபத்திலும் சிவமணி இருப்பார். இப்போது “மொய் – டெக்” மிஷின் வந்துவிட்டது. மொய் எழுதிய கையோடு அதற்கான ரசீதை கையில் கொடுத்துவிடுவார்கள். சில இடங்களில் செல்லிலும் அனுப்பி விடுகிறார்கள்.

Paadal Enbathu Punaipeyar Webseries 22 Written by Lyricist Yegathasi தொடர் 22: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

விசேசத்திற்கு பத்திரிக்கை அச்சடிப்பதும் அதை உறவினர்களுக்குக் கொடுப்பதென்பதும் பெரிய போராட்டம் தான். பத்திரிக்கையில் ஒரு பெயர் விடுபட்டாலும் பெரும் சண்டையாகிவிடும் என்பதால் அந்தந்தப் பகுதி ஓட்டு லிஸ்ட்டை வாங்கி அப்படியே எழுதிக்கொள்கிறார்கள். அதிலும் சில பெயர்கள் தவறிவிட்டால் பேனாவால் எழுதி இணைத்துக் கொள்கிறார்கள். தாய்மாமன்கள், வரவேற்பார்கள், பெரியப்பன் சித்தப்பன்மார்கள், தாய்வழிப் பாட்டனார்கள், தந்தை வழிப் பாட்டனார்கள், அங்காளி பங்காளிகள், சிறப்பு அழைப்பாளர்கள், நண்பர்கள், குட்டீஸ், “வலிமை” குரூப், “பீஸ்ட்” குருப் இனிமேல் “புஷ்பா” குரூப்பும் வந்துவிடும். இத்தனை பெயர்களை எப்படி ஒரு பத்திரிக்கைக்குள் அடைக்க முடியும்? முடியாததது என்று ஒன்றுமில்லை என்று இப்போது பத்திரிக்கை புத்தகம் போல் வந்துவிட்டது. அதிலும் அந்த பத்திரிக்கையில் விசேச வீட்டு ஆண்களின் புகைப்படங்கள் நம்மை அச்சுறுத்தின்றன. தன்னருகே புலி சிங்கம் நிற்பதுபோல் போட்டுக் கொள்கிறார்கள். சிலர் தான் வைத்திற்கும் பைக், கார், லாரி போன்றவற்றை போட்டுக் கொள்கிறார்கள். நான் வியந்த ஒரு பத்திரிக்கையின் முகப்பில் அவர்கள் வைத்திருக்கும் மண் அள்ளும் கொக்கி லாரியை போட்டிருந்தார்கள். ஒரு விசேத்தில் அடிபட்ட சிலர் மறு விசேசத்தில் பெற்றோர் பெயரைக்கூட விட்டுவிட்டு மணமக்கள் பேரை மட்டும் போட்டுவிட்டு ஜகா வாங்கியும் கொள்கிறார்கள்.

பல்லவி:
பொறந்தாலும் வைக்கிறான் விசேம்
இறந்தாலும் வைக்கிறான் விசேஷம்
இரண்டுக்குமே வாங்குறான்டா மொய்யி
தாலிய வித்துக்கூட தாய்மாமன் செய்யி

விசேசம் வைக்கிறது
விவசாயம் போல் ஆச்சுடா – விசேசப்
பத்திரிக்க பாத்துப் பாத்து
பாதி உயிர் போச்சுடா

சரணம் – 1
புத்தகம் போல் அச்சடிச்சுப்
பத்திரிக்கை கொடுக்கிறான் – அவன்
தொணை எழுத்த விட்டா கூட
துண்டப் போட்டு இழுக்கிறான்

விஜய் அஜித் ரசிகர்கள – விசேச
வீட்டுக்காரன் மிஞ்சாரம்
சாகப்போற கிழவியையும் – கட்டவுட்டில்
சாத்திதானே வைக்கிறான்

பத்துப் பேரு தின்னுபோறான்
நூத்தி ஒண்ண செஞ்சு
குறும்பாடு போட்டவனுக்கு
கொதிக்குதடா நெஞ்சு

லேப்டாப்பில் எழுதுறாங்க
இப்பல்லாம் மொய்யி
கேமராவில் பாக்குறாங்க – மொய்
கட்டாயமா செய்யி

சரணம் – 2
பத்திரிக்க குடுக்காமப்
பாதிப்பேரு வந்திடுவான்
கவருக்குள்ள கவிதவச்சு
கல்யாணத்தில் தந்திடுவான்

அரசியல்வாதி தலைமையில் – விசேசம்
வைக்குதிங்க ஊருடா
மான் கதைய ரொம்ப நாளா – தலைவர்
சொல்லுறது போருடா

இல்ல விழா நடக்குதுங்க
மண்டபத்தில் இங்கு
இல்லாதவன் மொய்யி செய்ய
பணம் காய்க்கு தெங்கு

வேட்டு போட்டுக் காசுகள
சாம்பலாக்கிப் போறான்
குவாட்டர்களப் பந்தியில
குடிதண்ணியாத் தாரான்

குழு:
அன்பு காட்டும் சொந்த பந்தம்
அப்பளம் போல் நொறுங்கிப் போச்சுடா
நின்னு பேசக் கூலி கேக்கும்
காலமாகச் சுருங்கி போச்சுடா

இந்த மொய் கலாச்சாரத்தை பெரிதாக எழுத இருந்து கொண்டே இருக்கிறது. இதை ஆய்வு செய்தால் நமக்கு தலையணை சைஸ் நூல் கிடைக்கவே வாய்ப்பிருக்கிறது. செய்த மொய் ரூபாயை ஒரு கஷ்ட சூழலில் ஒருவர் திருப்பி செய்யாவிட்டால் அது 10 ரூபாயாக இருந்தாலும் விழா முடிந்த சில நாட்களில் அதை வீட்டிற்கே சென்று வசூலித்தும் விடுவார்கள் என்கிற அவலம் மனிதாபிமான வாழ்விற்கு நேர் எதிரானது.

இந்தப் பாடல்தொட்டே எனக்கும் இசையமைப்பாளர் ஜெய கே தாஸுக்கும் நல்ல நட்பு மலர்ந்தது. நாங்கள் இணைந்து எண்ணிக்கையற்ற தனிப் பாடல்களை உருவாக்கினோம். அவை சில, பல மில்லியன் பார்வையாளர்களைத் தந்தன. அவரின் இசையில் ஒரு சுகம் உட்கார்ந்திருக்கும். நான் காலத்தால் ஒரு நூறு இசையமைப்பாளர்களையாவது கடந்திருப்பேன் அவர்களில் எனக்குப் பிடித்தவர்களின் பத்துப் பேர் பட்டியலில் இவருக்கும் ஒரு நாற்காலி உண்டு.