Vasanthadheepan poems வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்



(1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்

வழிபாடுகள் இடர்பாடுகள்
தொடருது துயர் பாடுகள்
ஆறு கடந்து போகிறது
காற்று கடந்து போகிறது
காலமும் கடந்து போகிறது
வாடிய மலர்கள் இயற்கைக்கு சொந்தம்
வாடாத மலர்கள் மனிதனுக்கு சொந்தம்
வாடியும் வாடாமலும் பூத்தபடி மலர்கள்
பாதைகள் நிறைய போகின்றன
ஊருக்குள் போகும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை
பாதைகளுக்கு முன்னால் நின்றிருக்கிறேன்
நெருப்பை தொட்டுப் பார்த்தான்
நெருப்பாயிருந்தது
நெருப்பு நெருப்பாய் இல்லாமல் வேறு எதுவாக இருக்கும்இருக்கும்
பெருங்கதையாடல்
பெருந்திணைப்பாடல்
பெருஞ்சூறையாய் வீசுகிறது
இழப்பதற்கு எதுவுமில்லை
பெறுவதற்கு ஏராளம் உள்ளது
அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிவோம்.
மழை பொழியட்டும்
மனங்களெங்கும்
மானுடம் செழிக்கட்டும்
விண்மீன்களை பார்க்கிறேன்
தேவதைகள் கண்கள் சிமிட்டுகிறார்கள்
சாமரம் வீசுகிறது காற்று
மவுனங்களுக்கும்
வார்த்தைகளுக்கும்
இடையே தீராத உரையாடல்கள்.

(2) இணக்கமற்ற பயணம்

எய்தவன் மனதில் இச்சை
அம்பின் நோக்கம் எதுவுமில்லை
அடிபடுபவையின் உயிரில் மரணவலி
கனவென்று எதுவும் கிடையாது
கனலும் நினைவுகள் உண்டு
பேரிரைச்சல் எழுப்பும்
காற்றாய் திரிய ஆசை
திருடனைப் போல வரும்
சூறைக் காற்றாய் அள்ளிப்போகும்
மரணத்தின் கால்களை அறிந்தவரில்லை
சிலையின் அருகில் போனேன்
சிலிர்ப்பாயிருந்தது
சிலைக்கும் இருந்திருக்குமாவெனத் தெரியவில்லை
உன் மிடறுக்குள் நான்
என் மிடறுக்குள் நீ
திகட்டாது காதல்
புழுவாய் நெளியாதே
பாம்பாய் சீறு
வெயில் உன்னை வருத்தாது.
நீ பூ நான் வாசம்
நான் பூ நீ வாசம்
நேசம் நீ நான் உன் வசம்
கண்கள் பேசுகின்றன
இதயம் மெளனிக்கிறது
என்னுள் காதலெனும் பெருங்கடல்
கனவுகள் என்னைத் தின்கின்றன
நான் மெளனமாயிருக்கிறேன்
என் மெளனம் அமைதியில்லை
படகை செலுத்துகிறேன்
மனது உடன் வர மறுக்கிறது
கூடு பிரிந்த பறவையாய்
நதியோடு போகிறேன்
நட்சத்திரங்கள் அழைக்கின்றன
நானும் ஒரு நட்சத்திரமாக ஆசை
பால் வெளியில் எங்கோ எவரறியாமல் ஜொலிக்கணும்
இருளுக்குள் ஒளியிருக்கும்
ஒளிக்குள் இருளிருக்கும்
இரண்டுக்கும் நடுவே
மனித வாழ்விருக்கும்
இலைகள் உதிர்கின்றன
தனிமை இசைக்கிறது
காற்று நாற்காலியில்
ஓய்வு கொள்கிறது
வசந்தம் வருகிறது
பூக்கள் பாடுகின்றன
கூண்டுக்குள் பறவை அழுகிறது
ஜனனம் போகிறது
மரணம் வருகிறது
திகைப்பாய் உலகம்
நினைத்துப் பார்க்கிறேன்
துக்கம் ஓடி வருகிறது
மனசை படாரென்று மூடுகிறேன்.

(3) தீராத புத்தகப் பிரதி

உன் கனவுகள் உன் வாழ்வு
இணையாத தண்டவாளங்கள்
சரக்கு ரயிலாக நீ
நீ என்ன நினைக்கிறாய் ?
நீ என்ன சொல்ல விரும்புகிறாய் ?
உனது மொழியில் உனது வார்த்தையில் எழுது
ஒரு வார்த்தைக்கு வன்மம்
தீயாய் சுட எத்தனிக்கிறாய்
எம் வாழ்வினை இத்தனைக்காலம் சிதைக்கும் உன்னை விட்டு விடமாட்டோம்
இதயங்களை கனவுகளால் நிரப்புவோம்
இன்மையின் ரணங்களை
கவிதைகளால் மருந்திடுவோம்
கனிகள் கிட்டும் காலம் வரும்
கலங்கிய குளத்தில் மீன்
கரையேற வழியில்லை
உயிர் வாழ வகையில்லை
கடவுளைத் தேடுங்கள்
தடுக்கவில்லை
கடவுளாய் நடிக்காதீர்கள்
ரோசக்காரர்கள் போராடுகிறார்கள்
கருங்காலிகள் கால் வாருகிறார்கள்
போராட்டங்கள் பிசுபிசுத்து விடுகின்றன
எந்த மனிதனும் துன்பத்தை விரும்புவதில்லை
எந்த மனிதனும் துன்பத்தை நேசிப்பதில்லை
தஸ்தாவெஸ்கி போன்ற மனிதர்கள் வாழ்வை நேசிப்பதில்லை…நேசிப்பதில்லை…
என் எழுத்துக்கள் என்னைச் சொல்லும்
என் வார்த்தைகள் என்னை வரைந்து காட்டும்
நான் சொல்ல
இன்னும் நிறைய இருக்கின்றன.