நூல் அறிமுகம்: வறீதையா கான்ஸ்தந்தின் ’கையறு நதி’ – அ.ம.அங்கவை யாழிசை

நூல் அறிமுகம்: வறீதையா கான்ஸ்தந்தின் ’கையறு நதி’ – அ.ம.அங்கவை யாழிசை



மனதை ஆற்றுப்படுத்தும் 
கையறு நதி.

வறீதையா அய்யா எழுதிய ‘கையறுநதி’ எனும் இப்புத்தகத்தைக் கடந்த வாரம் என் தந்தையிடம் இருந்து படிப்பதற்காகப் பெற்றேன். இப்புத்தகம் எதைப் பற்றியது என்பதை, தந்தையிடம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தேன்.

இப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய போது, மனப்பிறழ்வுக்கு உள்ளான தனது மகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு தந்தையின் வாழ்க்கைக் கதை என்ற சித்திரத்தையே வைத்திருந்தேன். ஆனால், படிக்கப் படிக்க என்னுடைய அந்தச் சித்திரம் பிறழ்வுக்குள்ளானது. அப்புத்தகம் மேற்கூறியவர்களைப் பற்றிய புத்தகமாக அல்லாமல், இந்தச் சமூகத்திற்கு அடிப்படைத் தேவையாக உள்ள படைப்பாகவே தோன்றியது. இச்சமூகம், மனப்பிறழ்வுக்கு உள்ளானவர்களைப் பார்க்கும் பலதரப்பட்ட பார்வைகளை இந்நூல் உணர்த்தியபோது மனம் கனத்துப்போனது.

மனப்பிறழ்வு என்றால் என்ன என்பதை இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும் வரை விளங்கிக் கொள்ளாமல்தான் இருந்தேன். நான் படித்த பள்ளியில் என்னோடு சகமாணவி இருந்தாள். அவளும் மனரீதியாகவோ அல்லது மூளை வளர்ச்சியிலோ பாதிப்பு உள்ள ஒருவள்தான். இரண்டு ஆண்டுகள் என் வகுப்பில் படித்தாள். அப்பொழுதெல்லாம் அவளுடைய அனைத்துப் பள்ளி வேலையிலும் உதவி செய்து வந்தேன். அவளைப் பற்றிய பரிதாபம், கவலை எல்லாம் இருந்தது.

நான் நினைப்பேன், இந்த வயதில் கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் குழந்தையைப்போல் இருப்பது வரமல்லவா? நான் அதற்குக் கொடுத்துவைக்க வில்லையே எனப் பொறாமைப்படுவதுண்டு. ஆனால், அவள் மற்றவரிடம் உள்ளதை நினைத்து எத்தனை நாள் பொறாமைப்பட்டிருப்பாள்; கவலைப்பட்டிருப்பாளோ நான் அறியவில்லை. கண்களுக்கு அகப்படாதவாறு இந்தச் சமூகம் அவர்களைப் புறக்கணிக்கிறதா? மறைக்கப்படுகிறார்களா? இல்லை மறைந்து கொள்ள விருபம்புகிறார்களா?

இவ்வுலகில் உள்ள பெருவாரியானவற்றைப் பற்றிய படிப்பினை எனக்குண்டு என்று நினைத்துக்கொண்டிருந்தவள் நான். ஆனால் நான் வாழும் அதே சமூகத்தில் என்னோடு வாழும் ஒரு பகுதியினரைப் பற்றி அறியாமலிருந்தது வெட்கித் தலைகுனிய வைத்தது.

இப்புத்தகம், என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய சில புத்தகங்களுள் ஒன்று. இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கையில் நான் ஒரு உளவியல் ஆற்றுப்படுத்துதல் அமர்வில் இருந்து வெளியில் வந்தது போல இருந்தது. ஏனோ தெரியவில்லை அந்த அமர்வு எனக்கு மிக அவசியமாகவும் இருந்தது.

இப்புத்தகம் பேசும் மொழியின் நடை மிக அருமையாகவும் பொருத்தமாகவும் இருந்தது. வறீதையா அய்யா அவர்களின் பேச்சு, அவர் என்னுடன் தொலைபேசியில் பேசும்போதும் அருமையாக இருந்தது.

வாழ்க்கை என்னும் தண்டவாளம் எவ்வளவு மோசமாகப் பிறழ்வுண்டாலும், அதன் மீது பயணித்தாக வேண்டும். எங்கு அழைத்துச் செல்கிறதோ, எதைக் காண்பிக்கிறதோ, அதை எப்படி நாம் காண்கிறோமோ, எப்படிப் புரிந்துகொள்கிறோமோ, பார்த்துக் களித்துச் செல்லவேண்டியது தான். எப்படியானாலும் பயணித்தே ஆக வேண்டும்.

உளவியல் சம்பந்தமான புரிதல், அதில் மாற்றம் உள்ளவர்கன் இன்னல், அவர்களைப் பராமரிப்பவரின் உளவியல், அவர்களைப் பற்றி இச்சமூகத்தின் புரிதல் எனப் பல வாயிலாக இப்புத்தகம் பேசியிருக்கிறது.

நல்ல நல்ல அனுபவங்களை இந்நூலில் கற்றுக்கொண்டேன். வறீதையா அய்யா அவர்களுக்கு நன்றி.

– அ.ம.அங்கவை யாழிசை

நூல் : கையறுநதி
ஆசிரியர் : வறீதையா கான்ஸ்தந்தின்
வெளியீடு : கடல்வெளி பதிப்பகம் 
பதிப்பு : முதல் பதிப்பு 2022
விலை : ரூ 220/- 
தொடர்புக்கு: 24332924