Vasippirku Thisai illai and Punaivilakkiya Nathiyil Neendhi Bookreview By S. Vincent நூல்கள் அறிமுகம்: வாசிப்பிற்கு திசை இல்லை மற்றும் புனைவிலக்கிய நதியில் நீந்தி - ச. வின்சென்ட்

நூல்கள் அறிமுகம்: பெ. விஜயகுமாரின் வாசிப்பிற்கு திசை இல்லை மற்றும் புனைவிலக்கிய நதியில் நீந்தி – ச. வின்சென்ட்

அறிமுகங்களுக்கு ஓர் அறிமுகம்
பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய வாசிப்பிற்குத் திசை இல்லை, புனைவிலக்கிய நதியில் நீந்தி.. என்ற இரண்டு நூல்களும் பல இலக்கியப் பனுவல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றன. வெளிநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம்பெறுவதால்  பல திசைகளிலிருந்தும் இலக்கியக் காற்று இங்கு வீசி கதவுகளைத் திறந்து விடுகின்றது. இப்படிப்பட்ட அறிமுகங்களை  மூன்று முறைகளில் செய்யலாம்: அவற்ற்றின் சுருக்கத்தை மட்டும் சொல்வது ஒரு வகை; சுருக்கத்தோடு விமர்சனத்தையும் சேர்ப்பது இன்னொன்று; நூலாசிரியரையும் அவருடைய சூழலையும் பற்றிக்கூறி நூலின் சுருக்கத்தைக் கூறுவது முன்றாவது வகை. பேராசிரியர் பெரும்பாலும் இந்த மூன்றாவது முறையைப் பின்பற்றுகிறார்.

இந்த இரண்டு புத்தகங்களும் நூல்களை அல்லது சிறுகதைகளைப் பற்றிக்கூறுவதால் இவற்றை ஒரு நூலின் இரண்டு தொகுதிகளாகக் கருதலாம். ஒவ்வொன்றிலும் பதினாறு கட்டுரைகள். அவற்றில் 22 நாவல்கள், 4 நாடகங்கள், இரண்டு சிறுகதைகள், 4 கட்டுரைத் தொகுதிகள் அடங்கும். படைப்பாளிகளில் பெரும்பாலும் வெளிநாட்டினரும் வேறு இந்திய எழுத்தாளர்களும் இருந்தாலும் தமிழ்ப் படைப்பாளிகளும் இடம் பெறுகிறார்கள்.

நாவல்களைப் பொறுத்தவரையில் தாமஸ் ஹார்டியின் ஜூட் தெ அப்ஸ்கியூரிலிருந்து தொடங்குகிறார் ஆசிரியர். நாவல் என்றால் ஹார்டி இல்லாமலா? வாசகர்கள் பலர் கல்லூரியில் படித்திருப்பார்கள்; இப்போது மறந்திருப்பார்கள். (எனெக்கென்னவோ தெ ரெட்டர்ன் ஆஃப் தெ நேட்டிவ்தான் பிடிக்கும் என்பது வேறு விஷயம்) .இன்றைய தலைமுறையினருக்கு ஹார்டியைத் தெரிந்திருக்காது. எனவே இந்த அறுமுகம் தமிழ்வாசகரை அவரை நோக்கிச் செல்லத்தூண்டும். பல நாவல் அறிமுகங்களுக்கும் இதைப் பொதுவான குறிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

காம்யூவும்  ஆலிஸ் வாக்கரும், தாஸ்தாயெவ்ய்ஸ்கியும், ரிச்சர்ட் ரைட்டும் என்று உலகின் பல முக்கிய நாவலாசிரியர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். இந்திய/ தமிழ் நாவலாசிரியர்களில் பலர் என்னைபோன்ற சாதாரண வாசகனுக்குப் புதியவர்களாக இருக்கலாம். மகாசுவேதா தேவி பற்றி எல்லோரும் இப்போது பேசுகிறோம். ஆனால் அவருடைய பெருமையை உலகிற்குச் சொல்ல ஒரு  காயத்திரி ஸ்பிவாக் தேவைப்படுகிறார். பங்கிம் சந்தரையும் தாகூரையும் விட்டு விட்டு மகாசுவேதா தேவியைத் தான் ஏன் முதன்மைப்படுத்துகிறார் என்று அண்மையில் விளக்கியிருக்கிறார் ஸ்பிவாக்.

இப்போது பேராசிரியர் விஜியகுமாரின் இரண்டு அறிமுகக் கட்டுரைகள் தமிழ் வாசகருக்குத் தேவியைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பு. தனது சிறந்த  மொழிபெயர்ப்புகளுக்காக அறியப்படுகின்ற எம். ஏ. சுசிலா நாவல்களும் எழுதியிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருடைய இரண்டு நாவல்கள் மதிப்புரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. சல்மாவின் மனாமியங்கள் நாவல் பற்றிய குறிப்பு மிகுந்த பயனுள்ளது. அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ் நாவல்களையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது.

சிறுகதைகள் என்றால் கோகோலும் செக்காவும்தான் நம் கண்முன் நிற்பார்கள். பேராசிரியர் அவர்களுடைய சிறுகதைகளின் ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு அவர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

நாடகத்திற்கு ஓர் இப்சன். அதுவும் பொம்மை வீடு இல்லாமல் இப்சனா? ஆசிரியர் அதைப் பெண்ணியப் பார்வையில் அணுகியிருப்பது சிறப்பு. சரி. தாகூரை நாம் அவருடைய நாவல்களுக்காக, சிறுகதைகளுக்காக, கவிதை நடையில் கிடைக்கும் வாழ்க்கைத் தத்துவத்திற்காகக் கொண்டாடுகிறோம். ஆனால் விஜயகுமார் ஏன் நாடகத்தைத் தேர்ந்தெடுத்தார்? தமிழ் வாசகருக்கு தாகூர் ஒரு நாடக ஆசிரியரும்கூட என்பதைக் காட்டுவதற்காக இருக்கலாம். தமிழ் நாடகங்களும் நமக்கு அரிமுகமாகின்றன. மு. இராமசாமியின் விடாது கருப்பு முதலான ஐந்து நாடகங்கள் எவ்வாறு பெரியாரின் புரட்சிக் கருத்துக்களைத் தாங்கிவருகின்றன என்பதை ஆசிரியர் ஒருகட்டுரையில் விளக்குகிறார்.

புனைவிலக்கியத்தில் நீந்தும் பேராசிரியருக்கு வழியில் கட்டுரைத் திட்டுகளும் தட்டுப்படுகின்றன. அவற்றில் இரண்டு கல்வி பற்றியவை. ஒரு பேராசிரியராக, தனது ஆங்கில இலக்கியம் உண்டு வகுப்பறை உண்டு என்றில்லாமல் ஒரு சமுதாய அக்கறை கொண்ட சிந்தனையாளரளாகவும், கல்விபற்றிய செயல்பாடுகளில் தீவிரம் காட்டும் போராளியாகவும் விஜயகுமார் இருப்பது என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும். எனவே இங்கே இரண்டு அறிமுகங்கள் கல்வி பற்றி இருப்பது குறைவுதான். எனினும் ஐத்மாதவின் நாவலைப்பற்றிய அறிமுகத்தில் பாலோ ஃப்ரெயர், ஜான் டியுயி, ஹோல்ட், ச. மாடசாமி முதலான பல  கல்வியாளர்களைப் பற்றிக் கூறி விடுகிறார். தேசிய கல்விக் கொள்கை பற்றிய நூல் பற்றி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று தொன்றுகிறது. இன்னொரு கட்டுரை டோட்டா-சான் பற்றியது. கல்வியில் குழந்தைகள் இயற்கையாக வளர வேண்டும் என்று வலியுறுத்தும் நூல்.

பேராசிரியர் விஜயகுமார் ஒவ்வொரு அறிமுகக் கட்டுரைக்கும் தந்திருக்கும் தலைப்பே வித்தியாசமானது. அக்கட்டுரையின் சாரம் தலைப்பிலேயே கொடுக்கப்பட்டு விடுகிறது. அவர் கதை சொல்லும் விதம் மிக எளிமை. எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடிய நடை. அவருடைய கல்வி ஆறிவை எங்கும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பது கூடுதல் சிறப்பு. இது போன்ற நூல்களை, படைப்பாளிகளின் அறிமுகங்களை அவர் நிறையத் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

ச. வின்சென்ட்

நூல்: வாசிப்பிற்கு திசை இல்லை
ஆசிரியர்: பேரா. பெ. விஜயகுமார்
விலை: ரூ 150

நூல்: புனைவிலக்கிய நதியில் நீந்தி…
விலை: ரூ 170
இரண்டு நூல்களும் கருத்து -பட்டறை வெளியீடு