வசந்ததீபனின் கவிதைகள்
பித்தாய் பெருகுதடி உன் நினைவு
***************************************
நீ தான் என் கவிதையூற்று
நீ தான் என் கற்பனைகளின் பெருங்கடல்
நீ தான் என் கனவுகளின் அமுதசுரபி
காதலின் வலி
கசப்பாகவும் இருக்கும்
இனிப்பாகவும் மாறும்
என் இதயத்தை எடுத்துக் கொண்டாய்
என் உயிரைப் பறித்துக் கொண்டாய்
உன் முத்தத்தையாவது எனக்குக் கொடு
நெஞ்சுக்குள் நீ
நுழைந்ததை அறியேன்
நான் திக்கு முக்காடித் தவிக்கிறேன்.
முள்ளாய் பார்க்காதே
பூவான என் மனம் காயமாகும்
ஒட்டடைகளை நீக்கி விடு
வர்ணம் தீட்டி அழகுபடுத்து
உன் உள்ளத்துள் வசிக்க
நான் வருகிறேன்
என் இதயத்தைக் கொண்டு வா
உன் இதயத்தை தருகிறேன்
திருடியவைகளை
திரும்பப் பெற்றுக் கொள்வோம்
கண்ணீர் மழையில் நனைகிறேன்
காதல் தெருவில் அலைகிறேன்
காலமெல்லாம் தடுமாறி
கசந்த வேதனையில் விழுகிறேன்
தனித்த ஊஞ்சல் நான்
ஆட்டும் உள்ளத்திற்காக ஏங்குகிறேன்
ஆட்டுவித்தால் ஆடாதோ கண்ணே
வாடைக்காற்றிற்கு சற்று விடைகொடுப்பாயா ?