வாத்தி தனுஷூம்… நினைவுகள் அழிவதில்லை நாவலில் வரும் மாஸ்டரும்… – ஹேமாவதி

வாத்தி தனுஷூம்… நினைவுகள் அழிவதில்லை நாவலில் வரும் மாஸ்டரும்… – ஹேமாவதி




பொழுதுபோக்குக்காகப் பார்க்கும் படத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்வது என்பது அபூர்வம். அப்படி கருத்து மட்டும் சொல்லாமல் நடைமுறையில், ஏற்படும் சிக்கலை எப்படி எதிர்கொண்டு போராடுவது என்பதை சொல்லும் படமாக தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் உள்ளது.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற காரல் மார்க்சின் வார்த்தையை நினைவுப்படுத்தும் வகையில் வாத்தி படம் இருந்தது.

அனைவருக்கும் சமமான கல்விக்காக போராடுவது, தனியார்மய கொள்ளைக்கு எதிராக களத்தில் நிற்பது, இதனால் வேலை இழந்து பழிவாங்கப்பட்டாலும் தான் கொண்ட லட்சியத்தை நோக்கி பயணித்து வெற்றி பெறுவதுதான் வாத்தி கதை சுருக்கம். சிறந்த திரைப்படத்தை எடுத்த இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள்…

ஒரு ஆசிரியர் நினைத்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்த்த முடியும் என்பதை பார்க்கும்போது 1940களில் இந்திய விடுதலைக்கு முன் கேரள மாநிலம் கையூரில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதிலும் ஒரு மாஸ்டர் இருப்பார் அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவரின் செயல்பாட்டால் ஏற்படும் ஒரு தியாக வரலாரே “நினைவுகள் அழிவதில்லை” என்ற நாவல்.

ஆங்கிலேயர்களின் தேவைக்காக இந்திய மக்களுக்கு கல்வியை தர நினைத்தனர். ஆனால் அப்போது இந்திய கிராமங்களை ஆளும் பண்ணையார்களும்,நிலப்பிரபுக்களும் ஏழை எளிய மக்களுக்கு கல்வி சென்றடைவதை விரும்பவில்லை.

ஏழை எளிய மக்களை குடும்பத்தோடு உழைப்பில் ஈடுபடுத்தி அவர்களை முதலாளிகளின் கட்டுப்பாட்டில் அடிமைகளாகவும் விசுவாசிகளாகவும் வைத்திருந்தனர்.

இந்த நிலையில்தான் விவசாய மக்களின் அறியாமையை போக்க அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி வழியாக நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்தியம் எப்படி எல்லாம் ஏழை மக்களை சுரண்டுகிறது என்பதை விளக்கும் விதத்தில் கம்யூனிஸ்டுகள் மக்களிடம் போதிப்பதை ஒரு கடமையாகவே செய்து வந்தனர்.

அப்படி கல்வி போதிக்க வந்த மாஸ்டர் சாதாரண விவசாயக் கூலிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி மக்களின் அறியாமையை போக்கி கையூரை உலக சரித்திரத்தில் இடம் பெற வைத்த ஒரு நீண்ட வரலாறுதான் கையூர் தியாகிகள் வரலாறு.

கல்வி அறிவு மற்றும் அரசியலை கற்று தந்து, ஸ்தாபனமாக்கி தங்களின் உரிமைகளுக்காக ஒற்றுமையாக செயல்பட்டு நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்க விவசாயிகள் போராடுகின்றனர்.

இதனால், அதிகாரமும் ஏகாத்தியபத்தியமும் நிலப்பிரபுவத்துவமும் ஒன்றிணைகிறது .

மாஸ்டரிடம் கல்வி கற்ற நான்கு இளைஞர்கள் அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு, அபுபக்கர் போன்ற தோழர்கள்

ஏகாதியத்தியத்தை எதிர்த்ததால்

29.03.1943ல் தூக்கிலிட்டனர். திரைப்படத்தில் கிடைக்கும் வெற்றி நிஜ வாழ்க்கையில் கிடைப்பதில்லை. ஆனாலும் அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்கள் தங்களின் உயிரை துச்சமாக நினைத்து போராடிய இவர்கள் புரட்சியாளர்களே…

வாத்தி திரைப்படத்தில் ஆசிரியராக வரும் தனுஷ் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக சீர்திருத்தவாதியாகத்தான் உணர முடிகிறது. இப்படம், களத்தில் வேலை பார்க்கும் செயல்பாட்டாளர்களுக்கு பெறும் உற்சாகத்தையும் நன்னம்பிகையையும் ஏற்படுத்துகிறது. எந்த பிரச்சனை வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க ஊக்கமளிக்கிறது.

அதேபோல நினைவுகள் அழிவதில்லை நாவல் புத்தகத்தில் வரும் மாஸ்டரை பார்க்கும்போது சமூக மாற்றத்தை புரட்டி போடும் புரட்சியாளனாக பயணிப்பது எம் போன்ற தோழர்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் மனநிறைவு ஏற்படுகிறது.

இந்திய விடுதலை முன் தொடங்கிய இந்த ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறை இன்று வரை தொடர்கிறது. காலங்கள் மாறினாலும் வடிவங்கள் மாறினாலும் அதன் சுரண்டல் மட்டும் மாறவில்லை என்பதே நிதர்சனம்.

ஹேமாவதி