பெயர் சொல்லும் பறவை 20 – நீலநிற ஈப்பிடிப்பான் | முனைவர். வெ. கிருபாநந்தினி
நீலநிற ஈப்பிடிப்பான்
ஆனைக்கட்டி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிகிறோம் என்பதால் அவ்வப்போது பறவைகளை புகைப்படம் எடுக்க காட்டுக்குள் செல்வது வழக்கம். நானும் நண்பரும் பறவை நோக்குவதற்காக சிறிது தூரம் காட்டுக்குள் சென்றோம்.
காட்டுக்குள் ஓடும் அழகிய சிற்றோடையும், அருகருகே அடர்ந்த மரங்களை கொண்டு பசுமைப்பரப்புடன் விளங்கும் அழகிய சூழலில், மற்ற மனிதர்களின் தொந்தரவு இன்றி பழங்குடியினர் மட்டுமே நடைபாதையாக பயன்படுத்தும் இடம் இருள் சூழ்ந்தும், தட்டான், சிறு சிறு பூச்சிகள், நீர் நில வாழ்விகளான பாம்பு, தவளை, போன்ற பல உயிரினங்கள் வாழுமிடமாக காட்சியளித்த அவ்விடம் அமைதியாகவும் இருந்தது. அதனால் ஒரு பறவையின் கீச்சுக்குரல் மட்டும் கவனத்தை ஈர்த்தது. சத்தம் வந்த பகுதியில் நாங்கள் பார்வையை செலுத்தியபோது மகிழ்ச்சியடைந்தோம்.
பிரகாசமான நீல புருவம், தோள்பட்டை, பின் தொடை மற்றும் வால் நீல நிறத்திலும், தொண்டைக்கு கீழ்ப்பகுதி சிவப்பு வண்ணத்திலும், அடிப்பகுதிகள் வெண்மையாகவும் காணப்பட்டது. இயற்கையில் என்ன அழகு வண்ணங்கள். நண்பரும் புகைபடங்களை எடுத்தார். இது தான் “திக்கெல் நீல ஈப்பிடிப்பான்” வெப்பமண்டல ஆசியாவில், இந்தியத் துணைக் கண்டம் முதல் கிழக்கு நோக்கி வங்காளதேசம் மற்றும் மேற்கு மியான்மர் வரையும் இச்சிறுபறவை காணப்படுகிறது.
இந்தியா மற்றும் மியன்மரில் பறவைகள் சேகரித்த இங்கிலாந்து பறவையியலாளர் சாமுவேல் டிக்கெல்லை நினைவுபடுத்தும் விதமாக ஆங்கிலத்தில் Tickell’s blue flycatcher என்றும் அறிவியல் பெயராக Cyornis tickelliae என்றும் இதற்கு பெயரிடப்பட்டது.
கர்னல் சாமுவேல் ரிச்சர்ட் டிக்கெல் இந்தியாவிலும் பர்மாவிலும் ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஆவார், அவர் ஒரு கலைஞராகவும், மொழியியலாளர் மற்றும் பறவையியல் வல்லுனராகவும் இருந்துள்ளார். அவர் ஆகஸ்ட் 19, 1811 இல் இந்தியாவின் கட்டாக்கில் பிறந்தார். இவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் ரிச்சர்ட் டிக்கெல். அவருக்கு 16 வயதாக இருந்தபோது அவரது தந்தை ‘கடுமையான மற்றும் நீடித்த நோயால்’ இறந்தார். சாமுவேல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 19 வயதில் இந்தியாவுக்குத் திரும்பி, வங்காளத்தில் உள்ள பூர்வீக காலாட்படையில் சேர்ந்தார். அவர் இந்தியாவிலும் பர்மாவிலும் பிரிட்டிஷ் இராணுவத்துடன் பணியாற்றினார், கர்னல் பதவிக்கு உயர்ந்தார். அவர் தனது ஓய்வு நேரத்தை ஓவியம் வரைவதிலும், தான் தங்கியிருந்த இடங்களில் இருந்த விலங்கினங்களை விவரிப்பதிலும் செலவிட்டார். அவர் மொழியியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ஹோ மொழியின் இலக்கண அமைப்பு பற்றிய தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பிரிட்டானி கடற்கரையில் மீன்பிடிக்கும்போது அவர் கண் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு 1870ல் ஒரு கண்ணின் பார்வையும் பின்னர் மற்றொரு பார்வையும் இழக்க நேரிட்டது. இந்திய பறவையியலின் விளக்கப்படங்கள் என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளாக கொடுத்துள்ளார். இந்த ஏழு தொகுதிகளில் இந்திய பறவையியல் என்ற தலைப்பில் 276 இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன, மொத்தம் 488 இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக Tickell Aves என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் விளக்கங்கள் மற்றும் வாட்டர்கலர் விளக்கப் படங்களுடன் இருந்தன, அவை Tickell Aves MS I & II இன் இரண்டு வரைவு தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டவை.
ஆனால் அவரது பார்வைக் குறைபாடு இப்பணி தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் இறப்பதற்கு முன், முடிக்கப்படாத ஓவியங்களை லண்டனின் விலங்கியல் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அவர் வரைந்த ஓவியங்களை https://www.zsl.org/blogs/artefact-of-the-month/animals-of-india-by-samuel-richard-tickell-1864 Zoologicl Survey of London இணைய தளத்தில் பார்த்து பல அறிவியல் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
இயற்கை வாழ்விடங்களில் பறவைகளின் ஓவியங்கள் மற்றும் இந்திய வாழ்க்கையின் காட்சிகளைக் காட்டும் ink vignettes (மை விக்னெட்டுகள்) உட்பட அவரது சிறந்த கலைத் திறன்கள் மூலம் இயற்கையையும், பறவைகளையும் நமக்கு அறிமுகப் படுத்திவிட்டு மறைந்துள்ளார்.
திக்கெல் நீல ஈப்பிடிப்பான் (Tickell’s blue flycatcher) (சையோரினிசு டிக்கெல்லியே) என்பது குருவி வகைகளுள் 11 – 12 சென்டிமீட்டர் நீளமுடைய சிறிய பறவையாகும். முக்கியமாகப் பறக்கும் பூச்சிகளை, அதனுடன் பறந்து சென்றே பூச்சிகளைப் பிடித்து உணவாக உண்ணுகின்றன. இவற்றின் உணவில் கரையான்கள் மற்றும் விட்டில்பூச்சிகள் போன்ற பிற பூச்சிகளும் அடங்கும். தற்போது நிகழும் பல்வேறு சூழல் சீர்கேடுகளால் இவை இப்போது குப்பை கொட்டப்படும் இடங்களில் இரைதேடி அலைவதை வருத்தத்துடன் அவதானித்து வருகின்றனர்.
திக்கெல் நீல ஈப்பிடிப்பான் வறண்ட காடு, புதர், மூங்கில் மற்றும் தோட்டங்களில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை (இலங்கையில் மார்ச் முதல் ஜூன் வரை) இனப்பெருக்கம் செய்கிறது. இது மரத்தின் துளை அல்லது பாறைகளுக்கு இடையில் புல் மற்றும் இலைகளை நன்கு அடுக்குகளாக அமைத்து 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். இனப்பெருக்க காலத்தில் அதிகப்படியான இரையை எடுக்கக்கூடும். இலங்கையில் ஒரு புதர் தவளை இதன் இரையாக அறியப்பட்டுள்ளது.
திக்கெல்ஸ் இத்தனை சிறப்பு மிக்க இயற்கையை பற்றிய தகவல்களை ஏதாவது ஒரு வகையில் நமக்கான தரவுகளாக அந்த ஆராய்ச்சியாளர் கொடுத்துச் சென்றதால் தான், அவை இப்போது நமது ஆய்வுக்கும் வாழ்க்கைக்கும் பயன்படுகின்றன. இதே போல ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்தன்மையுடன் கூடிய சிறப்புமிக்க கலை திறன் இருக்கும். அதனை பொழுது போக்கு என்று சொல்லி கடந்து செல்லாமல், அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஆவணப்படுத்தினால் இயற்கை பாதுகாப்பதற்காக மட்டும் அல்லாமல் பல வரலாற்று தரவுகளுக்காகவும் எதிர்காலத்தில் பயன்படுத்தலாம் .
தரவுகள்
https://peoplepill.com/people/samuel-tickell/
https://ebird.org/species/tibfly3
Serrao, J.S. (1964). “Tickell’s Blue Flycatcher feeding on crawling prey”. Newsletter for Birdwatchers. 4 (3): 12.
Baker, E. C. Stuart (1924). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 2. London, UK: Taylor and Francis. pp. 234–236.
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 19 – உப்புக்கொத்தி Charadrius leschenaultia | முனைவர். வெ. கிருபாநந்தினி