பா. மகாலட்சுமியின் கவிதைகள்
வாசனை
************
விற்றுவிட்ட
எங்கள் பூர்வீகத் தோட்டத்தை
பார்த்துவிடும் ஆவலோடு
நிலத்தில் கால்பதிக்கிறேன்
மலையடிவார
கட்டாந்தரையை
கல் முள்ளகற்றிப் பண்படுத்திய
அப்பாவின் குரல்
அங்கு கேட்கிறது
வலப்புற ஓடைப்பகுதியில்
பருத்திச் செடியில்
வெடித்துச் சிரிக்கிறார்
அண்ணன்
ஐந்து வயதில்
கருணைக் கிழங்கின்
விரிந்த இலைகளில்
நான் ஒளிந்து விளையாடிய இடத்தில்
தென்னை மரங்கள்
பாளை விட்டிருந்தன
வரப்புகளில் படர்ந்துகிடந்த
மூக்குத்திப் பூக்களெல்லாம்
என் அக்காமாரின் முகப்படங்கள்
கிணற்றுத்தண்ணீர்
அன்றுபோலவே
பாதங்களை எடுத்துக்கொண்டு
வாய்க்காலில் ஓடியது
அம்மா நட்டுவைத்த
மாமரமொன்றில்
எனக்குப் பிடித்த
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது
நிலங்கள்
கைமாறிக் கொண்டே இருந்தாலும்
அழியாமல் இருக்கின்றன
வாழ்ந்தவர்களின்
வாசனை
வடக்குத்
தோட்டத்திலிருந்து
வருடத்திற்கொருமுறை
சேவலறுத்துப் பொங்கலிடும்
புற்றைப் பார்த்தபடியே
வெளியேறுகிறேன்
நலம் விசாரிப்பதுபோல்
என்மீது
வந்து உதிர்கிறாள்
வேப்பம்பூக்களாய்
அம்மா.
***********

விதையை நிலத்திலுமாய்
வளர்த்தெடுத்தவள் அவள்