Karnataka Bill Attack on Religious Minorities Article in tamil Translated by Sa Veermani. கர்நாடகா சட்டமுன்வடிவு: மதச்சிறுபான்மையினர் மீது தாக்குதல் - தமிழில் ச.வீரமணி

கர்நாடகா சட்டமுன்வடிவு: மதச்சிறுபான்மையினர் மீது தாக்குதல் – தமிழில்: ச.வீரமணி




கர்நாடக சட்டமன்றத்தில் மத மாற்ற எதிர்ப்பு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பது, மதச் சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மதச் சுதந்திரத்தின் மீது நேரடியாக ஏவப்பட்டுள்ள தாக்குதலாகும். இத்தகைய சட்டங்கள் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர்காண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் முன்பு குஜராத் ஆகிய மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டத்திற்கு ‘மதச் சுதந்திரச் சட்டம்’ (‘Freedom of Religion Act’) எனப் பெயரிடப்பட்டிருந்தபோதிலும், இந்தச் சட்டங்கள் மூலமாக அரசமைப்புச்சட்டத்தின் 25ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையின்கீழ், மதத்தின் அடிப்படையில் தொழில்புரிவதையோ, நடைமுறைப்படுத்துவதையோ, பிரச்சாரம் செய்வதையோ கட்டுப்படுத்திடும் விதத்தில் நேரெதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

‘கர்நாடகா மதச்சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு’ (`Karnataka Protection of Right to Freedom of Religion Bill’), பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களை அப்படியே முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட 2003 குஜராத் மதச் சுதந்திரச் சட்டம் (Gujarat Freedom of Religion Act, 2003), உண்மையில் மதக் கலப்புத் திருமணங்களின் பின்னால் ஒருவர் தன் மதத்திலிருந்து மற்றொரு இணையரின் மதத்திற்கு மாறுவதற்கான சுதந்திரத்தைத் தடை செய்து, பறித்துவிட்டது.

இப்போது கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமுன்வடிவானது, கட்டாய மதமாற்றத்திற்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்கிறது. மேலும், இவ்வாறு கட்டாய மத மாற்றத்திற்கு உட்படும் நபர் இளையவராக (மைனராக), பெண்ணாக, அல்லது தலித்/பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்தால், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை என்பது பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை என்று மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது, மாநிலத்தில் பல பகுதிகளில் கிறித்தவ தேவாலயங்கள் மீதும் அவர்கள் கூடும் இடங்களின்மீதும் விரிவான அளவில் தாக்குதல்கள் நடைபெற்றுவரும் பின்னணியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மக்கள் சிவில் உரிமைகள் யூனியன், (PUCL- People’s Union of Civil Liberties) கர்நாடகாவில் கிறித்தவர்கள் மீதான வெறுப்புக் குற்றங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை, இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் வரையிலும், கிறித்தவர்களின் தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை செய்யும் இடங்களில் 39 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறியிருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் அனைத்துமே, கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக இதனை நடத்தியுள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. எனினும் இவை அனைத்து வழக்குகளுமே பொய்யானவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் கிறித்தவர்கள் வெறும் 1.87 சதவீதத்தினரேயுள்ள நிலையில் சங்கிகளின் பிரச்சாரம் பொய்யும் புரட்டும் மிகுந்தவை என்பது புலனாகும். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது கிறித்துவர்கள் மக்கள்தொகை மேலே குறிப்பிட்டதுபோன்று 1.87 சதவீதமாக இருந்த அதே சமயத்தில் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அது 1.9 சதவீதமாகும்.

அதாவது முன்பிருந்ததைவிட இப்போது குறைந்திருக்கிறது. இப்போது இந்தச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, சட்டமானால், பின் கிறித்தவ மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்ச உணர்வு இருந்து கொண்டிருக்கும். கிறித்தவ தேவாலயங்களில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார்கள் அளிக்கப்பட்டு, அவற்றின்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இயல்பான மதஞ்சார்ந்த நடவடிக்கைகளுக்காக அவர்கள் தண்டிக்கப்படக் கூடும். இந்தச் சட்டமுன்வடிவானது, பாஜக ஆளும் மாநிலங்களில் கொண்டுவந்திருப்பதைப் போல, தலித்/பழங்குடியினர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதற்கு, கடும் தண்டனைகளை விதித்திருக்கிறது. ஏழைகளாக உள்ள தலித்துகளும் பழங்குடியினரும் மிக எளிதாக மத மாற்றத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நீண்டகாலமாகக் கூறிவரும் கூற்று இவ்வாறு சட்டம் கொண்டுவந்திருப்பதில் பிரதிபலிக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கமானது, தலித்துகளும், பழங்குடியினரும் தங்கள் ஒடுக்குமுறை தன்மையிலிருந்து விடுபடுவதற்காகவும், கண்ணியத்தையும் சமூக அந்தஸ்தையும் பெறுவதற்காகவும் கிறித்தவத்திற்கோ அல்லது இஸ்லாமுக்கோ மாறுவதை எந்தக்காலத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை.

“கட்டாய மதமாற்றத்திற்கு” எதிரான பிரச்சாரம் என்பது ஆர்எஸ்எஸ் உருவான காலத்திலிருந்தே அதன் பிரதான நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாகும். உண்மையில், விசுவ இந்து பரிஷத் அமைப்பு அமைக்கப்பட்டதே, இவ்வாறு மதம் மாறியவர்களை மீளவும் இந்து மதத்திற்குக் கொண்டு வருவதற்காகவே யாகும். ஆர்எஸ்எஸ் இயக்கமானது, 2014இல் மோடி அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்தே, “தாய்வீட்டுக்குத் திரும்புவோம்” (“ghar wapsi”) என்கிற பிரச்சாரத்தைத் திட்டமிட்டு, நடத்திக்கொண்டு வந்திருக்கிறது. சமீபத்தில், ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், “வழிதவறிச் சென்ற எங்கள் சகோதரர்களை மீளவும் கொண்டு வருவதற்கான மார்க்கமே இது” என்று கூறி “தாய்வீட்டுக்குத் திரும்புவோம்” பிரச்சாரத்தை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். ஆர்எஸ்எஸ்-இன் தர்க்க நியாயத்தின்படி, “தாய்வீட்டுக்குத் திரும்புவோம்” என்பது ஒரு நபர் தன் சொந்த மதத்திற்குத் திரும்புவது என்பதேயாகும். அதனால்தான், 2018இல் நிறைவேற்றப்பட்ட உத்தர்காண்ட் மதச் சுதந்திரச் சட்டம் (Uttarakhand Freedom of Religion Act), “தாய்வீட்டுக்குத் திரும்புவோம்” திட்டத்தை, தங்கள் சொந்த மதத்திற்குத்திரும்புகிறார்கள் என்று கூறி, சட்டபூர்வமாக்கி இருக்கிறது.

கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான பிரச்சாரத்துடன் ‘புனித ஜிகாத்திற்கு’ (‘love jihad’) எதிரான பிரச்சாரத்தையும் சங்கிகள் இப்போது இணைத்துக்கொண்டு, இந்து-முஸ்லீம் மதத்தினருக்கிடையே நடைபெறும் திருமணங்களைத் தடை செய்து, முஸ்லீம் இளைஞர்களைத் தண்டித்திட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘புனித ஜிகாத்திற்கு’ எதிராக ஏற்கனவே உத்தரப்பிரதேச அரசும், மத்தியப் பிரதேச அரசும் சட்டங்கள் நிறைவேற்றியிருக்கின்றன.

இப்போது கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமும், மதக் கலப்புத் திருமணங்களை கிரிமினல் குற்றமாக்கி இருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது, அவசரகதியில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்ற மேலவைக்கு, நிறைவேற்றப்படுவதற்காக அனுப்பப்பட வேண்டும். அங்கே பாஜக-விற்கு பெரும்பான்மை இல்லை. அங்கே காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றுபட்டு நின்று இதனை எதிர்த்தால், இதனைத் தோற்கடிக்க முடியும். படுபிற்போக்குத்தனமான இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படாமல் நிறுத்தப்பட்டாக வேண்டும்.

(டிசம்பர் 22, 2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி