நூல் அறிமுகம்: மதுரைபாலனின் ‘விரல் நுனியில் கசியும் தீ’ – வி.மீனாட்சிசுந்தரம்

நூல் அறிமுகம்: மதுரைபாலனின் ‘விரல் நுனியில் கசியும் தீ’ – வி.மீனாட்சிசுந்தரம்




சமீபத்தில் எழுத்தாளர் தோழர் மதுரைபாலனோடு கலந்துரையாடும் வாய்ப்பு நேர்ந்தது. அவர் என்னிடம் “ விரல் நுனியில் கசியும் தீ” ”லயம்” என்ற இரண்டு புதினங்களை கொடுத்தார்,

”விரல் நுனியில் கசியும் தீ“ என்ற புதினத்தை படிக்க ஆரம்பித்தேன், நிறைவு பக்கமான 207வது பக்கம் வரை படித்த பிறகே கீழேவைக்க மனம் வந்தது.

நிலக்கரி கிடைக்குமா என்று தோண்டிய சுரங்கத்தில் அணுசக்தி தரும் யுரேனியம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ அந்த அளவு மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த புதினம் அன்மைக்காலத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கிராமங்களிலும் வர்த்தக நகரங்களிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கதை மாந்தர்களைக் கொண்டு சித்தரிக்கிறது வட்டார மொழி நடையில் எழுதப் பட்டிருப்பதே இதன் சிறப்பாகும். சாதிப் பகைமை கருத்தோடு சாதி ஒழிப்புணர்வு நடத்தும் போராட்டத்தை சித்தரிக்கிற பொழுது உள்ளதை உள்ளபடி காட்டுகிறதே தவிற எதையும் கூட்டி குறைச்சு சொல்லவில்லை
தமிழகத்தில் எந்த கிராமத்திற்கு போனாலும் அங்கிருக்கும் அரசியல்களில் கம்யூனிச பார்வையுள்ளவர்களைத் தவிற மற்றவர்கள் சாதி ஆணவப் போக்கையோ, மூட பழக்கவழக்கங்களையோ சாதி மேலாதிக்க செயல்களையோ தட்டிக் கேட்க துணிய மாட்டார்கள் சனாதன பழக்கவழக்கங்களை விமர்சித்து பதட்ட நிலையை உருவாக்க விரும்ப மாட்டார்கள் ஆனால் கம்யூனிஸ்ட் ஒருவர் இருந்தால் போதும் அரசாங்க கணக்கில் காவல் துரை கண்காணிப்பிற்கு உட்பட்ட பதட்ட பகுதி என குறிக்கப்படும். ஏன் எனில் இவைகளை தட்டிக் கேட்கும் துணிச்சலை பெரியார் சிங்கார வேலருக்கு பிறகு அவர்கள்தான் தொடருகிறார்கள்.

இந்த புதினத்தின் முதல்பகுதி குசும்பு கிழவன் செங்கானின் இளவட்டங்களை ஈர்க்கும் ஆற்றலை மட்டுமல்ல கிராம பெண்கள் பேசும் செக்சுவல் கிசு கிசுக்களை விரசமில்லாமல் சித்தரிக்க முயலும் பகுதியாகும். காமசுகம் என்பது பெறுதில் அல்ல இரண்டு மனங்களின் கூட்டு என்பதை அவருக்கே உரிய நடையில் உணர்த்த முயல்கிறார் பாண்டி அம்மாள் என்ற கதாபாத்திரத்தின் கனவு காட்சி சித்தரிப்பில் இதை அறிய முடியும்.

அதோடு நிற்கவில்லை கிராம மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கையால் ஏற்படும் சச்சரவுகளை சடங்குகளை சம்பிரதாயங்களை படம் பிடிக்கிறார்.

சாதி ஆணவம் எப்படி யெல்லாம் வெளிப்படுகிறது மாறுதலை ஏற்க மறுக்கிறது என்பதை நேர்த்தியாக காட்டுகிறார் நாட்டாமை கிணறு தோண்டிய பொழுது நீர் வராமல் கொளுந்துவிட்டு எறிவதைக் கண்டு எப்படி மூட நம்பிக்கை வலுப்படுகிறது.

இந்த தீ“ மர்மம் என்ன என்பதை துப்பறியும் புதினத்தைப்போல் ஆசிரியர் கொண்டு செல்வதால் புத்தகத்தை முடிக்காமல் கீழேவைக்க வாசகனுக்கு மனது வராது.

சாதிமறுப்பு திருமணம், பைத்தியம் பிடித்த கணவனோடு வாழ நேர்ந்த பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் இவைகளை சிறப்பாக சித்தரித்த விதம் வாசகனை வியக்க வைக்கிறது.

ஆசிரியர் எந்த இடத்திலும் அறம் போதிக்க முயற்சிக்கவில்லை கதை மாந்தர்கள் யாரும் நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களே தவிற கற்பனையான ஆளுமைகளை கொண்டதாக கூறமுடியாது. குன்றக்குடி அடிகளைப் போல் ஒரு சுவாமி மகிமானந்தா வருகிறார். ஜல்லிகட்டு விளையாட்டு நில உடமையாளர்களின கவுரமே தவிற ஆடுவோரை மகிழ்விக்கும் விளையாட்டல்ல என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

எதார்த்த வாழ்வை உள்ளதை உள்ளபடி சித்தரிப்பதால் இந்த புதினம் மனதை மேம்படுத்தும் ரகமாகும் ஆனால் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறது என்றுமட்டும் தெறிகிறது.

– வி.மீனாட்சிசுந்தரம்

நூல் : விரல் நுனியில் கசியும் தீ
ஆசிரியர் : மதுரைபாலன்
விலை : ரூ.₹200
வெளியீடு : பாலன் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com