வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




பெயரற்ற காலம்
********************
என் பெயர் சொல்லி…சொல்லி
யார் யாரோ அழைக்கிறார்கள்
அழைத்தவர்களை இன்னும்
யாரென்று அறிய முடியவில்லை
என் பெயர்
எனக்கு மறந்து
போய்க் கொண்டிருக்கிறது
ஆளற்ற காடுகளில்
காருண்யத்தின் பெரு மழை
பெருக்கெடுத்துப்
பாய்கிறது நதியாய்…
பள்ளத் தாக்குகளில்
நேசத்தின் எதிரொலிகள்
மனிதரோடு கலந்து வாழ்வதில் தான்
அன்பின் அர்த்தம் பிரதியாகிறது
பூ பூவா பறந்து திரியும்
பட்டுப் பூச்சிகளின் கோலாகலத்தில்
மலையைத் தாண்டி எட்டிப் பார்க்கிறது
நிறங்கள் இணைந்த வானவில்
அலைகளின் மீது நுரைகள் போல
சிறு சிறு நண்டுகள்
படகுத் துறையில் கூடிக்கிடக்கும்
படகுகளின் மீது கடற் பறவைகள்
கனவுகளைத் தொட்டுப் போகின்றன
தீராத துக்கங்களின்

குளம்படிச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
மனதுள் தேடிப் பார்க்கிறேன்
யுத்தமெனும் மாயரக்கனின்
அழியாத காலடிச்சுவடுகள் ஒளிர்கின்றன
குருதி வண்ணத்தில்….
சிதைந்து கிடக்கும்
மனித உறுப்புகளின் சிதிலங்கள்
வாழ்வின் கரைகளில்..
காற்று வருகிறது
காற்று போகிறது
இலைகள் நடுங்குகின்றன
வானத்தில் பறவைகள்
பறந்து எங்கோ போகின்றன.

பூஜ்யக் கனவுகள்
*********************
பனிக்குடம் உடலின் கவசக்கூடு
மெல்லத் தளும்பித்தளும்பி அலைகிறது
பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை
முகிழ்த்துகிறது
நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தானது
ஆட்கள் ஓடி வந்தார்கள்
உடல்கள் தவிர எல்லாம் களவு போனது
சொல் விஷம் பருகினாள்
நாக்கில் பாம்புகள் துள்ளின
வானத்தைப் பிடிக்க வலை வீசினேன்
சில மேகங்கள் மட்டும் சிக்கின
கையில் எடுக்கையில் பறந்து போய்விட்டன
போனது வாழ்க்கை
காட்டுக்கிழங்கைத் தேடி அலைந்ததில்
புளிச்சிப்பழங்கள் கிட்டின வேட்டையாடுகின்றன மணிப்புறாக்கள்
பசி பிடுங்கித் தின்ன
வேடிக்கை பார்க்கிறான்
புன்முறுவல் காட்டினால் புன்னகைப்பேன்
வணக்கம் சொன்னால் வணங்குவேன்
எளிய மனிதனுக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை
போராளி போராளி என்று பீற்றுகிறான்
போராட்டமென்றால் பதுங்கு குழி தேடுகிறான்
பதுங்கித்தான் புலி பாயுமாம்
தனிமையைக் குறித்து வருத்தப்படுகிறேன்
என்னை நினைத்து தனிமை ஆதங்கப்படுகிறது
எங்களைப் பற்றி எவரும் வேதனைப்படவேண்டாம்
முகத்தில் பல முகமூடிகள்
தலையில் கனத்த கிரீடம்
பத்துகாசுக்கு பிரயோஜனமில்லை என புலம்பும் எழுத்தாள சக்கரவர்த்தி(னி)கள்
தேவதைகள் அரக்கர்களிடம் சிக்குகிறார்கள்
தேயும் நிலவாய் சிதைக்கப்படுகிறார்கள்
திடீரென்று காணாமலாக்கப்படுகிறார்கள்.

இறகு நடனம்
****************
மேகத்தில் என் உயிர்
பூமியில் என் உடல்
மழையாய் உயிர்த்து நடனமாகிறேன்
உன் சமாதானங்கள் ஆறுதலாயில்லை
உன் தேற்றல்கள் வலியை தீர்க்கவில்லை
முறிந்த கிளையாய் துவள்கிறேன்
சட்டென்று விலகிப் போனாய்
பட்டென்று உதிர்ந்து வீழ்ந்தேன்
மண்ணாவதைத் தவிர வேறு வழியில்லை
நதி என்ற ஒன்று இருந்ததாம் ?
நிரம்பித் ததும்பி நீரென்பது ஓடியதாம் !
நான் படிக்கிற புத்தகத்தில் இன்னும் என்ன என்னவோ…
வனம் கேவுகிறது
மலைகள் கசிகின்றன
சுடு காற்றாய் பெருமூச்செறிகின்றன மரஞ்செடி கொடிகள்.

தீராத கவலை
*****************
பல்லிளித்து எச்சில் வடிய சிரிக்கும்
கடைவாய் நக்கி சப்புக்கொட்டும்
பெண் கண்ட ஆண் நாய்
ஆண்மை என்பது பெண்மையைப் போற்றுவதாகும்
பெண்மை என்பது ஆண்மையை நேசிப்பதாகும்
போற்றுதலும் நேசித்தலும் வாழ்வை பூஜிப்பதாகும்
எங்கிருந்தோ வருவார்கள்
எதிர்பாராமல் உதவிடுவார்கள்
வந்த சுவடு தெரியாமல்
வந்த வழி போவார்கள்
என் படகை மிதக்க விட்டிருக்கிறேன்
இதயம் லேசாகிப் பறக்கிறது
பயணத்தை தொடங்க வேண்டும்
தடுமாறித் தடுமாறி விழுகிறேன்
கைதூக்கிவிட தனிமை பதறி ஓடிவருகிறது
மனசெல்லாம் தவிப்பு
ஜன்னலருகே அமர்ந்திடணும்
ஓடிச்செல்லும் காட்சிகளோடு பறக்கணும்
வாகனப்பயணத்தில் நான் பறவையாகணும்
என்னை அறிந்தவர்களுக்கு புரியவைக்கமுடியவில்லை
என் நட்பு சுற்றத்தினருக்கு விளங்க வைக்க முடியவில்லை
கவிதை எழுதுவது நானல்ல என்று.

வசந்ததீபன்

மீதம் இருக்கும் வாழ்வு கவிதை – வசந்ததீபன்

மீதம் இருக்கும் வாழ்வு கவிதை – வசந்ததீபன்




வலி தாங்கு
விசை கொண்டு எழு
உன் கனவுகளை மெய்ப்பி
காதல் வலி
இதயங்களில் உலாவும்
கண்ணீர் ஊற்றெடுக்கும்
கசிந்து கசிந்து மெதுவாக விசும்பும்
கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்
காதலில் கரைந்தோடும் இதயம்
காற்றாய் அலையும் அன்பின் ஆவி
மகத்தான சல்லிப்பயல்
வேளா வேளைக்கி சாப்பிடுகிறான்
தூக்கம் வராமலே
தூங்குவதாய்ச் சொல்கிறான்
என் சொல் உன் சொல்
வன் சொல் தீர்ந்திட மென் சொல்
முளைக்கிறது இன் சொல்
வெட்கத்தைத் தின்றுவிடு
வெட்கம் தின்றுவிடும்
வெட்கமே காதலின் சத்ரு
கடந்து போவது விடுதலையின் களிப்பு
கண்ணீரா? மகிழ்ச்சியா?
எல்லாம் ஒன்றுதான்
தயங்கித் தேங்குவதால்
பாரங்கள் லேசாவதில்லை
இம்மை எரிகடல்
மறுமை இருட்கடல்
இன்மையில் போகிறது என் படகு
வாலாட்டுபவை வாய் மூடியிருக்கும்
குனிந்தபடி திரிபவை
அரவம் காட்டா
ரோசமானவை

குரலெழுப்பி நடுங்க வைக்கும்.

– வசந்ததீபன்

வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




பூக்களற்ற நிலம்
********************
பசித்த வயிறுக்கு பத்து வாய்கள்
யாசிக்கும் உடலுக்குப் பதினாறு கைகள்
புசிக்க வழியற்று அல்லாடும் உலகம்
மெளனத்தை வரையறுத்தேன்
ஒலிக்குள் ஒலி உறைந்து போனது
ணங்கென்ற சம்மட்டிச் சத்தம்
திகைத்து நின்றது
நெருப்பாய் நீராய் உரு மாறுகிறேன்
ஒளியாய் ஒலியாய் உயிர் தரிக்கிறேன்
காற்றாய்க் களிப்பாட்டாய்ப்
புவனத்தில் வலம் வருகிறேன்
பசிக்குது என்றான்
பத்து ரூபாய் கொடுத்தேன்
இருபது வேண்டும் என்கிறான்
விழிக்கத் தொடங்கினான்
துக்கம் உறங்கிப்போனது
இதயத்தில் வண்ண வண்ணப்பூக்கள்.
கூப்பிட்டேன்
பதில் இல்லை
மவுனத்துள் ஒலி ஒடுங்கிப் போனது.
பார்வை பட்டதும் கல்லானேன்
தேகம் பட்டதும் பூவானேன்
அவளின் முத்தங்கள் என்னை குழந்தையாக்கியது.
நடைப் பிணம் கீழ்மையானது
பிணம் மேன்மையானது
வாழ்க்கை மதிப்புமிக்கது.

துக்கம் உதிர்க்கும் தானியங்கள்
**************************************
அணில்கள் மரக்கிளைகளில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து சிரிக்கின்றன
நடக்க இயலாத அவன் சிறிது சந்தோஷப்பட்டுக் கொள்கிறான்
வனத்துள் காட்டுக்குதிரை மேய்கிறது
குளம் நீர்த்தூரிகையால்
அதனை வரைகிறது
பனிசூடிய மலையும் ஊசியிலைமரங்களும் வியக்கின்றன
நதியில் மிதந்து வருகின்றன பூக்கள்
நீர்ப் பரப்பில் இசை குமிழியிடுகிறது
மஞ்சள் ஒளியில் காதல் பொழிகிறது
அடிமை வாய்க்குப் பூட்டு

எடுபிடி மூளையை
கட்டியிருக்கிறது சங்கிலி
மொழி திண்டாடுகிறது
வரப்புகளில் கரிசாலையும் நெருஞ்சியும் பூத்திருந்தன
கொறவையும் கெழுறும் நெல் பயிருக்குள் நீந்தித் திரிந்தன
கொக்குகளும் மடையான்களும் கூத்தடித்தன
ஒரு காலம்
இரவு குடிகாரன்
பகல் குடிகாரனை திட்டுகிறான்
பகல் குடிகாரன்
இரவுகுடிகாரனை ஏசுகிறான்
எல்லா குடிகாரன்களையும்
உலகம் வைகிறது.

– வசந்ததீபன்

வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்




மின்மினிகளின் பகல்
*************************
மேய்த்த மிருகங்கள் திரும்பின
அவள்  பிணமாய்ப் புதரில் கிடக்கிறாள்
ரத்தம் தோய்ந்து பறக்கிறது தேசியக்கொடி
தெய்வத்தைப் புசித்தேன்
சாத்தானைத் தின்றேன்
மனிதர் அனைவரையும் நேசிக்கிறேன்
குழந்தையைக் கடித்துத் தின்றிருக்கின்றன
வெறி நாய்கள் இன்றும்
விட்டு வைக்கலாமா இனியும் நாம்   ?
ஆயுதங்கள் சார்பற்றவை
ஏந்துபவர்களுக்குத் தக்கபடி செயலாற்றும்
வன்முறை வன்முறையைக் கட்டவிழ்த்து  விடும்
வென்ற குதிரைக்குப் புல் கிடைக்கும்
தோற்ற குதிரை பசித்துக் கிடக்கும்
வேண்டுதல் வேண்டாமை
சுயநலம் சார்ந்தது
பசிப்பவனுக்குப் பூவை கொடுக்கிறீர்கள்
புளிச்சேப்பக்காரனுக்குப்
பழம் தருகிறீர்கள்
பெரு நெருப்பு உங்களுக்காக
கனிந்து கொண்டிருக்கிறது
காக்கைச் சிறகினிலே துவேஷம்
கொக்கின் வண்ணத்தில் வெறித்தனம்
நிறம் பற்றிய உரையாடல்களில் உதிரம் பீறிடுகிறது
பூனை அழகானது
பவ்வியமாய் சுற்றித் திரியும்
அடைபட்ட அறைக்குள் பிசாசாகும்
பற்றி எரியத் தொடங்குகின்றன
சிறிய சந்தோஷமும்
சாம்பலாய்ப் பறக்கிறது
உறுமீனுக்காகக் கொக்கு ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது
ஆறு பெருமூச்சாய் நுரைகள் பூக்க
வழி போன போக்கில் போகிறது.

இவளும் மனுசி
******************
துளியாய் விழுந்தது
கடலாய்ப் பெருகுகியது
அவள் மூழ்கிக் கொண்டிருக்கிறாள்
மழுங்கச் சிரைக்கப்பட்ட தலை
சீழ்வடியும் புண்களும் ரணங்களுமான உடல்
எம் நாடு எம் இனம் எம் வாழ்வு ஈடேற வழியேது?
கானகத்தின் நடுவில் அழுகுரல்
துக்க நீரூற்றாய்ப் பீறிடுகிறது
எக்குரலையும் விழுங்கிச் செரிக்கிறது அக்குரல்
சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்
அழுவதற்குப் பயிற்சி தேவையில்லை
சிரிப்பும் அழுகையும்
மனிதரைப் பாடாய்ப்படுத்தும்
உடலை விற்கக் காரணமாய் இருந்தாய்
உடலை நாயாய் தின்றாய்
வேசி எனக் கூப்பிடுகிறாயே
வேசி நாயே
சபிக்கப்பட்ட தேசத்தில் வாழ்கிறேன்
என் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன
நாவு இழந்து கண்ணீர் வடிய
கற்சிலையாய் நிற்கிறேன்.

– வசந்ததீபன்

வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்



இடையறாது
********************
வட்டிப்பணம் வாங்கிக் குவித்தார்
சொத்துக்களை ஊரெங்கும் நிறுவினார்
அண்ணாக்கயிறை அவிழ்த்து
அவரைப் புதைத்தார்கள்
ஆயிரம் வண்டிகள் நிறைய தங்கம்
ஆயிரம் கூடைகளில் நவமணிகள்
இறந்த பின் அவர்  கூட
எடுத்துச் செல்வாராம்
உப்பாக நீரில் கரைகிறேன்
நிறமாக வானவில்லில் பூக்கிறேன்
ஒற்றை நட்சத்திரமாகி ஜொலிக்கிறேன்
கனவுகளை விற்கிறேன்
கனவுகளை வாங்குகிறேன்
கண்ணீர் தான்  லாபம்
அடித்துச்  செல்லப் படுகிறேன்
ஆறு தன் போக்கில் போகிறது
என்னைப் போல பலர்
நீ அனுபவித்த வேதனை
நான் உணரவில்லை
பிறப்பைத் தரும் உன்னை
உதாசீனம் செய்கிறேன்
விளைநிலங்கள் விசும்புகின்றன
நெல்லென்று கூழாங்கற்களைக்
விழுங்குகின்றன பறவைகள்
அனல்காற்று அலறியபடி ஓடுகிறது
பட்டாசு ஆலை வெடிக்கிறது
மனித உறுப்புகள் பறக்கின்றன
உருப்படியாய் எதுவும் அகப்படவில்லை
ஆதி அல்லாடுகிறது
அந்தம் திண்டாடுகிறது
நாதியின்றி உலகம் உருண்டோடுது
காளி எத்தனை காளிகளடா
ரணகாளி பத்ரகாளி வனக்காளி சுடுகாட்டுக்காளி
பெண் அழிய
வேடிக்கைப் பார்க்கின்றன
அது நடக்கக் கூடாது
இது நடக்கணும்
இது நடக்கக் கூடாது
அது நடக்கணும்
மனசுக்குப் பசி அதிகம்.
மீதமான சொல்
*******************
கவிதை இசையைத் தேடுகிறது
இசை கவிதையைத் தேடுகிறது
இரண்டும் குரலைத் தேடுகிறது
நவீனகாலத்தில் பேயாவது பிசாசாவது
கேலிசெய்து சிரிக்கின்றன சினிமாக்கள்
பேய்ப்படங்களின் கோரப்பிடியில் ஜனங்கள்
மெய்யைத் தேடும் மெய்
பொய் தினம் தினம்
 தன்னைப் புதுப்பிக்கும்
கைகழுவிப் போகும் யாவும்
வனாந்தரக் காற்று போல சுதந்தரமானவன்
நீரோடை போன்று குளுந்த மனசுடையவன்
பறவையாய் சோற்றுக்கு பறந்தலைகிறான்
உண்மை அன்பு கோபப்படும்
உசுரையே அர்ப்பணிக்கும்
ஊறு விளைவிக்காது
யாருக்கு காவல்?
யாரைக் காப்பாற்றுகிறீர்கள்?
சோறா? கூலிக்கான தொண்டூழியமா?
வேகம் வேகம் வேகம்
அதிவேகம் அசுரவேகம்
விபத்து ஆபத்து சிதறிப்போனது பஸ்.
புல்லாய் வாழ்கிறாய்
பூச்சியாய் திரிகிறாய்
கல்லாய்ச் சமையும் சாபம் பெறுவாய்.
தண்ணீரின் நிறம் புத்தொளியாய் மின்னும்
கனிவின் பழிப்பில் மழையெனச் சொரியும்
கவண் தெறிப்பில் சில்லுகளாய்ச் சிதறும்.
வசந்ததீபன்
வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்



ஆழ்நிலை சஞ்சலம்
*****************************

கசங்கி உளையும் மனம்
வாதையின் ஊடே வெளிப்படும்
தழலின் துளிர்ப்பில் கங்கெனச் சுடரும்
ஆறாத ரணம் உள்ளுள் கனியும்

நலிந்த உடலின் வலி
வெயில் பொழுதில் கிணற்றுள் குருவிகள்
கீச்சாட்டம் கொடிகட்டும் கூத்தாட்டம்
படமாய் விரிந்தபடி
கவினுறு கொண்டாட்டம்
பிரியங்கள் பெருக்கெடுத்தோடுகின்றன
எங்கு நோக்கினும் மலர்க்காடுகள்
பட்டாம்பூச்சியாய்ச் சுற்றித்  திரிகிறேன்

எனக்குரியதை எனக்குக்  கொடு
உனக்குரியதை நீ வைத்துக்  கொள்
அவரவர்க்குரியது  அவரவர்க்கு
மீன் கொடுக்காதே
பிடிக்கக் கற்றுக் கொடு
போராட்டம் தரும் பொன்னுலகு
அழகை மட்டும் எழுதமாட்டேன்
அருவருப்பையும் கூறுவேன்
வாழ்வின் சகல கூறுகளையும்  சித்திரங்களாய் வரைவேன்
புனைவு போதையில்  புதையாதே
எரியும் வாழ்வை  ஏறிட்டுப்  பார்
சாம்பலாகாமல் தப்பி  விடுவாய்
கண்ணீரில் எழுதிய கவிதை
காற்றில் பறந்தோடுகிறது
கைப்பற்ற எண்ணம்  இல்லை
உறவினன் வேஷமிட்ட  ஓநாய்
உங்கள் செல்லமகளை
தின்றிட  அலைகிறது
உஷார்  உஷார்  உஷார்
ஹிட்லர்களை விட கோயபல்ஸ்கள் அபாயகரமானவர்கள்
கனவுகளைத்  தின்னும் பெருச்சாளி
கரன்சிகளை வேட்டையாடுகிறது
கண்களைத் திறவுங்கள் கோமணமாவது மிஞ்சட்டும்
உரத்து ஒலிக்கும் என் குரல்
ஒளிந்து பயந்து  ஒதுங்கிப் பதுங்கி நடுங்கி ஒடுங்காது
தடை  உடைக்கும் மடை திறக்கும் படை  வெல்லும்
விவசாயத்தைச்  சீரழித்தீர்கள்
விவசாயிகளை  சித்திரவதைக்குள்ளாக்குகிறீர்கள்
சோத்துக்கு  சிங்கி  அடிக்கப்  போகிறீர்கள்.

இலைகளில் தள்ளாடுகிறது மழைநீர்
*********************************************

இரு…
இருக்கமாட்டேன்..
இருப்பை தீர்மானிப்பது  நீயல்ல
ரோட்டோர நாணல்
பாட்டொன்று பாடுது
போதையின் மயக்கம்
பாதையில் பலி கேட்கும்
ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடும் வரை ஆடிவிட்டு
ஓடு பாம்பே நீ… ஓடு பாம்பே…
எச்சரிக்கை
குழந்தைகளை விட்டு அகலாதீர்கள்
மிருகங்கள் உங்களுக்குப் பரிச்சயமானவை
அடர் வனத்துள் தேடுகிறேன்
ஆறு குளம் நீரோடைகளில்
எங்கும் காணாம்
இசைமலர்
இருதயத்திற்குள் பூத்திருக்கிறது
அடிவாரம் அமைதியாயிருக்கிறது
உச்சியிலிருந்து ஒரு மலர் விழுகிறது
கனவிலிருந்து  விழித்தெழுகிறேன்
பேசினார் கேட்டேன்
பேச முடியாமல் போனது
கடலைத் தொழுகிறேன்
அலைகள் எழும்பி ஆசீர்வதிக்கின்றன
ஆனந்தக் கூத்து
குற்றவாளியின் கண்களை உற்றுப்பாருங்கள்
குற்றங்களின் பட்டியல் வெளிப்படும்
இருதயத்திற்கு கதவுகள் உண்டு
பேரம் பேசுங்கள்
பங்கு பிரித்துக் கொள்ளுங்கள் ஆதியோகி
கல்லாய்  சமைந்திருக்கிறான்
பூமியின் மீது அக்கறை கொள்ளுங்கள்
வானத்தையே ஏறிட்டுக் கொண்டிருக்காதீர்கள்
மனிதன் வாழ வேண்டும் ஆளற்ற  வீதி
இரவு முணுமுணுக்கிறது பிறை நிலா
மேகத்திற்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது ஆதியோகி
கண்களைத் திறக்கவில்லை
துரோகங்கள் பகடை ஆடின
சம்போ.. சம்போ.. சம்போ.. சம்போ….

Nilaiyillatha kalathin varai padam Kavithai By Vasanthadheepan. நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை - வசந்ததீபன்

நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

கண்கள் தோட்டாக்களை
உமிழத் தயாராகிறது
இதயம் விசையை முடுக்க
தருணம் பார்க்கிறது
குறிக்குத் தப்ப
கனவுகள் முயல்கின்றன
நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள்
கிராமங்கள் கரைகின்றன
ஒளிய இடந்தேடுகின்றன பறவைகளும், மிருகங்களும்
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
புனைவாளனின் மூளை வெடிக்கிறது
புழுக்கள் பேசிக்கொண்டு வெளியேறுகின்றன
எவள் எவளோடவோ திரிந்தவன்
அவளோட சேர வந்திருக்கிறான்
அவனோடு இணைய
அவள் தயாரில்லை
கடந்து தான் செல்ல போகிறோம்
கசிந்து உருகித் தேங்காதே
காட்டாற்று வெள்ளமாய் பிரவகித்திடு
நொடி மணியாக விரைகிறது
மணி பெருகி நாளாய் வழிகிறது
நாள் கடந்து கடந்து
மரணமாய் முடிகிறது
நிறங்களின் உடைவில்
சிறகுகள் துளிர்க்கின்றன
விரிவோடுகிறது வானம்
பெருங்களிப்பின் உற்சவ சீழ்க்கையொலி தெறிக்கிறது.
நீலப்பளிங்காய் மிளிர்கிறது
நீருக்குள் கிடக்கும்
வாளாய் ஒளிர்கிறது
முப்பாட்டனின் முகச்செழுமையாய் மரக்கா மலை
உடைந்த நீர்க்குமிழியாக
மறைந்து போனது பால்யம்
தானியங்கள் கொழித்த
இறந்த காலங்கள்
பேரன்பின் சுடருள் கருமை படர்கிறது
நிலங்கள் வழியாக
வாழ்க்கை நகர்ந்தது
தாவரங்களாகவே மனிதர்கள்
வேரற்று காற்றோடு அலைபடுதல் இக்கால நீங்கா சாபம்.

Viduthalaikkana Veli Thiranthu Kidakkirathu Poem By Vasanthadheepan. விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை - வசந்ததீபன்

விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது கவிதை – வசந்ததீபன்

விடுதலைக்கான வெளி திறந்து கிடக்கிறது
***************************************************
வண்ணத்துப்பூச்சி
வெளியேற முடியாத அறை
பறந்து பறந்து சுழல்கிறது
கழிவிரக்கம் மேலிடுகிறது
அவன் வயரைக்கடித்து இறந்து போனான்
சுவிட்சு போர்டுக்கும் வயருக்கும் தண்டனை
பறத்தல் பறவைகளுக்கானது மட்டுமல்ல
விடுதலையாகிப் பறக்கின்றன
எருக்கம் விதைகள்
கட்டு மீறிக் களிக்கிறது மனசு
வெறிநாய் எதிர்ப்படுகிறது
காருண்யம் உனக்கு உதவாது
கொல்வதைப் பற்றி யோசி
விழித்துக் கொள்
அறம் செத்த தேசம்
நீதி பிறழ்ந்து திரியும்
ஜன்னலை மட்டும் திறந்து விட்டால் போதாது
கதவுகளையெல்லாம் திறந்து விடுங்கள்
வெளிச்சம் வீட்டில் நிரம்ப வேண்டும்
எனக்கான விடுதலை
நீ தான் எழுத வேண்டும்
நாம் தான் கொண்டாடுவோம்
ரத்தக்கறை படிந்த சட்டை கிடந்தது
விபத்தா? அல்லது பலியா?
புரிபடாமல் இருப்பதே நல்லது
நோய்கள் எல்லோருக்கும் வருகின்றன

வைத்தியம் சிலருக்குத்தான் கிடைக்கிறது
ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இப்படித்தான்
குழாயடியில் குடமும் நீரும் சந்தித்தன
இசைக்கச்சேரி ஆரம்பமானது
ரசிக்காமல் எல்லோரும் சண்டையிடுகிறார்கள்.

Vatriya Nathiyin Karayil Sila Pookkal Kavithai by Vasanthadheepan வற்றிய நதியின் கரையில் சில பூக்கள் கவிதை - வசந்ததீபன்

வற்றிய நதியின் கரையில் சில பூக்கள் கவிதை – வசந்ததீபன்

வற்றிய நதியின் கரையில் சில பூக்கள்
*********************************************
நைந்து போன கடிதத்தை
வாசிக்க..வாசிக்க
தோற்ற காதல்
வாசனை தேடிப் போன
மனதில் எச்சில்சொட்ட
பசித்த ஓநாய்
சிறகு உலர்த்துகிற
பறவையிடமிருந்து
தூறல் மழை
சிற்பியின் மனதில்
உதித்த உருவல்ல
பாறையுள்ளிருந்து சிலை
புகழ்வான்
பாராட்டுவான்
புதைகுழி பற்றி கவனம் கொள்ளுங்கள்
அடித்தால் அடியுங்கள்
உதைத்தால் உதையுங்கள்
அன்பாயிருப்பது ஏமாறுவதல்ல.
ராமன் ஆண்டாலென்ன?
ராவணன் ஆண்டாலென்ன?
அன்னாடங் காச்சிகள்
ஈயாதான் பறக்கணும்.
மனசுக்குள் புழுங்காதீர்கள்
நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திடுங்கள்
பலூன் ஊத ஊத வெடிக்கும்
மனசுக்குள் புழுங்காதீர்கள்
நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திடுங்கள்
பலூன் ஊத ஊத வெடிக்கும்
உண்மையைக் காப்பாற்ற பொய் சொல்லலாம்
பொய்யைக் காப்பாற்ற
உண்மை சொல்லாதே
காக்க காக்க நீதி காக்க
நவதானியங்கள் தின்றவர்கள்
சுகமாய் வாழ்ந்தார்கள்
கோதுமை தின்பவர்கள்
நோயோடு அல்லாடுகிறார்கள்
நளபாகம் நாலாவிதமாகிப் போச்சு
கோடாரியை கீழே போடு
காடுகள் கோபத்தில் இருக்கின்றன
சிதைக்குள் சிக்கிக் கொள்ளபோகிறாய்
வயிற்றில் கக்கூஸோடு அலைகிறீர்கள்
மூளையை கக்கூஸாக்கி வெறிக்கூத்தாடுகிறீர்கள்
கக்கூஸ் என்றதும் ஏன் பதறுகிறீர்கள்?
வலியிருந்து வெளியேறுகிறேன்
வேதனையை கழற்றி எறிகிறேன்
ஆசுவாசமாக இருக்கிறது.
ஒடுக்கப்படுபவர்களுக்காக குரலெழுப்புவேன்
அடக்கப்படுபவர்களுக்காக
கரம் நீட்டுவேன்
நான் உயிருள்ள மனிதன்
ஒடுக்குகிறார்கள்
உயிராய் நேசிக்கிறீர்கள்
போதும் பெண்ணினமே
பூவுக்குள் தேன்
முள்ளுக்குள் பூ
தேன் மட்டும் குடிக்கின்றன வண்டுகள்.