Vazhga Vazhga Book by Imaiyam Bookreview by S Kumaravel நூல் அறிமுகம்: இமையத்தின் வாழ்கவாழ்க - எஸ்.குமரவேல்

நூல் அறிமுகம்: இமையத்தின் வாழ்க வாழ்க – எஸ்.குமரவேல்




தமிழகம் மற்ற எல்லா மாநிலங்களை காட்டிலும் ஏதோ ஒரு வகையில் அல்லது குறிப்பிட்ட குணாம்சம் கொண்ட வழியில் பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது, மிக முக்கியமாக அரசியல் சூழல் இந்திய துணைக்கண்டம் முழுவது ஒரே திசையில் பயணிக்கிறது என எத்தனிக்கும் வேளையில் அது இல்லை உண்மை என்பதை தென்னிந்திய மாநிலங்கள் பறைசாற்றுகின்றன அவற்றுள் கேரளாவும் தமிழகமும் தனித்துவமானது அப்படி பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாத அரசியல் நிகழ்வை மையப்படுத்தி எழுதப்பட்டதுதான் எழுத்தாளர் இமயம் அவர்கள் எழுதிய வாழ்க வாழ்க என்ற நாவல்.

வாழ்க என்கிற வார்த்தை அரசியல் களத்தில் மிக முக்கியமானது இந்த வார்த்தை இரண்டு வகையாக பயன்படுத்தப்படுகிறது சிலர் கொள்கைகளை வாழ்க வாழ்க என்கிறார்கள் பலர் தங்களுடைய தலைவர்களை வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள் அப்படி இந்த நாவல் குறிப்பிடுவது ஒரு அரசியல் தலைவரின் முன்னால் வாழ்க வாழ்க என வான் அதிர எழும் சத்ததிற்கு பின்னால் இருக்கும் மக்கள் படும் அவதியைதான் இந்த நாவல் ஆழமாக பேசுகிறது.

என்னதான் அரசியல் சூழல் வேறாக இருந்தாலும் கூட இந்தியா முழுவதுமே அரசியல் கூட்டங்கள் என்றால் ஒரே மாதிரியான அவதிகளை தான் குறிப்பாக வலதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகளின் கூட்டங்கள் வெளிப்படுத்துகின்றன மக்கள் அதில் உழன்றுகொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் மக்கள் அப்படி இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது.

நாவலின் கதைக்களம் அரசியல் எழுச்சி மாநாடுதான், ஒரு கிராமத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி மக்களை அத்துக்கூலிகளைப் போல தலைக்கு ஐநூறு ரூபாய் பணமும் பிரியாணி பொட்டலம் தருவதாக சொல்லி தேர்தல் பிரச்சார பொது கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் காலையில் 10 மணிக்கு துவங்குவதாக இருந்த மாநாடு பிற்பகல் மூன்று பதினைந்து மணிக்கு துவங்குகிறது காலை 7 மணி முதல் மாநாடு முடியும் வரை நிகழக்கூடிய நிகழ்வுகள்தான் தான் ஒட்டு மொத்த கதையும். 93 பக்கம் கொண்ட நாவல் ஒரு நாள் அரசியல் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் நான்கு பெண்கள் மற்றும் அவளை அழைத்துச் செல்லும் வெங்கடேச பெருமாள் என்ற அரசியல் கட்சி பிரமுகரை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தின் விறு விறு திரைக்கதைக்குசற்றும் குறைவில்லாத சுவாரஸ்யம் நிறைந்து இருக்கிறது.

நாவலில் குறிப்பிட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய தரவுகள் அனைத்தும் தமிழக தமிழக அரசியல் களத்தை நிச்சயம் நமக்கு நினைவூட்டும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் இரு திராவிடக் கட்சிகளின் மாநாடுகளை நமக்கு நினைவூட்டும்.

தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக தேர்தல் காலத்தில் பொதுக்கூட்டங்களுக்கு என பிரதான இடம் உண்டு, பிரம்மாண்ட மேடைகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் லட்சக்கணக்கான நாற்காலிகள் மேடைக்கு 5 மையிலுக்கு அப்பால் இருந்து சாலை ஓரங்களில் இருபுறம் சுவர் எழுப்பியது போன்று காணப்படும் டிஜிட்டல் பேனர்கள் போஸ்டர்கள் விதவிதமான கட் அவுட்டுகள் வானைப் பிளக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பும் ஒழிபெருக்கிகள், கணிக்கிட முடியாத அளவிற்கு தீப்பெட்டிகளை போல வாகனங்கள், லட்சோப லட்ச மக்கள் திரல் வெட்டு சத்தம், கலை நிகழ்ச்சிகள், பிரமாண்ட மேடை அலங்காரம் எல்.இ.டி திரை என வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஆச்சரியத்தை கிராமத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி வரக் கூடிய மக்களுக்கு இந்த மாநாட்டு ஏற்பாடுகள் தருகிறது குறிப்பாக இந்த பெண்களுக்கு தருகிறது.

காலையில் வேனில் ஏறி எப்படியோ அடித்து பிடித்து மாநாட்டில் நாற்காலியை எடுத்து வருகிறார்கள் மேடை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது மேடையில் நடனமாடும் பெண்கள் அனைவரும் இருபத்தி ஒரு வயதை தாண்டி இருக்க வாய்ப்பில்லை மாநாட்டுக்கு வந்த பெண்கள் நால்வரும் மேடையில் நடனமாடும் பெண்களின் அலங்காரம் உடை, மார்பகம் என அவர்களின் நடத்தை மீதான விமர்சனத்தை அள்ளி வீசுகிறார்கள்,

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது மாநாடு துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை அழைத்து வந்து அரசியல் பிரமுகரும் எப்போது கூட்டம் நடக்கும் என்று கேட்டால் இதோ இதோ உடனே நடந்திடும் என பிடிப்பின்றி பதில் அளிக்கிறார் எப்போது உங்க தலைவி வருவாங்க என பெண்கள் சற்று எரிச்சலுடன் கேள்வி கேட்கிறார்கள் மீண்டும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தப்பிக்கிறான் வெங்கடேசப்பெருமாள்.

வெயில் ஏறுகிறது அனைவருமே நா வரண்டு தண்ணீரின் தேவை மரத்துப் போகும் அளவிற்கு போகிறார்கள் எங்காவது ஒரு துளி தண்ணீர் கிடைத்து விடாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள்,

“இந்த படுபாவி பய நம்மள இழுத்து வந்து விட்டானே தண்ணி கூட கொடுக்கமாட்டேங்கரான் பாரு” காலை பேசும்போது மட்டும் வா அண்ணி நான் உன்ன பாத்துக்கிறேன் வசனமா பேசினா’ அந்த பையன் எங்க இருக்கான்னு தெரியல என நினைச்சுட்டு இருக்கும் போது வெங்கடேச பெருமாள் தண்ணீர் பாட்டில் க்கு பதிலாக கையில் கட்சியினுடைய பதாகையையும் தொப்பியும் கொண்டு வந்து கையில் கொடுத்தான் பிறகு கூடியிருந்த அனைத்து பெண்களும் தண்ணீர் என சத்தம் போட்ட பின்னால் ஆளுக்கொரு தண்ணீர் பாக்கெட் கொடுத்தான் வெங்கடேசப்பெருமாள், அது அவர்களுக்கு தொண்டையை நனைக்க மட்டுமே உதவியது, நேரம் சென்று கொண்டே இருந்தது பசி அனைவருக்குமே காதை அடைத்தது அசைவச் சாப்பாடு தருவதாக சொல்லி சைவ சாப்பாடு வழங்கினான் அதிலும் அவர்களுக்கு ஏமாற்றம், திட்டித் தீர்த்துக் கொண்டே சாப்பிட்டார்கள் என்ன கேள்வி கேட்டாலும் வெங்கடேசப்பெருமாளிடம் சரியான பதில் இல்லை காலையில் வெங்கடேச பெருமாள் நடந்து கொண்டதற்கும் மாலையில் வெங்கடேச பெருமாள் நடந்து கொண்டதற்கு நடத்தையும், பேச்சும் வித்தியாசமாக இருந்தது.

ஒருவழியாக மாநாடு 3.15மணிக்கு தொடங்கியது பிரம்மாண்ட ஹெலிகாப்டர் சத்தம் வானைப் பிளக்க கொடிகள் பறக்க கூட்டம் அம்மா வாழ்க, வாழ்க, என ஆர்ப்பரிக்க தலைவி வந்து இறங்கினார் நேராக மேடைக்கு வந்து என் உயிரின் உயிரான சொந்த பந்தங்கள் என்று எதிர்க் கட்சியின் மீதான விமர்சன கணைகளை பேசிச்சின் வழியே வீசினார்.

கீழ் இருந்த பெண்களில் ஒருவருக்கு அவர் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது ஓட்டு போட்டா அம்மாவுக்குத்தான் ஓட்டு போடுவேன் அப்படினு நெனச்சுட்டு பேசிக்கொண்டே இருக்கும்போது அந்த தலைவி பேசி முடிக்கும் சமயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இருந்த தடுப்பு கட்டை உடைந்து மள மளவென பெண்கள் பக்கம் சரிந்தது ஒரு சிறுமி உட்பட நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் கூட்டநெரிசலில் ஒட்டுமொத்த பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதி புழுதிக்காடு காணப்பட்டது, இது எதைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை,

தலைவி தான் பேச வந்ததை பேசிவிட்டு புழுதி பறக்க ஹெலிகாப்டரில் ஏறி சென்றதாக எழுத்தாளர் எழுதி இருக்கிறார், கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு நடைபெறுகின்ற ஒரு மாநாட்டில் பெண்கள் தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான இடமில்லாமல் இருக்கும் அவலத்தையும்.

கிராமங்களில் பெண்கள் மத்தியில் எவ்வாறு சாதிய பிடிமானம் இறுகிப் போயிருக்கிறது என்பதை அங்கு நடக்கக்கூடிய இரு வேறு சாதிப் பெண்களுக்கு இடையே நடைபெறும் நாற்காலி சண்டையும் அதில் அவர்கள் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள் போன்றவற்றை எழுத்தாளர் ஆழாக பதிவு செய்கிறார் எழுத்தாளர் இமயம் எப்போதும் தான் யார் பக்கம் நிற்கிறேன் யாருடைய வலியை பேசுகிறேன் என்பதில் எப்பேதும் உறுதியாகவே இருக்கிறார்.

நாவல் என்னவோ அனைத்து உழைப்பாளி மக்களும் அரசியல்வாதிளால் படும் துன்பத்தை பேசி இருந்தாலும் கூட அந்த உழைப்பாளி மக்கள் மத்தியிலும் கூட சாதிய பிடிமானம் குறிப்பாக பெண்கள் மத்தியில் சாதி அபிமானம் எவ்வாறானதாக இறுகிப் போயிருக்கிறது என்பதை எழுத்தாளர் தன்னுடைய எழுத்துகள் மூலம் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

அரசியல் எவ்வாறான பரிணாம வளர்ச்சியை கொண்டுள்ளது ஒரு அரசியல் பிரமுகர் அவருடைய தனிப்பட்ட வளர்ச்சி அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை என ஒரு மிகச்சிறந்த அரசியல் நாவலாக வாழ்க வாழ்க இருக்கிறது..

நாவலில் உள்ள கதாபாத்திரம் குறிப்பாக அரசியல் பிரமுகர் வெங்கடேசப் பெருமாள் கதாபாத்திரம் வடிவமைத்த விதம் உருவ ஒற்றுமை என அனைத்துமே படிக்கப் படிக்க கன கச்சிதம் ஏதேனும் ஒரு அரசியல்வாதியை வாசிப்பவர் முன்னால் உருவகப்படுத்தி காட்டும். நாம் இந்த நாவலைப் படித்து முடிக்கும் தருவாயில் சர்வ நிச்சயமாக நீங்கள் தமிழக அரசியல் கட்சிகளின் ஏதோ ஒரு மாநாட்டு நிகழ்வு உங்கள் கண் முன்னால் வந்து போவதை தவிர்க்கவே முடியாது, ஏனென்றால் பெரும்பாலும் வெளிப்படையாகவே இருக்கிறது.
நாவலில் வரும் அரசியல் வசனங்கள் எள்ளலும் துள்ளலும் நிறைந்தது. குறிப்பாக
“அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக் கொள்வதை கட்டிலும் அடுத்தவன் வளராமல் இருப்பதில் கவனமாக இருக்கிறான்”

“கட்சிங்கறதும் பதவிங்கறதும் ஒருத்தவ மேல ஒருத்தன் ஏறி
நின்னுகிட்டு உலகத்திலேயே நான்தான் ஓக்கியனு சொல்வதுதான்”

“சகித்துக் கொண்டு போறது தான் அரசியல், வெட்கப்படுகிறவன்
அரசியலுக்கு வரக்கூடாது எல்லோரும் வெட்கம் மானம் பாத்த அப்புறம்
யாரு எம்.எல்.ஏ எம்.பி ஆகுறது’

போன்ற அரசியல் சார்ந்த வரிகள் ஒரு சினிமாவின் வசனத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாதது,
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்கள் படும் துன்பத்தை அவதியை அதனுடைய இறுக்கத்தை பிரம்மாண்டமான பரந்த வெளியில் நடைபெறும் மாநாட்டில் மக்கள் படும் துன்பத்தை அதற்கு பின்னால் இருக்கக்கூடிய சிரமங்களைநாவல் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது….

வாழ்க வாழ்க – பார்த்த கேட்ட நிகழ்வின் தொகுப்பு…

நூலின்பெயர் : வாழ்கவாழ்க
ஆசிரியர் : இமையம்
பதிப்பகம் : கிரியாபதிப்பகம்
பக்கங்கள்:  93
விலை : 110

தோழமையுடன்
எஸ்.குமரவேல்
மாவட்ட செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்
கடலூர் மாவட்டக்குழு

நூல் அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “வாழ்க வாழ்க” – மதிவதனி இராஜசேகரன்(இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “வாழ்க வாழ்க” – மதிவதனி இராஜசேகரன்(இந்திய மாணவர் சங்கம்)

அரசியல் வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு குறுநாவலாகத் திகழும் "வாழ்க வாழ்க" என்னும் இப்புத்தகம் என்னைப் பேரளவில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஓர் எழுத்தாளர் தன் எழுத்துக்களால் வாசகரின் உள்ளத்தையும் தாண்டி மூளையையும் எப்படித் தொட…
நூல் அறிமுகம்: “வாழ்க வாழ்க” – இரா.சசிகலா . 

நூல் அறிமுகம்: “வாழ்க வாழ்க” – இரா.சசிகலா . 

     தேர்தல் கூட்டங்கள் நடக்கும் பொழுது திரளான மக்கள் குழுமியிருப்பதையும், புகைப்படக்காரர் தங்கள் பக்கம் திரும்புகிறார் என்று தெரிந்தால், சிரிப்புடன் கையசைக்கும் மக்களையும் தேர்தல் ஒளிபரப்புக் காட்சிகளில் கண்டிருப்போம். ஆனால் அவர்கள் உண்மையில் மகிழ்ச்சியானவர்களா என்ற கேள்விக்குப் பதிலாக எழுத்தாளர்…
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “வாழ்க வாழ்க” – அ.சொக்கலிங்கம் (இந்திய மாணவர் சங்கம்)

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “வாழ்க வாழ்க” – அ.சொக்கலிங்கம் (இந்திய மாணவர் சங்கம்)

"உயரம்" என்ற பொருளை, தன் பெயரில் கொண்டிருக்கும் எழுத்தாளர் "இமையம்", எப்பொழுதும் எந்த ஒரு சலனமும், சங்கடமும் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் உயர்குடி மக்களின் வாழ்க்கையை கதையாக எழுவதில்லை.  அவற்றுக்கு மாறாக அடக்குமுறையால், ஒடுக்குமுறையால்  ஏற்படும் சமூக முரண்கள் நிறைந்த விளிம்புநிலை…