Kuyil Muttai Poem By V Kamaraj குயில் முட்டை கவிதை - வ. காமராஜ்

குயில் முட்டை கவிதை – வ. காமராஜ்




நிறத்தால்
குயிலும் காக்கையும்
ஒன்றுதான்!

குரலால்
ஒன்றுபடுவதில்லை!

குயிலின் குரல்
இனிமையென்கிறோம்;
காக்கையின் குரலைக்
கரைச்சல் என்கிறோம்;
அதனதன்
மொழி அறிந்ததைப்போல!

இரண்டும்
பறவைதான்!
காகம்
மிகவும் நெருக்கமான பறவை….
மனிதருக்கு!

நம் வீட்டு மரங்களில்
கூடு கட்டுவதும்
விருந்தினர் வருகையை
அறிவிப்பதும்;
மறைந்துவிட்ட
முன்னோர்கள் காகமாகக்
கற்பனைக் கொள்வதும்….
கைகளில்
உணவு வைத்துப்
பழகி அழைத்தால்
பாசமுடன் வருவதும்!

காகத்தைப்போல
எளிமையாக
எல்லோராலும்
அதன் குரல் எழுப்புவதும்….
தன்னையழைக்கும்
அழைப்பை உணர்ந்து
பறந்து வந்து
பாசம் காட்டுவதும்….
காலையில் கரைந்து எழுப்புவதும்;
காகம் தவிர
வேறெந்தப் பறவை?

குயிலை
கூப்பிட்டுப் பாருங்கள்
முதலில்….
அதன் குரலில்!
குரலும் வராது….
குயிலும் வராது!

காகம்
அப்படியென்ன
கெடுதல் செய்தது?
குயில் கொட்டிக் கொடுத்துவிட்டது?

முள்ளோ…. சுள்ளியோ…
காக்கை
தனக்கான மாளிகையை
தானே கட்டிக்கொள்ளும்!
அதற்குத் தெரிந்த வழியில்.

காக்கையின் கூட்டில்
குயில் முட்டையிடுவதால்
பிடிக்கிறது….

அப்படியான
மனநிலை உலகம்!
குயிலை
கொண்டாடலாம்…

காகத்தை வெறுக்காதீர்கள்.
காகமும் பறவைதான்…
குயிலும் பறவைதான்!
பறவைகளை
பறவைகளாகப் பார்க்கப்
பழகிக் கொள்ளுங்கள்…

Seriya Voora Poem by V Kamaraj. சேரியா? ஊரா? கவிதை - வ. காமராஜ்

சேரியா? ஊரா? கவிதை – வ. காமராஜ்




இந்தியாவை
எப்படிப் பார்ப்பது;
அழைப்பது?
ஊர் என்று அழைப்பதா?
சேரி என்று சொல்வதா?

ஊரும் சேரியும்
கலந்து கிடக்கும் நாட்டை…
ஒன்று
ஊராக்கு!
இல்லையானால்
சேரியாக்கு!

இந்தியா
கிராமங்களில்தான் வாழ்கிறது!
கிராமங்கள் ;
ஊரென்றும் சேரியென்றும்
உறங்காமல் கிடக்கின்றன!

வெள்ளைக்காரன்
ஊர்த் தனம் செய்தானா?
சேரித்தனம் செய்தானா?
ஓட்டிவிட்டோம்!

ஊர் என்பது…
ஒரு கிராமத்தின் குறியீடா
சேரி மக்களை
தொடக்கூடாது என்போர் வாழும் குறியீடா?

சேரி என்பது
பிறருக்கு சேவை செய்வோர் வாழும் குறியீடா?

இந்திய மண்
எப்படி சேரி மக்களிடம் சேராமல் போனது?

மண் கூட
சேரி மக்களை சேர்க்காமல்
போனதோ?

சேரி வாழ்வோர்
தீட்டுடையவர் என்றால்;
அவர்
தீண்டும் உழைப்பில்
தீட்டுப் படுவதில்லையா?

ஊர் என்பதில்
உழைப்பவரும் வாழும் இடம்தானே?

ஏன்
சேரியின் ஒட்டுமொத்த
உழைப்பாளரும்,
ஊரின் ஒரு பகுதி உழைப்பாளரும்
ஒன்று சேராமல் போனார்கள்?

இந்திய
ஊர்… சேரி மக்கள்
உருவத்தில்…. நிறத்தில்
ஒன்றுடையவர் தானே?
ஒரு சிலர் தவிர!

உருவம்… நிறம்….
உணவுமுறை…. உடை…
எல்லாமும் ஒன்று;
ஊரும் சேரியும் தனி… தனி!

நாட்டின் வளர்ச்சிக்கு
நாளும் ஒரு திட்டம்;

ஊரும் சேரியும்
பிரிந்தே கிடப்பதற்கு
குள்ள நரிச் சட்டங்கள்!

கிராமங்கள்
ஊரென்றும் சேரியென்றும்
இருப்பதே இருக்கட்டுமெனில்….

எதற்காக
நடித்துக் கொண்டிருக்கிறோம்;
வேற்றுமையில் ஒற்றுமை?

இந்தியாவில் பிறந்த
அனைவரையும்
ஒன்று
ஊர் மக்களாக்கு….
இல்லையானால்
சேரி மக்களாக்கு!

முடியாது என்றால்
இந்தியாவை
சுதந்திர நாடு என்று
சொல்லாதே நிறுத்து!

****************************
சாதியம் பேசுபவனுக்கு
வசதியாகப் போய்விட்டது
முகக்கவசம்;
சாதியில்லையென்போர்
காரித்துப்புவதை
தடுத்து விடுகிறது!
முகர்ந்தாலே
தள்ளாட்டம் வருகிறதென்கிறேன்;
குடி குடி என்றாகிறாயே;
மதத்தை!