வசந்ததீபன் கவிதைகள்
உவந்தளித்த பயணம்
**************************
விழிகளில் நிறைந்தாய்
இதயத்தில் கலந்தாய்
உயிரில் உறைந்தாய்என்னைத் தின்ன வா
என்னைச் சுவைக்க வா
என்னை ருசிக்க வா
என் இதயம் வெடித்திடுமோ என்றிருக்கிறது
என் உடல் உருகிடுமோ என்றிருக்கிறது
என் உயிர் காற்றில் கலந்திடுமோ என்றிருக்கிறது
கனவுகளில் உன்னைக் கட்டி அணைக்கிறேன்
கனவுகளில் உன்னை முத்தமிடுகிறேன்
கனவுகளில் உன்னுள் மூழ்கித் திணறுகிறேன்
இவ்வளவு அழகா ?
இவ்வளவு இனிப்பா ?
இவ்வளவு இம்ஸையா ?
இதயம் வெடிச்ச கதை
இளம் பூ சிதைந்த வதை
காம மிருகங்களை ஏற்றணும் சிதை
வேர்வையால் வரைந்தான் வேடிக்கை பார்த்தார்கள்
கண்ணீரால் ஓவியமாக்கினான் பரிதாபப்பட்டார்கள்
ரத்தத்தால் தீற்றினான் பாவமென்று சொல்லிப் போனார்கள்
இலக்கியம் எழுதி பிழைத்தவனில்லை
விற்று வாழ்பவர் ஆயிரம்
தமிழால் கண்டமானோர் கணக்கில்லை
நீதிமான்கள் தொலைந்து போனார்கள்
அழுகையும் ஒப்பாரியும் நின்றபாடில்லை
நீதியும் தர்மமும் தெருவில் திரிகின்றன
அவன் இறந்து விட்டான்
நீங்கள் உயிர்ப்போடு வாசிக்கிறீர்கள்
கவிதை யோசிக்கிறது.
உறுவலியில் இடறி விழுகிறேன்
***************************************
உறங்கிப் போகிறேன்
உலகம் மறந்து போனது
கனவுகள் நடமாடத் தொடங்கின
பம்பரம் சுழல்கிறது
அந்தரத்தில் ஒரு விளையாட்டு
ஆட்டுவிப்பவர் ஆடும் ஆட்டம்
ஒரு கோபம் குறுக்கிட்டது
இன்னொரு கோபம் கொந்தளித்தது
கோபங்கள் மூர்ச்சையாகி விழுந்தன
அவளைப்பற்றி அவனுக்கும்
அவனைப்பற்றி அவளுக்கும்
குடப்பாலில் துளி நஞ்சாய் சந்தேகம்
சொல்லில் விஷம்
புன்னகையில் கத்தி
துரோகிகளின் ஆயுதங்கள் இரக்கமற்றவை
சொல்லைக் கொத்திச் செல்கின்றன.
நெல்லென்றால் பசி தீர்க்கும்
பாவம் சிட்டுக்குருவி
பிடிக்கப்பட்டார்கள் அவர்கள்
அவன் விடுவிக்கப்பட்டான்
அவள் மட்டுமே தண்டிக்கப்பட்டாள்.
திணிக்க முற்படாதீர்கள்
பலவந்தப்படுத்த முனையாதீர்கள
பூவும் மொழியும்
ஒன்றென புரிந்து கொள்ளுங்கள்
பிச்சையெடுக்கிறார்கள் மன்னர்கள்
அதிகாரங்களில் பலியாகிறார்கள் ஏதுமற்றவர்கள்
பெண்ணை சொத்துக்காக கொன்றார்கள்
எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை
பழிவாங்க பேய்வரும்
என்கின்றன கதைகள்
தூரத்தில் மலைநகரம்
மஞ்சள் வெண்மை விளக்குகளால் புன்னகைத்து அழைக்கிறது
தினம் மனசுக்குள்
நகரத்தை தரிசிக்கப் போய்வருகிறேன்.
வசந்ததீபன்