Vasippu payanam oru thodarkathai Short story by Shanthi Saravanan - சாந்தி சரவணனின் வாசிப்பு பயணம் ஒரு தொடர்கதை சிறுகதை

வாசிப்பு பயணம் ஒரு தொடர்கதை சிறுகதை – சாந்தி சரவணன்




அன்று ஊடகவியலாளர்கள் அனைவரும் ‌அந்த‌ அரங்கத்தில் கூடியிருந்தனர். அரங்கமே பல அறிஞர்கள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள்….. இப்படி பல பல மேதாவிகள் கூடியிருந்த அரங்கமாக காட்சி அளித்தது. ஒவ்வொருவரையும் ‌ஊடகவியளார் நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்தனர். அனைவரிடமும் அவர்களின் ஒரு கேள்விக்கு கிடைத்த பதில் அவர்களை வியக்க வைத்தது. ஆம் தங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்த ஆசிரியர் திரு.அமர். ஆம் அரசு பள்ளி ஆசிரியர்.

அனைவரிடமும் ஒர் ஆர்வம் தோன்றியது. அடுத்தது என்ன? யார் அந்த ஆசிரியர் அமர்? அவர்களின் பதிலை நாமும் ஊடகவியலாளர்களோடு இணைந்து கேட்போம் வாருங்கள்: அந்த பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் பிடித்த ஆசிரியர் திரு.அமர். ஆசிரியர் அமர் அவர்கள் ஒரு வாசகர், எழுத்தாளர், தொல்லியியல் ஆர்வலர்.. etc., எந்த அளவிற்கு எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையின் பன்மடங்காக வாசகர்களும் உருவாக்கப் பட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர். எழுத்தாளர் ஒரு சமூகத்திற்கு எப்படி முக்கியமோ அது போல வாசகர்களும் முக்கியம் என்பார். பல வாசகர்களை வழி நடத்தி அவர்களையும் படைப்பாளியாக உருவாக்கியவர்.

ஒருவரின் படைப்பு பலரின் வாசிப்பு பசிக்கு உணவாக இருக்கும் என்பது ஐய்யமில்லை. அவர் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பை கட்டாய வகுப்பு என அறிவித்து இருந்தார் ஆரம்பத்தில் ஆர்வமின்மை தான் மாணவர்களிடமிருந்தது. அந்த கட்டாய வகுப்புக்கு காரணம் “அது புத்தக வாசிப்புக்கான நேரம்”. ஆனால் ஆசிரியர் உறுதியாக இருந்தார். “வாசிப்பு என்பது ஒரு இனிப்பு.” அதை சுவைக்க மாணவர்கள் தொடங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் சுவைத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

ஆசிரியர்களின் கடமை எது? “ஆபிரகாம் லிங்கன்” – “நான் ‌உங்கள் இடத்தில் ஒரு மாணவனை ஒப்படைத்துள்ளேன், அவனை மனிதனாக மாற்றி தாருங்கள்”.
மாணவனை மனிதனாக மாற்ற மனிதர்களோடு பழகுவதும், மனித மனங்களை படிப்பதும் தானே படிப்பு. பாயை விரித்து போடுவது போல் நம் மனதை விரித்து அடுத்தவர் வந்து அமர்ந்து கொண்டு சிலாகித்து இன்புற வேண்டும். அதற்கு அவன் பல பயணங்கள் புரிய வேண்டும். பல மனிதர்களோடு பழக வேண்டும். இதற்கெல்லாம் ‌நம் வாழ்நாள் போதுமானதாக இல்லை.

அதை நாம் புத்தகங்கள் வாசிப்பதின் மூலம் பலருடைய வாழ்க்கையை வாழலாம். மனிதன் புத்தகங்களை படிக்க விரும்பாதற்கு காரணம் தங்களின் கற்பனைகள் கரைந்துவிடும் ‌என்பதனால் தான் போல? நிஜங்கள் நாம் உருவாக்கி வைத்து இருக்கிற மாய பிம்பங்களை மறைய வைத்துவிடும். நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் நமக்கு இருப்பதில்லை என்பார்.

அவர் கடைப்பிடித்த முக்கிய் வழிமுறை, பல மொழிகளை கூடுதலாக சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். வாழ்க்கைக்கு தேவையான கணிதம். அதாவது கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் எது முக்கியமாக ‌வாழ்வியலுக்கு தேவையான பாடங்களோ அதை தேடி தேடி சொல்லிக் கொடுத்தார்.

புத்தக வாசிப்பு. நூலகத்தில் புத்தகங்கள் மட்டுமே ‌இருந்து என்ன‌ பயன்? பல நூல் ஆரங்கங்கள் இருக்கலாம். ஆனால் அது வாசிப்பின் முலமே உயிர் பெறும்.
உலகத்தில் எத்தனை நூலகம் உள்ளது. அந்த நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளது. எத்தனை மொழிகளில் உள்ளது. எத்தனை வரலாற்றை சுமந்துக் கொண்டு உள்ளது. எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் புத்தகங்களுக்குள் புதைந்து உள்ளது. கடல், ஆகாயம் மணல் தாவரங்கள் மரங்கள் மலைகள் குன்றுகள் உயிரினங்கள் உலகத்தின் மறுபக்கம் இப்படி பல பலவற்றை எப்படி பள்ளி வாழ்க்கை மட்டுமே கற்றுத் தரும்.

ஒருவன் பலதரப்பட்ட மனிதர்களோடு பழக வேண்டும். பல பயணங்களை மேற்கொள்ள வேண்டும். சூழலியல் தெரிந்து இருக்க வேண்டும். உளவியல் தெரிந்து இருக்க வேண்டும். இதை சாத்தியப்படுத்தியது வாசிப்பு.. வாழ்க்கையில் வாசிப்பு நம் சுவாசமாக இருக்க வேண்டும். புத்தகங்களின் ‌பக்கங்களை புரட்டி புரட்டி படிக்க நம் வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை மாணவர்கள் மறவா வண்ணம் மனதில் விதைகளாக விதைத்துக் கொண்டே இருந்தார்.

ஆசிரியர் அந்த வகுப்பில் ஒரு மாணவர் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும். அவ்வாறு வாசித்ததை வகுப்பில் சக் தோழமைகளோடு கலந்துரையாடல் செய்ய வேண்டும். விவாதங்கள் நம் அறிவை அகண்ட செய்யும். அதற்கான திறவுகோல் வாசிப்பு. ஒருவர் எதுவெல்லாம் செய்ய கூடாது எதுவெல்லாம் செய்யலாம் என்பதை வாசிப்பு அனுபவம் தரும். வாசிப்பு நமக்கு சிறகுகளை முளைக்க வைக்கும்.

நாம் அறிந்ததே. “மண்டேலா, புத்தகம் படிக்க அனுதித்தால் எத்தனை ஆண்டுகளானாலும் சிறையில் இருக்கிறேன் என்றார்” இப்படி வாசிப்பை ருசிக்க வைத்த ஆசிரியர் தான் இத்தனை மேதாவிகளை உருவாக்கியவர். ஊடகங்களுக்கு இன்று செய்தி கடைத்துவிட்டது, ஆசிரியர் அமரை நோக்கி அவர்களின் பயணம் தொடங்கியது. இங்கோ ஆசிரியர் அமர் தான் விதைத்த விதைகள் இன்று விழுதுகள் தாங்கும் விருட்சயமாக வளர்ந்துள்ளதில் மகிழ்ந்து விதைகள் விதைப்பதை நிறுத்தவில்லை. இன்றும் வாசிக்க ரசிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார், அவரின் வாசிப்பு பயணம் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும்………………