நூல் அறிமுகம்: தேன்மொழி தாஸின் ’வல்லபி’ கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: தேன்மொழி தாஸின் ’வல்லபி’ கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்




தேன்மொழி தாஸ் அவர்களே..

முதல் நான்கு கவிதைகளை தான் வாசித்தேன்..

“கருவறைக்குள் மிதக்கும் வெளிச்சத்தை பூமியில் ஊற்றுவது”

“இமையினுள் உருளும் காதல் கண்களுக்கு
கடுகு தோலின் மினுமினுப்பு ”

“முத்தத்தின் மாய வெப்பம் பெருமூளையின் அறைக்கோளங்களில் விளையாடும் பரிசுத்த ஆவி..”

எப்படி இப்படி எல்லாம்
யோசிக்க முடிகிறது தேன்மொழி தாஸ் உங்களால்.

“மனதின் வெடிப்புகளுக்கு சாந்து பூசுதல் எனும் ஆராதனை
தாயின் மடியில்..”

“கண்ணிதழ் கருணை கொண்டது
குளிர்ந்த சொற்களை..”

“அடைக்கலான் குருவிக்கு கிளை மூடும் இருள் தான் இரவு..”

“ரகசியத்தை வலம்புரி சங்கில் வைத்தால்
மூங்கில் உப்பை குடித்தால்..”

“அன்பின் மறைபொருள் நுண்மொழி..”

“பருந்தின் விருந்து சதை..”

சுண்டங்கோழிகள் உடலில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்தின் வண்ணத்தை
“சலிக்கஇயலாத நிறமணல்..

எதிரில் உயிர் பிடித்து இருக்கும் ஏதோ ஒன்று மூச்சு விடுவதை நம்மால் உணர முடியும்
ஆனால் தேன்மொழிக்கு.?!

“நினைவின்உருவம் விடும் மூச்சு..”

ப்பா..

“வறுமையின் உப்பு”

இளவெயில்
“அனலியின் நுனி இதழ் முத்தம்”

“மேற்கின் குடுமி
கிழக்குச் சீவ தவிக்கையில்..”

இருட்டின் முடிவையும் ஒளியின் தொடக்கத்தையும் கவிஞர்.

மரண கதியை ஒரு மத்தளச் சத்தத்தில் ஏற்றி..
கவிதை புனைந்திருக்கிறார் தேன்மொழி.

“குணப் பிழையான நட்பு”

“பலநாகம் ஒருசேரச் சீறும் விதமாய் தேனீக்களின் தவம் கலைதல்”

“மரக்கட்டைகளில் ஈத்தல் குச்சிகளால் இசை எடுக்க”

“ஈக்கள் கலைய கலைய காடு அசையும்”

இப்படியே வாசித்த நான்கு கவிதைக்குள்ளும்.

அய்யோ..
உங்கள் எழுத்துக்கள் என்ன விதமான
நினைவுகளை கண்களுக்குள்ளும் மனசுக்குள்ளும் பூசிச் செல்கிறது.. இழுத்து வருகிறது..ஓங்கி அறைகிறது ஏறி மிதிக்கிறது
யோசிக்க முடியல என்னால்.
வானத்தின் அதிஉச்சத்தில் பறக்கும் பருந்தின் உயரத்திற்கு அடர் மரங்களை கொண்டிருக்கும் காட்டிற்குள்
பேரன்போடு பல இடங்களிலும், ஆத்திரத்தின் உச்சத்தில் இழுத்துக் கொண்டும், சலசலக்கும் அருவி நீரை முகத்தில் தெளித்தும், பனிக்குடத்தின் வெடித்த ஒழுகும் நீராய் அடர் தேன் கூட்டின் ஒழுகும் தேனை காய்ந்து கிடக்கும் உதட்டில் காதலியின் ஈரமுத்தமாய் கொடுத்துக் கொண்டும்..

கவிதைக்குள் என்னை முழுவதுமாய் ஒப்புவிக்க அதற்கான இலகுவான மனசு தேவைப்படுகிறது..
நினைவுகள் அலைபாயாமல் ஒருமுகப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்..

உங்கள் கவிதைகள் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு முறையும்
வித விதமாக கொன்று புதைக்கிறது
என்னை சிதைக்கிறது.. வடிவாக முளைக்க வைக்கிறது..
திமிரு கொண்டு எழ வைக்கிறது..
பேரன்பின் கால்களில் நெடுஞ்சான் கிடையாக விழ வைக்கிறது..

மனசுக்குள் தீயை மூட்டுகிறது..
கண்களுக்குள் நூறு நூறு நிலாக்களை கொண்டு வருகிறது..
ஆயிரம் ஆயிரம் சூரியன்களை தோள்களுக்குள் ஏற்றி வைக்கிறது
நெஞ்சு நிமிர வைக்கிறது

விடியற்காலையின்
இருட்டில்.. பெயர் தெரியாத பறவையின் சிறகசைக்கும் சபதத்தோடு தன் கூட்டுப் பறவையை தேடி அழைக்கும் அழைப்பில் மனதை லயிக்கச் செய்து.. ஒற்றைப் பறவையின் கூடவே
ஆழ்மனதையும் பறக்க விட்டு தவிக்க விட்டு சிதைக்க விட்டு மகிழவிட்டு உங்களின் கவிதையை
வாசித்து அந்த ஒரு நாள் முழுவதும் உங்கள் புதுப்புது வார்த்தைகளோடு
வெறும் தேநீரோடவும் சிகரெட் உடனும் கழிக்க வேண்டும்..

ஒவ்வொரு நாளும் ஒரு கவிதையாக வாசிக்கப் போகிறேன்.

வல்லபி
இன்பம்.. வலி.. சுகம்.. அழுகை..
ஆத்திரம்.. கோவம்.. இரத்தம்..கண்ணீர்..
அடர் மலை.. ஆழ் துளை.. காட்டருவி..
சலசலக்கும் நீரோடை.. மகிழம்பூ நாற்றம் எரியும் பிணத்தின் வாசம்..

-கருப்பு அன்பரசன்

நூல் : வல்லபி கவிதை தொகுப்பு
ஆசிரியர் : தேன்மொழி தாஸ்
விலை : ரூ.₹150/-
பக்கங்கள்: 103
வெளியீடு : ஏழுத்து வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]