நூல் அறிமுகம்: புலவர் வே. தமிழ்மாறனின் சனாதன தர்மம் என்றால் என்ன ? – சுரேஷ் இசக்கிபாண்டி
“சனாதனம்” என்றால் என்றைக்குமே மாறாது என்கிறது இந்துத்துவா அடிப்படைகள்
புலவர் வே. தமிழ்மாறன் அவர்களது புகைப்படத்தை திருச்செந்தூர் பகுதிகளில் நினைவஞ்சலி சுவரொட்டியின் மூலம் கண்டேன். ”யார் இவர், இவரை குறித்து இதுவரையில் அறிந்ததே இல்லையே” என யோசித்து கொண்டிருக்கும் கணத்தின் அடுத்த சில நாட்களிலேயே தோழர் மோகனசுந்தரம் அளித்த இப்புத்தகத்தின் வழியாக அறிந்துகொண்டேன். திராவிட இயக்கத்தில் துவங்கிய அவரது பயணம் இறுதியாக மக்கள் விடுதலையை வலியுறுத்தும் மார்க்சிய லட்சியத்தில் கலந்தது. இவர் திருச்செந்தூர் அருகே இருக்கும் பரமன்குறிச்சி கிராமத்தில் உள்ள தொழிலாளர்களிடையே அரசியல் விழிப்புணர்வு வகுப்பில் பேசிய கருத்துக்களே இத்தொகுப்பு.
சனாதன தர்மம் என்றால் வர்ண தர்மம். அதென்ன வர்ண தர்மம். நிறத்தின் அடிப்படையிலான நால்வகை தர்மம். பிராமணன் சத்திரியன் வைசியன் என்ற மூவரும் ஒரே நிறம். மேற்கண்ட மூவருக்கும் சேவகம் செய்ய பிறப்பிலேயே கடவுளால் தீர்மானிக்கப்படுவதாக சாஸ்திரங்கள் சொல்லும் சூத்திரன் (கருப்பு, திராவிடன், பூர்வகுடி). இதில் பிராமணன் தான் கற்ற வேதத்தின் தர்ம ஓதுவார் வேலையை மற்றும் பார்க்க வேண்டும். சத்ரியன் கண்டிப்பாக போர்க்களத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வைசியன் வணிகத்தை மட்டும் பார்க்க வேண்டும். சூத்திரன் விவசாயத்தை மட்டும் பார்க்க வேண்டும். இந்த நான்கு பிரிவுகளில் இருந்தும், எவனும் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவு வரக் கூடாது என்கிறது மனுதர்மம். எனவே தான் அவர்களால் பசுவை தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ள முடிகிறது. தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் அதிகம் தன் வாழ்வில் பயன்படுத்தும் எருமையை அவர்கள் முன்னிறுத்துவது இல்லை என்று எருமை தேசியம் புத்தகத்தின் முன்னுரை மூலமாக உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த காஞ்ச அய்லய்யா தெரிவிக்கிறார்.
சனாதனம் என்றால் என்றைக்குமே மாறாது என்கிறது இந்துத்துவத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் கருதப்படும் மனுதர்மம். ஆனால் சமூக விஞ்ஞான மானுட விடுதலை தத்துவத்தை வைத்த மார்க்ஸ் ” மாறும் என்கிற வார்த்தையை தவிர, இங்கு உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது” என்கிறார்.
ஆகவேதான் இந்த சமூக விதி தலை வீதியில் மாறவே கூடாது என்கிறார்கள் இந்துத்துவவாதிகள். ஏன் மாறக்கூடாது? எதற்கு வரக்கூடாதென ? நாம் கூர்ந்து கவனித்தோமானால் தான் அதனுள் மறைந்திருக்கும் உண்மை புலப்படுகிறது. உதாரணத்திற்கு 200 ரூபாய் மதிப்புள்ள மனுதர்மம், பகவத்கீதை மற்றும் மகாபாரதம் என மூன்றில் ஒரு புத்தகத்தை இலவசமாகவும் வழங்குகிறார்கள். இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? இங்கு இருக்கிற உயர் சாதி இந்து பணக்காரர்களிடம் இருந்து வருகிறது என்று புலப்படும்.
ஏன் அவர்கள், தன்னுடைய உழைப்பின் மூலமாக சம்பாதிக்கதாக சொல்லப்படும் பணத்தை இதற்காக செலவிடுகிறார்கள் என்று ஆழ்ந்து யோசித்தோமானால், இதன் மூலமாகத்தான் அவர்களால் நாம் அனைவரையும் சுரண்டி துன்பமில்லாத வாழ்வை வாழ முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி நமக்கு அறிவிக்கிறார்கள். எனவேதான் அவர்கள் இந்த அமைப்பு முறை தொடர்ந்து தொடர வேண்டும் என விரும்புவதாக புலவர் வே. தமிழ்மாறன் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் இரண்டாயிரம் வருஷமா முதலாளி முதலாளியாக உட்கார்ந்திருக்கிறான் அல்லது நிலக்கிழார் நிலக்கிழாராக உட்கார்ந்திருக்கிறான். எந்த வேலைக்காரனுக்கும் புரட்சி உண்டாக்கத் தெரியவில்லையே. ஐரோப்பா கண்டத்தில் 100 ஆண்டிற்கு ஒரு புரட்சி வருகிறதே. இந்தியாவில் புரட்சி வரவில்லையே. அது எப்படி? என்று கவனிப்பதற்காக, ஒரு பத்துப் பேரை இங்கே அனுப்புகிறான். இந்தியாவில் புரட்சி வராமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? எம்.என்.ராய் அதில் குறிப்பிடுகிறார். அந்தப் பத்துப் பேரும் என்ன சொல்கிறார்கள்? இந்தியாவில் ஆயிரக்கணக்கான சாதி, நான்கு வர்ணம். அந்த நான்கு வர்ணத்திலிருந்தும் வந்த சாதி 4446. அந்த நான்காயிரத்து நானூற்று நாற்பத்தி ஆறில் உண்டான புதுசு புதுசான உட்பிரிவுகள் குலங்கள், உட்குலங்கள், கோத்திரங்கள், மதங்கள். சமயங்கள், நம்பிக்கைகள் இப்படிப்பட்டவைகள் நிறைய இருப்பதனால் இந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக முதலாளி, தொழிலாளி அல்லது பண்ணையார், வேலைக்காரன் என்றப் புரட்சியே வரவில்லை.
இந்தியா மாதிரி பாதுகாப்பான இடம் பணக்காரனுக்கு வேறு எதுவுமே இல்லை என்று அவர்கள் குறிப்பு ஜெர்மனிக்குக் கொண்டு போனதாக நம்முடைய எம்.என்.ராய் குறிப்பிடுகிறார். எனவே. இந்தியாவில் இப்பொழுது இருப்பது முதலாளி, தொழிலாளி முறை. தொழிலாளிக்கு எது விரோதமானது சனாதனம் என்கிறார் புலவர் வே. தமிழ்மாறன்.
ஒரு சாரார் அதாவது பிராமணர்கள் மட்டும் மேலும் மேலும் உயர்ந்தநிலையை சமூகத்தில் அடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற மனநிலை நம்மிடைய உருவாக்க அவர்கள் சத்திரிய குலத்தில் பிறந்து ஒரு சூத்திரனால் (இடையரால்) வளர்க்கப்பட்ட கிருஷ்ணரை துணைக்கு அழைக்கிறார்கள். ஆகவேதான் அவர் பகவத்கீதையில் “சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் உபாதய” என்று அர்ஜுனனிடம் சொல்கிறார். அதாவது நானே இங்கு நான்கு வர்ணங்களையும் உண்டாக்கினேன். அதை எப்படி உருவாக்கினேன் என்று சொன்னால் குணத்தின் அடிப்படையில் உண்டாக்கினேன் என்கிறார் அவர்.
சூத்திரப் பயலுகளெல்லாம் நீங்கள் கோயிலுக்குள் வந்தால் உங்களைக் கடவுளுக்குப் பிடிக்காது என்று சொல்லித்தான். கோபுரத்தைக் கட்டி வைத்திருக்கிறோம். நீ பனை ஏறுகிறவன். பனையிலிருந்தே பார். கோபுரம் தெரியும். நீ செக்காட்டுகிறவன். செக்கை ஆட்டிக்கொண்டே கோபுரத்தைப் பார் தெரியும். நீ செருப்புத் தைப்பவன், ஊசியைத் தைத்துக்கொண்டே கோபுரத்தைப் பார் தெரியும். இதற்கு என்ன அர்த்தம் என்றால், பலபேர் சொல்கிறார்கள். பகவான் சூத்திரரைத் தண்டிக்கிறார் என்று இல்லை. பகவான் பிராமணரைத் தான் தண்டிக்கிறார். நாங்கள் கோயிலுக்குள் போகவேண்டும் என்றால், குளிக்க வேண்டும் உபவாசம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சடங்குகள் செய்துதான் நாங்கள் கடவுள் பக்கம் போகலாம்.
மார்க்ஸ் சொன்னான்? துன்பப் பட்டவர்களின் பெருமூச்சு, இதயமில்லாதவர்களின் இதயம். பௌதிகத்தின் ஒரு உயிரான இந்த மதம் நீடிப்பதற்கான பௌதிகக் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மதம் நீடிப்பதற்கு என்ன காரணம்? முதலாளித்துவ அடிப்படையில் தொழிலாளிகள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக, இந்த சனாதன புத்தகத்தைத் (கீதை, மகாபாரதம்) தருகிறான். இப்படி தகவல்கள் எளிய மொழிநடையில் உள்ளது.
நூல்: சனாதன தர்மம் என்றால் என்ன..?
ஆசிரியர்: புலவர் வே. தமிழ்மாறன்
வெளியீடு: தென்குமரி பதிப்பகம்
விலை: ரூ.60
பக்கம்: 64