வராஹ ரூபம் சிறுகதை – இராமன் முள்ளிப்பள்ளம்
தாழ்வான மரக்கிளை தரைக்கு இணையாக நீண்டு கதிரவ ஒளியைத் தேடியது. சுதாமனுக்கு ஏற்ற இருக்கை, படுக்கை எல்லாம் அந்தக் கிளைதான்.. அழகிய உயர்ந்த மரத்தின் தாழ் கிளையில் அமர்ந்த சுதாமனுக்கு பசி வயிற்றில் முட்களை பரப்பியது. ஏற்கனவே குரு மாதா அவன் ஆசிரியரின் மனைவி கட்டிக் கொடுத்த அவல் முடிச்சில் ஒன்றை சாப்பிட்டு விட்டான். அதுவும் வாக்கு மீறிய செயல். மாதவனிடம் சொல்லியிருந்தான் அவன் வந்த பிறகே இருவரும் அவல் உண்ணுவோம் என. ஆனால் விடியலுக்கு முன் சென்றவன் திரும்பவில்லை. கதிரவன் சாய்வில் இருந்த வேளை பசி தாங்காமல் சுதாமன் தன் ஒரு முடிச்சை சாப்பிட்டான். இப்போது உச்சிக்கு வந்த கதிரவன் மேற்கு நோக்கி சாயத் துவங்கிவிட்டான். மிஞ்சியிருக்கும் அவல் மாதவனின் பங்கு. சுதாமனுக்கு மயக்கம் வருவது போன்ற நிலை. மோடம் போட்டது. மிதமான தூறல் துவங்கியது. கால்கள் நடுக்கத்தை ஏற்படுத்துவது போன்றதொரு உணர்வு. எங்கே போனான் மாதவன். உயிரோடு இருப்பானா இல்லை ஏதேனும் விலங்கு அவனை விழுங்கி விட்டதா ? சுதாமனுக்கு சினம் வந்தது. பசி வயிற்றை கிள்ளியது. அவன் கைகள் அவனும் அறியாமல் அவல் முடிச்சை அவிழ்த்தது. கைகள் அவலை வாயில் போட்டன. அப்படியே உறங்கிப் போனான். சிறு மழை நின்றது. அடர்ந்த மரத்தின் இலைகள் அவன் மீது மழை நீர் விழாமல் காத்தன. சற்று சூடாக காற்று வந்தது. விழித்தான் சுதாமன். தொலைவில் மனித உருவம். செவ்வானத்தின் ஒளி அவனை நோக்கி வந்தவனின் மீது பட்டு ஒளிர்ந்தது. கரு நீல மேனி கொண்ட அந்த இளைஞன் சிரிப்பதை அவனால் காண முடிந்தது. ’’ஆ மாதவன்.’’ வியந்தவன் விரைவாக கிளையிலிருந்து சரிந்து குதித்தான். விரைவாக ஓடி மாதவனை எதிர் கொண்டு அவனை மார்போடு தழுவினான், அழுதான். கேவிக் கேவி அழுதான்
“நிறுத்து சுதாமா, நிறுத்து! ஏன் இந்த ஒப்பாரி? ஒரு ஆண் மகன் எந்த நிலையிலும் அழக் கூடாது’’
’’விடிந்தும் விடியாத கருக்கலில் போனாய். இப்போது கருக் கூடல் வந்து விட்டது. சில நொடிகளில் கதிரவன் விழுவான், இருள் கவிழும், இவ்வளவு நேரம் எங்கு போனாய் மாதவா பெரும் பிழை அல்ல பெரும் பாவச் செயல் இரண்டு செய்து விட்டேன்’’ மீண்டும் அழத் துவங்கினான் சுதாமன்.
’’சுதாமா, கோழையின் செயல் அழுகை. நீ அந்தணன், அறிவை அபகரித்து கொண்ட குலம். எதற்கும் ஒரு வரையறை உண்டு. ஆனால் ஆண் அழுவது மூடச் செயல்.என்ன நடந்தது.’’.
’’நானே கொடுத்த வாக்குறுதி மீறி முதலில் என் பங்கு அவலை உண்டேன். மீண்டும் தற்போது சில நொடிகள் முன் பசி மயக்கத்தில் உன் பங்கு அவலையும் தின்று விட்டேன். உன்னை விலங்குகள் ஏதேனும் விழுங்கியிருக்குமோ எனவும் ஒரு ஐயம் எழுந்தது.’’
ஹ ஹ ஹா பலமாக சிரித்தான் மாதவன், ‘’சுதாமா என்னை எப்படி விலங்கு விழுங்கும் நான் விலங்கை விழுங்கி விட்டு வருகிறேன்’’
’’என்ன நடந்தது மாதவா’’
’’நான் இங்கிருந்து சென்றதும் தொலை தூரம் நடந்தேன். வெகு தூரம் சென்றதும் பெரும் யுத்த சத்தம் கேட்டேன். விலங்கின் உறுமலும் வந்தது. அத் திசை நோக்கி ஓடினேன். அங்கே நான்கோ அல்லது ஐந்து பேர் ஒரு வராஹத்துடன் முட்டி மோதி திணறிக் கொண்டிருந்தனர். அப்போது பார்த்து இன்னொரு வராஹம் அந்த இளைஞர் கூட்டம் மீது பாய்ந்தது. நானும் களத்தில் குதித்தேன். புதிதாய் வந்த வராஹத்துடன் கட்டிப் புரண்டு போரிட்டு அதைக் கொன்றேன். இதே நேரத்தில் அந்த சகோதர்களும் முதலில் அம்பு எய்தி வீழ்த்திய வராஹத்தை கொன்றிருந்தனர். அவர்களில் ஒருவன் அம்பு எய்தி வராஹத்தை வீழ்த்தியவன் சொன்னான்’’’
’’புதிய நண்பரே நான் அம்பு எய்த பின்னும் அதை உடலில் தாங்கிக் கொண்டு இந்த வராஹம் எங்கள் ஐவரையும் தாக்கியது. நீங்கள் வரா விட்டால் நாங்கள் அனைவரும் இரு வராஹங்களால் கொல்லப்பட்டிருப்போம், வாருங்கள் இரண்டையும் கூறு போட்டு இறைச்சி எடுப்போம்.’’
’’சுதாமன் தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு சொன்னான், ‘’ வேண்டாம் மாதவா இதற்கு மேல் ஏதும் சொல்ல வேண்டாம்’’
’’ஏன் சுதாமா’’
’’ஈஸ்வரோ சர்வ பூதானாம் வராஹம் தெய்வ ரூபம்’’
’’நீ பாவம் எதுவும் செய்யவில்லை என நான் கூற வேண்டுமே, அப்படியானால் நீ உன் பாவத்தை போக்க வேண்டாமா.’’
’’ஆம் உன் உணவை உண்டு நான் செய்த பாவம் மன்னிக்க முடியாதது மாற்ற முடியாதது’’
’’இல்லை சுதாமா நான் சொல்ல வந்ததை நீ முழுமையாக கேட்டால் உன் பாவம் தொலைந்து விடும்’’
’’அப்படியானால் சொல்’’ காதுகளை பொத்தியவாறே சொன்னான் சுதாமன்
மாதவன் சுதாமனின் காதுகளில் இருந்து அவன் கைகளை விடுவித்தவாறே சொன்னான், ‘’ கர்ணம் பந்தம் கதா பந்தம்’’ காதுகளை மூடிக் கொண்டால் கதையை மூடிய மாதிரி.. சொல்கிறேன் கேள்’’
‘’இரு வராஹங்களையும் கூறு போட்டு இறைச்சி துண்டாக்குவதில் அந்த சகோதர்களுக்கு உதவினேன். எல்லாம் முடிந்ததும் வாருங்கள், மலையைச் சுற்றி ஓடலாம் பின் வராஹ இறைச்சி உண்ணலாம் என்றனர். அப்போது கவனித்தேன் அவர்களுடன் இருந்த ஒரே பெண்மணி தீ கங்குகளை எற்படுத்திக் கொண்டு இருந்தாள். அருகிலிருந்த ஒரு சிறு மலையை சுற்றி சுற்றி ஓடினோம். நீண்ட நேர ஓட்டத்திற்கு பின் அந்த ஒரே பெண்மணியின் குரல் ஓங்கி ஒலித்தது
‘’ வாருங்கள் கனவான்களே வராஹ இறைச்சி வெந்து விட்டது.’’
’’நான் அவர்களுடன் சேர்ந்து ஏராளம் வராஹ இறைச்சி உண்டேன். அப்போது நான் அவர்களிடம் கற்றேன் விலங்குகளை புசிக்கும் முன் நீண்ட நேரம் ஓட வேண்டும் என்பதை. அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். நான் உண்ட இறைச்சி எப்படிப்பட்டது எனில் எனக்கு இன்னும் ஒரு வாரம் பசிக்காது. இப்போது சொல் நீ பாவம் செய்தாயா, இல்லை; நான் அவல் இன்றி வாழ முடியும், ஆனால் நீ என் பங்கு அவல் உண்டிருக்காவிட்டால் மரணித்து இருப்பாய். தற்கொலை பாவச் செயல். மேலும் நீ பசி மயக்கத்தில் சாப்பிட்டாய்..’’
சுதாமன் தடாலென்று மாதவனின் கால்களில் விழுந்து வணங்கி கூறினான், ‘’ யாதவ பிரபுவே நான் அவல் உண்ண வேண்டி தாங்கள் வராஹம் உட்கொண்டீர், நான் பாவம் செய்தேன் என்ற எனது அறியாமையை நீக்கீனீர்கள், என்ன கைமாறு செய்வேன் நான்.’’
‘’அந்தணா இப்போது நான் செய்தது பற்றி கூறு’.’
‘’ வராஹ ரூபம் மாதவ போஜனம், வராஹ ஒழிப்பு விவசாய செழிப்பு’’
நெடுஞ்சாண் கிடையாகா விழுந்திருந்த சுதாமன் எழாமல் அழாமல் புன்முறுவலுடன் சொன்னான்.
(வராஹம் — கொம்புகள் கொண்ட காட்டுப் பன்றி)