திரை விமர்சனம் : வாய்தா – முருகையன்

திரை விமர்சனம் : வாய்தா – முருகையன்




வாய்தா திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளிவந்தபோது ஒரு உணர்வு கொந்தளிப்பில் நான் சிக்கி இருந்தேன். இதோ தீர்வு வந்துவிட்டது என்று நம்பி ஒவ்வொரு முறையும் கிடைக்க விடாமலேயே தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிற சமூக அவலத்தை நேரடியாகப் படம் விளக்கியிருந்தது. அது, எனது 43 ஆண்டுகால தொழிற்சங்க வாழ்க்கையை எனக்குள்ளேயே இன்னொரு திரைப் படம் போல ஓட்டியது.

1979ல் மகாலட்சுமி மில்லில், 130 கேஷுவல் தொழிலாளரை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை விளக்கி பேசியதுதான், எனது முதல் வாயிற் கூட்டம். பல்லாண்டுகாலம் அந்த பிரச்சனை இழுத்து, அந்த ஆர்பிட்ரேஷன் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படவில்லை என்பதால் செல்லாது என்று எதிர் வழக்கு நிர்வாகம் போட்டு… அதன்மீது ஆண்டுக்கணக்கில் விவாதம் நடந்தது. கடைசியில் மில்லே மூடப்பட்டுவிட்டது.

செங்குன்றம் அருகே இருக்கும் அலமாதியில், ஒன்றிய அரசுக்கு சொந்தமான கால்நடைப் பண்ணை ஒன்று உள்ளது. அதில் பணி செய்த நூற்றைம்பது தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். தோழர் சி.கே.மாதவன், சங்கத் தலைவராக இருந்தார். அவர் வழக்கை நடத்தி தொழிலாளிக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. அதன் மீது நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. சிகெஎம் மறைந்த பின்பு, தோழர் ஜெகன் தலைவர் பொறுப்பேற்றார். அவர் காலத்திலும் வழக்கு நடந்தது. அவரது மறைவுக்கு பின்பு நான் பொறுப்பேற்றேன். இப்போதும் நடக்கிறது. 25 லிருந்து 30 வயதுக்குள்ளாக இருந்த அன்றைய வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சரி பாதிக்கு மேல் இறந்துவிட்டனர். இந்த வழக்குகளைப் பற்றிய கூட்டங்களில் ஏதாவது தீர்வு வந்துவிடாதா என்று அவர்கள் கண்களில் நிறைந்திருந்த ஏக்கம் என் நெஞ்சில் இருந்து அகலவில்லை. தொழிலாளர் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை வழக்கு ஏறி இறங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னும் முடியவில்லை.

கீழடிக்கு அருகே இருக்கும், சிலைமான் ருக்மணி மில்லில் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க மறுத்ததால், 35 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் பி.டி.நாராயணன் அவர்களும் நானும் வழக்கு நடத்தினோம். வழக்கு வெற்றிதான். ஆனால் பல மேல்முறையீடுகள். 2001ல் மில் மூடப்பட்டது. 11கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்த ஸ்டேட் வங்கி, இயந்திரங்களையும் ஒரு பகுதி நிலத்தையும் ஏலம் விட்டு சுமார் 70 கோடி வரை வசூலித்து இருக்கிறது. மிச்சமுள்ள 27 ஏக்கர் நிலத்தையும் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையும் தனது கடனுக்குப் போதாது என்று சொல்கிறது. தீர்ப்புப்படி பணிக்கொடை கொடுக்க முன்னுரிமை தர வேண்டும் என தொழிலாளர்கள் சார்பில் சங்கம் தொடுத்த வழக்கு நடந்து கொண்டே இருக்கிறது. மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் இறந்து விட்டனர். அவர்களது குடும்பங்கள் ஏதாவது பணம் கிடைத்து விடாதா என்ற பெரும் எதிர்பார்ப்போடு சங்க அலுவலகத்திற்கு இன்னும் வந்து செல்கிறார்கள். என்னையும் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து பேசுவார்கள்.

இதெல்லாம் எந்த திரைப்படத்திலும் இதுவரை வந்ததில்லை. #வாய்தா திரைப்படம் அதனை ஆழமாகத் தொட்டிருக்கிறது.

ஆதிக்க சக்திகள், சாதி வெறி சக்திகள், பெரும் பணக்காரர்கள், அதிகாரத்துக்கு வர எதையும் செய்யத் துணிந்த பாதகர்கள், ஆளும் வர்க்கத்தை சார்ந்த வழக்கறிஞர்கள், எந்த மனசாட்சியும் குற்ற உணர்ச்சியும் இன்றி, தமது பேதங்களை எல்லாம் மறந்து, சாமானியர்களை நசுக்குவதற்கு சட்டென்று சமதளத்தில் ஒன்று சேர்வது, மிகுந்த கலைநயத்தோடு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சாதி கடந்த காதல், சாதி கடந்த நட்பு, நீதிக்காக போராடும் வழக்கறிஞர்கள் என இன்றைய சமூகத்தில் ஆரோக்கியமான பகுதிகள் வாழ்வதையும் எடுத்துரைக்க படம் தவறவில்லை.

சலவைத் தொழிலாளியாக பேராசிரியர் மு.ராமசாமி வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவரது பெரும் நடிப்பு திறமைக்கு வர்ணனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரது வாய் துடுக்கு மிக்க மனைவியாகவும், சாதிக்குரிய வேலையை செய்து வருடக் கூலியை வணங்கிப் பெற்றுக்கொண்டு, அதே நேரத்தில் தனது கணவனும் மகன்களும் நல்வாழ்வு பெற வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையைத் தேக்கிக் கொண்டு, அது நிறைவேறாத போது அவர்கள் மீதே வெடித்துச் சிதறி கோபத்தை கொட்டுபவராக வரும் பெண் பாத்திரம் மிக வலிமையானது. அதில் நடித்தவர் -பெயர் கூட தெரியவில்லை- மிகச்சிறப்பாக, நடிப்பு என்றே தெரியாத வகையில், தனது கடமையை நிறைவேற்றி இருக்கிறார்.

தறிப்பெட்டியில் (நூல்) கண்டுகளை நிரப்பும் பெண் தொழிலாளியாக கதாநாயகி. தனது காதலைச் சொன்னால் காதலனுக்கு மரணம் நிச்சயம் என்று உணர்ந்து சொல்லவும் முடியாமல் மருகும் போது ஜொலிக்கிறார்.

விசைத்தறி தொழிலாளியாக, சாதியின் பெயரால் சமூகம் நிகழ்த்தும் இழி செயல்களை ஏற்கப்பொறாதவராய், அதனால் அந்தத் தொழிலையே புறக்கணிக்க நினைப்பவராய், சாதிய அடுக்குகளின் வன்மத்தை உணர்ந்து வேறு சாதிப் பெண் வெளிப்படுத்தும் காதலை ஏற்க தயங்குபவராய், புறம் தள்ள முடியாமல் அதற்கு இணங்குபவராய், இழிவுபடுத்த வருடம் மோதுவதற்கு உள்ளம் துணிந்தவராய், நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் தந்தைக்கு துணை நிற்பவராய்- பன்முக உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாநாயகனாக புகழ் மகேந்திரன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இது தனிநபர் பராக்கிரமங்களை இயற்கைக்கும், எதார்த்தத்திற்கும் மாறாக வெளிப்படுத்தாத இயல்பான கலைப்படைப்பு. அவமானங்களையும் வலியையும் தாங்கிக் கொண்டே தீரவேண்டிய, அதனால் எழும் துயரத்தையும் வெளிக்காட்ட முடியாத, அதேநேரத்தில் மனிதனாகத் தான் மதிக்கப்பட வேண்டும் என்ற விழைவை அடக்கமாக வெளிப்படுத்துகிற சிக்கலான கதாபாத்திரம். அறிமுக நிலையில் இது போன்ற வலுவான கதாபாத்திரம் வேறு நடிகர்களுக்கு கிடைத்திருக்கிறதா எனத் தெரியவில்லை. தன்னைக் காதலித்தவளுக்கு திருமணம் என்ற செய்தி வரும்போது, மிகக்குறைந்த ஒளி கொண்ட காட்சி அமைப்பில் ஒரே ஒரு கண்ணில் மட்டும் வெளிச்சம் பட, அந்த ஒரே கண் வழியே தனது உணர்வுகள வெளிப்படுத்தும் காட்சி ஒன்று போதும். புகழ், அடுத்த தலைமுறையிலும் பேசப்படும் நடிகராக மென்மேலும் வளரட்டும்.

அருமையான படப்பிடிப்பு. பகல், மாலை, முன்னிரவு, நள்ளிரவு என வானத்தின் ஜாலங்களையும், மலை முகடுகளின் பேரழகையும், மனிதர்களின் எண்ண ஓட்டங்களையும், உடல் மொழியையும் முகச் சுளிப்புகளையும், ஏன் சீமைக்கருவேல புதர்களையும் கூட துல்லியமாக, பார்ப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் காமரா காட்சிப்படுத்தி இருக்கிறது.

துருத்திக் கொள்ளாத இயல்பான இசை காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தம் சேர்க்கிறது. இரண்டு பாடல்கள் கேட்கச் சுகமாக இருந்தன. பலமுறை கேட்பதற்கு வாய்ப்பு வந்தால் நிச்சயம் நெஞ்சில் நிற்கும்.

இயக்குநர் மகிவர்மனுக்கு சல்யூட்!

கட்டாயம் பார்த்து விடுங்கள்.
இது போன்ற படங்களின் வருகையை
இப்படத்தின் வெற்றி கூடுதலாக்கும்.

– முருகையன்