தர்மசிங் : கவிதைகள்
1
“ஒற்றை இரவு”.
நீ என்னில் பூக்கும்
நிதர்சன வேளைக்காகவே
நீண்ட தவமிருக்கிறேன்
பூத்த விழிகளோடு
கிடப்பதுதான் மிச்சம்
நீ எங்கோ மறைந்து திரிகிறாய்
உனக்கும் எனக்கும் என்ன
பங்காளிச் சண்டையா?
நீயாகத்தான் விலகிப் போனாய்
நீயும் எனது இன்னொரு நிழல்தான்
விலகினாலும்
கலந்து விடுவாய்
எனும் நூலளவு
நம்பிக்கையில் நான் …
ஒன்று என்னைத் தூங்க விடு
அல்லது தொலைய விடு
” கிடைத்து விட்டது வாழ்ந்து விடுவோம்” என நகர்த்துவதற்கு
வாழ்க்கையைப் போல
அவ்வளவு எளிதானதல்ல
தனிமையில் என்னோடு விழித்திருக்கும்
ஒற்றை இரவு…
2
” வாசல் ”
கருவறையின் கன்னி வாசல்
கல்விக்கான அறிவு வாசல்
உயர் கல்விக்கான கனவு வாசல்
வாழும் வீட்டின் பிரதான வாசல்
கோயிலின் சந்நிதி வாசல்
இரவின் கறுப்பு வாசல்
இளமையின் புன்னகை வாசல்
நட்பின் நேச வாசல்
பயணத்தின் தனிமை வாசல்
வேலையின் வருவாய் வாசல்
அரசியலின் கருத்து வாசல்
அதிகாரத்தின் ஆணை வாசல்
ஆட்சியின் சட்ட வாசல்
அறிவியலின் நவீன வாசல்
அத்தனை வாசல்களும்
இவர்களுக்கு வசப்பட்டது
திறவுகோல்களால் அல்ல
போராட்டங்களால்…
ஊதாங்குழலை உதறிவிட்டு
புல்லாங்குழலைக் கைப்பிடிக்க
அவர்கள் நடந்து வந்த பாதை
நந்தவனமல்ல
முள்காடு
மண் வெளியிலிருந்து
விண் வெளிவரை
தடம் பதித்திருக்கும்
சாதனைப் பெண்களுக்கு
இனிய வாழ்த்துகள்…
பெண்கள் தின வாழ்த்துகளை
எழுதி முடித்த
உற்சாகத்துடன் எழும்புகிறேன்
” கோயிலுக்குப் போய்ட்டு வர்ரேங்க”
என்றாள் மனைவி
” என்ன அவசரம்? அடுத்த வாரம் போகலாம் ” என்றேன் நான்
காகிதத்தில் இருந்த
எனது வாழ்த்தையும்
எழுதிய என்னையும்
மாறி மாறி பார்த்தவள்
கோபம் கொப்பளிக்க சொன்னாள்
“நீங்..களு..ம்… ஒங்க பெண்ணியமும்…”