Vanjanai Novel Book By Ma. Balamurugan Bookreview By V. Shankar நூல் அறிமுகம்: மா.பாலகுமரனின் வஞ்சனை நாவல் - வே.சங்கர்

நூல் அறிமுகம்: மா.பாலகுமரனின் வஞ்சனை நாவல் – வே.சங்கர்




வஞ்சனை நாவலின், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் அனுபவத்தின் ஆழத்தையும், ஆக்ரோசமான மனப்போக்கையும் மிக நுட்பமாக முன்வைக்கிறது.  அதன் தாக்கமும் வலியும் வாசிப்பாளர்களின் மன உறுதியை பதம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறது. இந்நாவல் ஆரம்பம்,  எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தேவைக்கேற்ற திருப்பங்களுடன் நகர்ந்து சென்றபோதும் கடைசிவரை விறுவிறுப்புக் குறையாமல் இருப்பதற்கு இந்நூல் ஆசிரியரின் சொல் வழமையே சாட்சி. 

சற்றே தடித்த, செக்கச்சிவந்த முன் அட்டையில் ஒரு ஆணின் பாதிமுகத்தைக் குறியீடாகக் கொண்டதோடு மட்டுமல்லாமல், மூன்று தனித்தனிப் பாகங்களையும், கூடவே ஒரு பின்கதையையும் உள்ளடக்கிய இந்நூல் முழுக்க முழுக்க தன் தாயைப் பறிகொடுத்த எட்வின் இமான் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு சுழன்றுகொண்டே செல்கிறது.

முதல்பாகம்,  சற்றேரக்குறைய ஆதரவற்ற சிறுவனான எட்வினுக்கு தங்க இடமும், உணவும் தந்து உதவும் கேவின் இபால் மற்றும் கேட்டலினா மற்றும் அவர்களது ஒரே மகன் கார்டல் பற்றியது.  எட்வினுக்கும் கார்டலுக்கும் இடையிலான உரையாடல் ஏராளமான தத்துவார்த்த விசயங்களை முன்வைக்கிறது. இதுபோன்ற உரையாடல்கள் கதையின் கடைசிவரை உடன் வருவதே இந்நூலுக்கான பலமும் பலவீனமும். இருவருக்கும் இடையிலான புரிதல் மற்றும் அன்பு பறிமாற்றங்கள் பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது.    

முன்வைக்கப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் அறிமுகமாகும் கதாபாத்திரங்கள் மிக ஆழமான கேள்வியை மிக எளிதாகத் தனக்குத்தானே கேட்டுக்கொள்வதும், அதற்கான பதிலைத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் சாமானிய மனிதனின் எதார்த்த மனதைப் பிரதிபலிக்கிறது.

இரண்டாவது பாகம், பார்டிலைன் நகரிலிருந்து வெயிண்ட் நகருக்கு வந்து ஐந்தாண்டுகள் கடந்த பிறகு எட்வின் இமானின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் கதையின் விறுவிறுப்பைத் தூண்டுகிறது. ஒரு சிறந்த பேச்சாளனான பிறகு அவன் மேல் பதியப்படும் வழக்கு மற்றும் அதிலிருந்து விடுபட எடுக்கும் முடிவுகள் என மேலும் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கி கதை நகர்கிறது.

மூன்றாவது பாகம், தி எலைட் என்னும் பத்திரிக்கை நிறுவனத்தில் பணியேற்ற பிறகு எட்வின் வாழ்வில் நிகழும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் தன் தந்தையின் மேல் இதுவரை கொண்டிருந்த வெறுப்பு எப்படி பாசமாக மாறுகிறது என்பதையும், தனக்கு ஒரு தங்கை இருப்பதையும் அவளே தன் வாழ்க்கையின் பிடிப்பு என்று மாறும் தருணத்தையும், அவளுக்குப் பாடம் சொல்லித்தர வரும் ஹலினாவின் மேல் கொள்ளும் காதலையும் மிக அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது.   

மா. பாலகுமரனின் முதல் நாவல் என்ற அடையாளத்துடன் அறிமுகமாகும் இந்நூலில், அவரே மனம் திறந்து சொல்லியிருக்கும் அல்லது ஆதங்கப்படும் “மனித உறவுகள் எத்தனை எத்தனையோ வழிகளில் பிணைந்து, தீர்க்க முடியாத வேதனைகளை தவிர்க்க முடியாமல் சந்தித்து, அதில் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி கண்டு வாழ்ந்தாக வேண்டும்” என்ற வரிகளுக்காகவே வாழ்த்துக்களைச் சொல்லலாம்.

மூன்று பாகங்களுக்குப் பிறகு ’பின்கதை’ என்ற தலைப்பில் இரண்டு அத்தியாயங்கள் கதைக்கான பலத்தை கூட்டிவிடுகிறது. முதல் வாசிப்பில், ஒரு கைதேர்ந்த  மொழிபெயர்ப்பாளரின் எழுத்தை வாசிக்கும் மாயை வாசிப்பாளனின் மனதைக் கவ்விச்செல்வதை ஒதுக்கித்தள்ள முடியவில்லை.   நகரத்தின் பெயரும் சரி, கதாபாத்திரங்களின் பெயரும் சரி, அவ்வப்போது இது தமிழ் நாவல்தானா? அல்லது மொழிபெயர்ப்பு நாவலா? என்று உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஒருவேளை, எழுத்தாளர் ஏராளமான மொழிபெயர்ப்பு நாவல்களை வாசித்ததன் தாக்கமாக இருக்க வேண்டும் அல்லது தனக்கான தனித்த மொழி நடை இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற விருப்பத்தின் பேரிலாகக் கூட இருக்கலாம். அதற்காக, இந்நாவல் தன் நேட்டிவிட்டியை இழந்துவிட்டது என்றும் சொல்ல முடியவில்லை. அதே சமயம், சொற்களின் கோர்வை இந்நிலத்திற்குச் சொந்தமானதுதான் என்பதில் சந்தேகமும் கொள்ளமுடியவில்லை. அப்படி ஒரு சரளமான சொல்லாடல்.

ஒரு சாமானியன் அல்லது ஒரு எழுத்தாளன் இச்சமுதாயத்தின் நடுவில் நின்று கொண்டு நாளெல்லாம் என்ன மாதிரியான வலிகளையும் நிராகரிப்பையும் சகித்துக்கொள்கிறான்,  ஏன் அவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை உள்ளார்ந்து சொல்லிக்கொண்டே நகர்ந்து செல்கிறது இந்நாவல்.

முதல் அத்தியாயத்தின் தொடக்கம் ஒரு கோணத்திலும் முடிவு மற்றொரு கோணத்திலும் இருக்கும்போதே, இந்நாவல் எந்த வகையைச் சார்ந்தது என்று தீவிர வாசிப்பாளனால் ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. அடுத்தடுத்துச் செல்லும் அத்தியாயங்கள், ஏராளமான முடிச்சுக்களை இயல்பாகவே பின்னிக்கொண்டு செல்வதும், கூடவே  அத்தனை முடிச்சுக்களையும் லாவகமாக அவிழ்த்தபடியே செல்வதிலும் மா.பாலகுமரன் தனிக்கவனம் ஈர்க்கிறார்.

ஒரு படைப்பாளன் தன் மன நுட்பத்தை எப்படி வாசிப்பாளனுக்கு கடத்துகிறான் என்பதில்தான் அவனது படைப்பின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகிறது. மொத்த மன எழுச்சியையும் தத்துவமாகவோ, அல்லது வெற்றுப் புலம்பல்களாகவோ கதாபாத்திரங்களின் வழியே கொட்டித் தீர்த்துவிட நினைப்பது பல நேரங்களில் வாசிப்பாளனுக்கு மனச்சோர்வைத் தந்துவிடக்கூடும்.

உரையாடல்கள் பல இடங்களில் செயற்கைத்தனமாக இருப்பதையும், தேவையற்ற விளிப்புகள் ஊடாடுவதையும் வளர்ந்துவரும் எழுத்தாளன் என்ற முறையில் கவனத்தில் கொள்ளவேண்டும்.  உதாரணத்திற்கு, “என் பேரன்பு எட்வின்! மன்னிப்பதற்கு என்னவிருக்கிறது:,  “அருமைமிகு எனதன்பு நண்பனே!”, “அன்புத் தோழனே, நான் வைத்திருக்கும் புத்தகங்கள் யாவும் ஆசிரியர் ஜோன்ச் பிரதிபார்னாவ் அன்பளிப்பாகத் தந்தது”, “நண்பா உன்னிடம் பல விஷயங்களைப் பகிரிந்துகொண்டுதான் ஆகவேண்டும்”, “என்னைத் தேடவேண்டாம் அன்புக் கணவரே”, “ நீ சிறப்புமிக்கவன், ஏனென்றால் வெகுதூரத்திலிருந்து இங்கு வந்திருக்கிறாய்”, போன்ற வரிகள் ஒரு கட்டுக்கோப்பான கடிதத்தை வாசிப்பதைப் போன்றதொரு உணர்வை அளிக்கிறது.

மேலும், கதை நகர்வுக்கேற்ற உரையாடல்கள் தேவைதான்.  அதை மறுப்பதற்கில்லை.  ஆனால், அதுவே அதீத உரையாடலாய் மாறி பல இடங்களில் திகட்டச்செய்கிறது. அதே சமயம், கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கான பெயர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கும் உக்தியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.  

நகரங்களின் பெயர்களும் சரி, சாலைகளின் பெயர்களும் சரி ஒரு மேற்கத்திய நாவலை மொழிபெயர்ப்பில் வாசிப்பதாகவே படுகிறது. மதம் சார்ந்த விசயங்களை உள்ளார்ந்து சொல்ல முயற்சிக்கும் போதும் குறிப்பிட்ட மதத்தைமட்டுமே மேலோட்டமாக சுட்டிக்காட்ட முடிந்திருக்கிறது. ஒன்று அவற்றைத் தவிர்த்திருக்கலாம் அல்லது அவற்றின் மீதான கண்ணோட்டத்தை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.

வஞ்சனை என்ற தலைப்பைக் கடைசி வரை தேடிக்கொண்டே செல்லும்போது ஒருவித சஸ்பன்ஸோடு கதையை முடித்திருப்பது மிகப்பெரிய திருப்பம் என்றே சொல்லவேண்டும். பல சுவாரஸ்யங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் நேர்மறை சிந்தனையோடு தெளிவாக எழுதியதற்காகவே இந்நூலை பலமுறை வாசிப்புக்கு உள்ளாக்கலாம்.  இந்நூல் பற்றிய அறிமுகக் கூட்டங்களும் விவாதங்களையும் பெரியளவில் கட்டமைக்கத் தேவையான அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது இந்நூல் என்றால் அது மிகையல்ல.

சுட்டிக்காட்டப்படும் அனைத்து விசயங்களையும் உள்வாங்கி அதற்கேற்ப ஒரு புனைவை எழுதுவது என்பது எப்போதும் ஒரு படைப்பாளனால் இயலாத காரியம். வாசகனைத் திருப்திப்படுத்துவதற்கு எழுதாவிட்டாலும், வாசகனை தன் எழுத்தின் வசம் ஈர்க்கவேண்டும் என்ற இலக்கோடு மா.பாலகுமரன் இன்னும் பல புதினங்களை வேறுவேறு நடையில் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு இவ்விமர்சனம் எழுதப்பட்டுள்ளது. நன்றி. 

நூலின் பெயர் : வஞ்சனை
நூலின் ஆசிரியர் : மா.பாலகுமரன்
வெளியீடு : விஜயா பதிப்பகம்
பக்கங்கள் : 356
விலை
: ரூ.300

வே.சங்கர்
(சிறார் இலக்கிய எழுத்தாளர் மற்றும் நூல் விமர்சகர்)