Uyirmozhi Book written by Dr. Shalini book review by S. Kumaravel மருத்துவர் ஷாலினியின் உயிர் மொழி - எஸ்.குமரவேல்

நூல் அறிமுகம்: மருத்துவர் ஷாலினியின் உயிர் மொழி – எஸ்.குமரவேல்




மதம், நிறம், இனம், மொழி வர்க்கம் பாலினம் சாதி மரபு நம்பிக்கைகள் நான் என்ற உணர்வு இப்படி நம் மனத் தெளிவை மறைத்துக் கொண்டே இருக்கும் மாயத் திறைகளை நீக்கி நிர்வாணப் பார்வையில் நோட்டமிட்டால் ஒழிய இந்த உயிர்மொழி நமக்கு கேட்காது.

இந்த நிர்வாணப் பார்வையை சுவீகரித்து இந்த உலகை மீண்டும் ஒரு முறை பாருங்கள் உயிர் பேசும் மொழி உங்களுக்கு தெள்ளத் தெளிவாக கேட்கும். 128 பக்கம் கொண்ட ஒட்டு மொத்த புத்தகத்தின் 27 தலைப்பிலான மேற்கணட புத்தகத்தின் சாராம்சம் இந்த கடைசி வரிகள்தான், அப்படி நாம் எந்த உயிர்மொழியை கேட்க போகிறோம் எவற்றயெல்லாம், நம் அன்றாட வாழ்வில் தவற விட்டிருக்கிறோம், மனித இனத்தின் இரு பாலினங்களுக்குள் கத்தியின்றி ரத்தமின்றி நடந்த, அனுகுண்டுகளும் துபாக்கி ஏவுகனைகளும் இல்லாமல் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் உறவுப் போரினை பற்றியும் அதன் ஆழத்தையும் அறிவியல் ரீதியாக நாம் சுவீகரிக்க பிரபல மனநல மருத்துவர் எழுத்தாளர் ஷாலினி அவர்களின் உயிர்மொழி புத்தகம் நிச்சயம் போரில் வெற்றி பெறுவதற்க்கான கையேடாக இருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் வேண்டாம்.

மனித இனத்தில் தாய், தந்தை சகோதரி, என இரத்த பந்தங்களில் இயல்பாக இருக்கும் பாசப்பிணைப்பு என்பது இயற்க்கையானது, அதையெல்லாம் கடந்து இரத்த பந்தம் இல்லாத ஒரு ஆணையும் பெண்ணையும் இணைக்கும் திருமண பந்த்த்தில் ஏற்ப்படும் உறவு சிக்கல்களை அதன் வலிமையை, பிரிவை, பிரிவதற்க்கான காரணங்களை, அன்பை பரிமாறிக்கொள்ளும் அடிப்படை சாராம்சங்களை, கலவிக் கோட்பாடுகளை, ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும், நடைபெறும், ஹார்மோங்களின் சித்து விளையாட்டுக்களை ஆதிக்காலம் தொட்டு இன்றுவரை மனித உடலில் ஏற்ப்பட்டு இருக்கும் மாற்றங்களை அறிவியல் பூர்வமாக நம்மிடயே உரையாடுகிறார் மரு.ஷாலினி.

புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் என்பதனாலயே பெண்ணுக்கு ஆதரவாகவோ ஆணுக்கு எதிராகவோ அல்லது பெண்ணுக்கு எதிராகவோ ஆணுக்கு ஆதரவாகவோ பேசவில்லை, முழுக்க முழுக்க அறிவியல் பார்வையில் பலதரபட்ட உதாரங்களை மையமாக கொண்டு புத்தகம் எழுதபட்டுள்ளது
சிக்கல் மிகுந்த ஆண் பெண் உறவு ஊசலாட்டத்தில் வருகின்ற ஏற்றதாழ்வுகளை மனித மனம் எவ்வாறெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதை நாம் உணருவதற்க்கு பக்கபலமாக அமைந்துள்ளது புத்தகம்.

புத்தகம் பேசுவது என்னவோ ஆண் பெண் உறவை பற்றிதான் என்றாலும் அதன் தொடக்கம் என்பது எங்கிருந்து என்பதுதான் இதில் முக்கியம் என கருதுகிறேன். ஆம் புத்தகம் ஆதி மனிதனின் வேட்டுவ காலம் தொடங்கி இன்றய நவீன தாராளமைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற இக்காலம் வரயிலான ஆண் பெண் இடையிலான உறவு குறித்து பேசுவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பாக இருக்கக் கூடும் என கருதுகிறேன். எழுத்தாளர் ஒருவர் மனநல மருத்துவர் என்பதனாலாயே தனக்கு கிடைத்த அனுபவங்களில் இருந்து கிடைத்த நிகழ்வுகளை மட்டும் பதிவிடாமல் பலதரபட்ட உலகம் முழுதும் நடந்த பல நிகழ்வுகளின் ஆதாரங்களை நமக்கு முன் வைக்கிறார்.

உதாரணத்திற்கு சிறுவயதிலிருந்து தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு மனித தாயிடம் வளர்ந்த ஒரு சிம்பன்சி தன்னை மனிதனாக கருதி மனித பெண்ணையே விரும்பியது, மனிதன் மட்டுமல்லாமல் யானை குரங்கு ஆகியவையும் ஏன் வயது மூப்பின் போது தன்னுடைய சக பிராணிகளை பாதுகாக்கிறது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.

உடைபடும் கற்பிதங்கள்
முன்பு சொன்னது போலவே புத்தகம் ஒரு சார்பில் இருந்து எழுதப்படவில்லை அதே சமயம் சமூகத்தில் நிலவும் எந்த கற்பிதங்களும் எடுபடவில்லை அறிவியல் என்று வந்துவிட்டாலே அபத்தங்கள் உடைபடுவது வழக்கம் தானே, உதாரணத்திற்கு திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை அது ஒரு ஜெனடிக் ஒப்பந்தம், பெண்கள் என்றாலே மோசம் என சொல்லும் ஆண்கள் தங்களின் தாய் என்று வரும்போது அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே என உருகுவதும், ஒருபோதும் மனிதனோ விலங்கோ எதுவாயினும் அந்த இனத்தின் ஆதார ஜீவன் தாய்தான் என சொல்லும் அதே வேளையில் அதிக தாய் பாசம் கொண்ட ஒரு ஆண் தன்னுடைய மரபணுவை அடுத்த தலைமுறைக்கு பரப்புவதில் தோற்றுப் போகிறான் என்ற தகவல் நமக்கு அதிர்ச்சியூட்டும், பிரசவம் பிள்ளைப்பேறு என எதை எதை கொண்டு மனித ஆண் சமூகம் பெண்களை வதைபடுத்தியதோ அதையே அவர்கள் தங்களின் அஸ்திரங்களாக தேர்ந்தெடுத்ததும் ஆண்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதும் என ஒன்றன் பின் ஒன்றாக வலைப்பின்னல் போன்று மனித வாழ்வின் பலம் பலவீனங்களையும் அதற்கான தீர்வுகளையும் புத்தகம் நமக்கு தருகிறது. ஒருவனுக்கு ஒருத்தி, கல்லானாலும் கணவன், உலகில் தாயின்றி உயர்ந்தது வேறு இல்லை, என நடைமுறையிலுள்ள புனிதப்படுத்தப்பட்ட அனைத்தையும் உடைக்கின்ற அதேவேளையில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் ஆழமாக புத்தகம் வலியுறுத்துகிறது.

ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் உங்களை கூர்மையாக விமர்சிக்கும், அந்த விமர்சனம் உங்களை கோபமூட்டும் அதேவேளையில் ஆசுவாசமாக தடவிக் கொடுக்கும்.

உயிர்மொழி – ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்வில் கைகளில் ஒன்று

புத்தகத்தின் பெயர் : உயிர் மொழி
ஆசிரியர் : மருத்துவர் ஷாலினி
பக்கங்கள் : 128
தோழமையுடன்
எஸ்.குமரவேல்