நதியலைகளில் மிதந்து செல்லும் மலர்கள்
_______________________________
(1)
இதயம் படபடக்கிறது
எண்ணங்கள் கொந்தளிக்கின்றன
உன் வருகையை எதிர் நோக்கி…
விளக்கில்
சுடர் அணையத் தடுமாறுகிறது
அன்பை அதில் ஊற்ற வா
வாழ்வு பிரகாசிக்க…
உன் விழிகள் எய்த கணைகள்
என்னுள் ரணமாய்
இதழ்களால் நீ மருந்திட
நான் சொஸ்தமடைய வேண்டும்…
மனச் சாளரத்தை
சற்றுத் திறந்திடு
அன்பு கமழ் காற்று
என்னைத் தழுவட்டும்…
காய்ந்து கிடக்கும் என் உள்ளத்துள்
துளி ஈரமாவது சிந்தி விடு
உயிர் குளிரட்டும்…
கனவுகளில் மட்டும் வருவாயென்றால்
என்னுள்
பிறாண்டும் வலிகளை
சகிக்க இயலவில்லை.
(2)
உன் சிரிப்பு
என்னுள் பூக்களை வருஷிக்கும்
உன் வார்த்தை
என்னுள் இசை மீட்டும்
உன் நேசம்
என்னுள் சந்தோஷக் காற்றாகும்
உன் நெருக்கம்
என் கனவுகளை நிஜமாக்கும்
உன் அன்பு
என் கவிதைகளைச் செழிப்பாக்கும்
உன் வாழ்த்துக்கள்
என் இதயத்தில் ஒளியேற்றும்
என்னுள் கலந்து கிடக்கும் நீ
வானவில்லாய்
என் இதயத்தில் உதிப்பது
இன்னும்
என் கனவுகளுக்குள் மட்டும் தானா ?
(3)
ஒரு அழகான கவிதை சொல்
பூந்தோட்டம் காத்திருக்கிறது
வாழ்க்கைப் பூக்கள் பூக்கட்டும்
வீணையின் தந்தியில்
உன் தொடுதலால்
என் மனம் அதிர்கிறது
நீருக்குள் மூழ்கியது போல்
திணறும் கணங்களை
இதழ்கள் நீட்டிக் காத்திடு
பேரொளியின் கனவே
துள்ளும் உன்விழிகளில்
ரம்மியம் தளும்புகிறது
இறைபடும் புன்னகையில்
இனிக்கும் கனிகள் கனிகின்றன
நெருப்புக் துண்டங்களின் மீது
நான் நின்றிருக்கிறேன்
எந்தக் கடல் அலை நீ ?
எப்பொழுது திரும்புவாய் ?
இந்தக் கரை காத்திருக்கிறது.
(4) மணப்பலி
__________________
மலர்ந்த சூடு
தணியவில்லை…
வண்டுக்கு
வாசஸ்தலமாக்கினீர்கள்.
குட்டிப்பருவத்தை
கழுவிய ஈரம்
காயவில்லை…
மூக்குவாரிட்டு
ஒருவனுக்கு
சவாரிக் குதிரையாக்கினீர்கள்.
மிஞ்சியால்
விலங்கிட்டீர்கள்.
மஞ்சளும் குங்குமமும்
மின்னும் முகத்தில்
கண்ணீரையும் கவலையையும்
அப்பினீர்கள்.
சிரிப்பை
பிடுங்கிக் கொண்டு
சோகத்தை தந்தீர்கள்.
இப்போது ஏன்?
கண்ணீர் வடிக்கிறீர்கள்.
இழந்ததற்காகவா…?
இல்லை
அழித்ததற்காகவா…?
(5)
அன்பு சூழ் உலகு
___________________________
கொலைக் கருவிகளோடு
குரூரமாய்
வெறி கொண்டலையும்
மரணக் கூலிகளே…!
உங்களிடம் தான்
இந்த உரையாடல்…
சற்று நில்லுங்கள்..
சற்று யோசியுங்கள்..
உதிரம்
சிந்துவதால்
உங்கள் கனவு
நிஜமாகுமா..?
உலகம்
சிதைந்து போவதால்
உங்கள் வன்மம்
தீருமா..?
அன்பு, கருணை, அகிம்சை
என்பது
வாழ்வின்
வேதம் …
ஆனால்_
அரிவாள்கள் ஏந்தி
ஆடு வெட்டுபவர்களாய்
மனிதர்களை வெட்டிட
அலைகிறீர்களே…!
ஆன்மீகம், மனிதநேசம் என
ஆயிரம் சித்தாந்தங்களை
அனுதினமும்
கோஷிக்கிறது
நேசத்தின் பெரும் வாழ்வு
ஆனால்_
சக உயிர்கள் மீது
ஏன்…? நீங்கள்…
சிநேகம் கொள்ள மறுக்கிறீர்கள்.
உரையாடலை
புறக்கணித்து விட்டு
யுத்தம் செய்திட
நீங்கள் முனைகையில்..
உடுக்கை ஒலித்து
ருத்திரர்களாய்
கிளம்பாமல்..
ஒரு போதும் மனிதம்
பிரார்த்தனைகளை
உருப்போடாது
உக்கிரமான புயலாய்
வீறு கொண்டெழும்…
உங்களின்
ஆயுத சித்தாந்தங்களை
உருத் தெரியாமல்
துடைத்தெறியும்…
அழிவு விரும்பிகளே…!
சற்று நில்லுங்கள்..
சற்று யோசியுங்கள்..
உலக நேசமே
இக வாழ்வு முறை
மனிதப் பரிணாமமே
உயிர்ப்பின் நடை முறை.