வேங்கையன் சிறுகதை – இரா.கலையரசி
யம்மா டவுசர் கிழிஞ்சிருச்சு. தச்சு தா ன்னு போனான் வேங்கையன். அம்மா முதுக புடிச்சு வெளையாடிட்டு இருந்தான் தம்பி.
அடுப்புல கொஞ்சம் கல்ல வச்சு, இருந்த அரிசியில கஞ்சி காய்ச்சிக்கு இருக்கா கனகம். கந்துக்காரவங்க கிட்ட குடுக்கறதுக்கு வச்சு இருந்தாள் காச.
பள்ளிக்கூட புள்ளைங்க எல்லாம் சிரிக்கிறாங்க. ஓட்ட வண்டினு லேசா பேசுருங்கன்னான் வேங்கையன்.
பொறுடானு அவனை அமட்ட, தரையில பேஞ்ச மூத்திரத்த ஒழப்பிக்கு இருக்கான் சின்னவன்.
சுரீர்னு கையுல அடிச்சா. வீல்னு கத்திகிட்டு அழுதுக்கே ஓடிட்டான் மருது.
ஒத்த மண் வீட்டுல பேய்ஞ்ச மழையில மதிலு விரிஞ்சுக்கு இருக்கு. நல்லா ஊறிப் போயி கிடக்கு. இப்பயோ? அப்பயோனு விழுக காத்திருக்கு.
வீட்ட செம செய்ய முடியல. வாங்குன கந்துக்க கட்ட தான் காசு வச்சு இருக்கா. ஒலையில கொதிச்ச தண்ணீயா மனசு கிடந்து கொதிக்குது.
அப்ப தான் மழை விட்டு இருந்துச்சு. தம்பிய தூக்கிக்கு வெளிய போனான் வேங்கையன். செடியில இருந்த மழைத்துளிங்கல உலுக்கி விளையாட்டு காட்டுனான்.
எதிர்த்த வீட்டு மாறன் வந்தான். டவுசரு டவுசரு டவுசருனு வக்கனை காட்டிகிட்டு அவங்க அம்மா தந்த பலகாரத்த தின்னுகிட்டே பேசுனான்.
என்னாடா? உன் தம்பி இம்புட்டு அழுக்கா இருக்கான்னான். மண்ண குழப்பி அடிச்சுவிடுரா. ஹி.ஹி.ஹி.னான். ஓங்கி விடனும் போல இருந்துச்சு. அம்மா அடிப்பான்னு பேசாமல் இருந்துகிட்டான்.
படிக்கனும், எழுதனும்னு வேங்கையனுக்கு ஆசை. பள்ளிக்கூடத்துலயே எல்லாம் குடுத்துரதால அவனுக்கு செம இல்ல.
இவனுக்கு சின்ன சின்ன பொருள எல்லாம் அவங்க டீச்சரே வாங்கித் தந்திருவாங்க. அதனால அது இல்லை! இது இல்லைனு சொல்லி பள்ளிக்கூடம் போகாமல் இருக்க மாட்டான்.
இப்ப, இந்த தம்பி பய பொறந்ததுல இருந்து தான் சரியா போக முடியல. இவன பார்த்துக்க சொல்லி வீட்டுல இருக்க வச்சிடுறா அம்மா.!
தம்பி அழுக ஆரம்பிச்சுட்டான். ரே! ரே னு புடிச்சு தாலாட்டுனான் அண்ணன். பள்ளிக்கூடத்து சட்டையவே போட்டுக்கறதால அவனுக்கு சட்டை கிழிஞ்சு போயிருது.
சத்துணவு அத்த கூட இவனுக்கு ஒரு கை சேர்த்து போடும். தம்பிக்கு கொஞ்சம் வாங்கிகிட்டு போவான். அம்மா வேலைக்கு போயிருவாள்.
சோத்த நல்லா மசிச்சு ஊட்டுவான். எங்கயும் பட்டுக்குருமோனு அவனுக்கு பயம். ஒன்றரை வயசு ஆகிருச்சு. இங்கயும் அங்கயுமா ஊர ஆரம்பிச்சுட்டான்.
பின்னாடியே திரிஞ்சான் வேங்கையன். அப்புடி தான் ஒருக்கா, அம்மா கங்க அணைக்காமல் அடுப்பை போட்டுட்டு போயிட்டா. அப்ப மருதன் தவழ்ந்துகிட்டு இருந்தான். கையில கங்கு பட்டு துடிச்சுட்டான்.
பச்ச மண்ண பார்க்காமல் என்னாடா செஞ்சுக்கு இருந்தன்னு ஆத்தா வேங்கையன அடிச்சு துவச்சுட்டா.ஒரு நேரம் மருதன் மேல கோவமா வரும். இவனால தான் அம்மா நம்மள அடிக்கிறானு நினச்சுக்குவான்.
ஒரு நாள் இவனையும் இழுத்துகிட்டு போயிட்டான்பள்ளிக்கூடத்துக்கு. பிரகாசு, பஞ்சவர்ணம், எல்லாரும் மருதன பார்த்து கேலி பேசி சிரிச்சாங்க. தலைய நல்லா அழுத்தி சீவி, அம்மா வக்கிற பொட்ட வச்சு வுட்டு இருந்தான்.
போனதுமே கழிஞ்சுட்டான் மருதன். எல்லா புள்ளைகளும் அங்க, இங்க ஓட ஒரே கலவரமா போயிருச்சு. தம்பி கொஞ்சம் பெருசாகட்டும் பா., அப்புறம் கூட்டிக்கு வானு டீச்சர் தான் ஆறுதலா பேசுனாங்க.
வேங்கையன வராத நாளுக்கான பாடத்த அவனுக்கு சொல்லித் தருவாங்க. நல்லா படிப்பான் வேங்கு. அதனால அவனுக்கு புரிஞ்சுக்றதுல கஷ்டமில்ல.
தினமும் போக முடியாது. அது தான் கஷ்டம். நல்லா படிச்சு என்னத்தையோ செய்யனும்னு மட்டும் தோணுது. ஆனால், என்னா செய்யிறதுனு அவனுக்கு தெரியல.
இந்தா அழுதுட்டான் மருது. மருத தூக்கிகிட்டு அம்மா கிட்ட போனான். புள்ளைய வாங்கிகிட்டா. ஒலையில போட்ட அரிசி, அவன் மனசுல பொங்குற சோகமா பொங்கிக்கு இருக்கு.
ஒண்ணும் ரெண்டுமா வெளிய சிதறிகிட்டும் இருக்கு. உப்புக்கும் வழி இல்ல. ஆசையா தான் கட்டிகிட்டு வந்தாள் கனகம். வேங்கையன் பொறக்கற வரையிலும் நல்லா தான் இருந்தான் அரசு.
கனகத்த நல்லா பார்த்துகிட்டு கிடைக்கிற வேலைய போயிக்கு இருந்தான். எப்ப குடிக்கு போனானோ? அப்பயே குடி முழுகி போயிருச்சு. எந்நேரமும் குடிச்சு குடல் வெந்து கிடந்தான்.
டவுனு பெரியாஸ்பத்திரிக்கு கூட்டுக்குபோனா. அப்ப தான் மருதன் பெறந்து இருக்கான். கண்றாவி பொழப்பு. வயித்துல போட ஒண்ணும் இல்ல. அவங்க ஆத்தா தான் கூட இருந்து பார்த்துகிட்டா.
கல்லீரல் ரொம்ப சேதமாயிருச்சுமானு பெரிய டாக்டர் கைய விரிச்சுட்டாங்க. வீட்டுக்கு கூட்டிக்கு போக சொல்லிட்டாங்க. கண்ணெல்லாம் டொக்கு பாஞ்சு ஆளே உருகிப் போயிட்டான்.
சாவுக்கு காத்திருந்தவனுக்கு அதுவே ஒரு நாள் வந்திருச்சு.அக்கம் பக்கத்து வீட்டு ஆளுக உதவி செஞ்சு, ஆளுக்கு கொஞ்சமா போட்டு தூக்கி போட்டாங்க.
பழைய நினப்பு கொதிச்ச உலைய விட பெருசா இருந்துச்சு. கல்லு தட்ட போட்டு கஞ்சிய வடிச்சா கனகம். மருதன் தண்ணிய குடிக்க ஊ.,ஊ.,ன்டு வாய கொண்டுக்கு போனான்.
சுட்டுரும்டானு இழுத்துகிட்டான் வேங்கையன். தூக்கிகிட்டு போடா இவனைன்டு எரிஞ்சு விழுந்தாள் கனகம்.
டமடமன்டு வண்டி வந்து நிக்கிற சத்தம் கேட்டுச்சு. என்னா கனகம், இன்னைக்கு கிடைக்குமா? னு வக்கிரமா பேசி இளிச்ச மேனிக்கே வந்தான் பாலன்.
அவன் பேச்சும், பார்வையும், கனகத்த வெறுப்பேத்துச்சு. இங்கேரு., உன் காசுக்கு நிறைய வட்டி கட்டிட்டேன். இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. அதையும் முடிச்சு விட்டுர்ரேனு பொருமுனா.
கசங்குன ரூவா நோட்ட, குடுத்தவள் கிட்ட, அப்புடி எல்லாம் கணக்கு வெட்ட முடியாதுனு கார பல்ல காட்டி சிரிச்சுகிட்டு போனான். அவன குத்தி கிழிச்சிரலாமான்னு வேகாளம் வந்துச்சு.
புள்ளைங்க முகத்த பார்த்து, இதுகளுக்கு ஆள் இல்லையேனு நினச்சு பேசாமல் இருந்தாள். அம்மா கனகம் கோவமா இருக்கானு தம்பிய தூக்கிக்கு போயிட்டான் வேங்கையன்.
வடிச்ச கஞ்சிய வட்டியில ஊத்தி உறிஞ்சி குடிச்சான். எதுவுமே இல்லாததுக்கு இதாச்சும் கிடைச்சுதேனு ஒரு நிம்மதி. அவனை பார்த்து மருதனும் உர், உர்னு செஞ்சான்.
கனகம் வாங்கி வச்சு இருந்த மிட்டாயி பொட்டலத்த எடுத்தா. அந்த கோலிகுண்டு கண்ணுங்க இன்னும் பிரகாசமா ஆகிருச்சு. மருது ஊ ஊனு புடிச்சு இழுத்தான்.
சின்ன துண்ட எடுத்து, வாயில போட்டுகிட்டான் வேங்கையன். என்ன நினச்சாலோ கனகம், ரெண்டு புள்ளைங்களயும் கட்டிகிட்டு அழுதாள்.
வேங்கையன் அம்மாவ இறுக்கி கட்டிகிட்டான். அம்மா ஏன்? அழுகுறா விளங்கல. விசும்பல் சத்தம் கேட்டுகிட்டு இருந்துச்சு. இவங்கள பார்த்து மழையும்
அழுக ஆரம்பிச்சிருச்சு. தூக்கம் துக்கத்தை தாண்டி கண்ண மூடிருச்சு.
மருதன் சிணுங்கினான். கண்ண திறந்து பார்த்தான் வேங்கையன். அம்மா தூங்கிகிட்டு இருந்தாள். அழுத மருதன தூக்கிகிட்டு வெளிய வந்தான்.
மழை நிக்காமல் ஊத்திக்கு இருக்கு. பக்கத்து வீட்டுல நின்னு மருதன சமாதானம் படுத்திக்கு இருந்தான். “டம்”முன்னு சத்தம் கேட்க திரும்பி பார்த்தவன் அலறினான்.
யம்மா! ன்டு பெருங்குரலெடுத்து கத்தவும் அந்த மண் வீடு இடியவும் சரியா இருந்துச்சு. மொத்தமா பொதபட்டு போனாள் கனகம். மருதனை தூக்கிகிட்டு
ஓடுறான் வீட்ட பார்த்து வேங்கையன்.