நூல் அறிமுகம்: ஒன்றில் ஆயிரம் – எஸ்.ஜெயஸ்ரீ
பெங்களூரில் 107 மொழிகள் பேசப்படுவதாக சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. பல மொழிகள் பேசப்படும் இடமாகவும் பலவிதமான பண்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் வசிக்கும் இடமாகவும் பெங்களூரு இருப்பதையும் பல கலைகள் செழித்தோங்கும் இடமாக கர்நாடக மாநிலம் விளங்குவதையும் அச்செய்தியின் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. சமீபத்தில் படிக்க நேர்ந்த பாவண்ணனின் ‘வெங்கட் சாமிநாதன் : சில பொழுதுகள் சில நினைவுகள்’ புத்தகத்தின் வழியாக அச்செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
பாவண்ணன் தமிழ் இலக்கிய உலகில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாவல், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் என பல தளங்களில் செயல்பட்டபடி இருப்பவர். அவருடைய ‘வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள், சில நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனுடன் பாவண்ணன் நேரிடையாகவும், தொலைபேசி வழியாகவும் நிகழ்த்திய உரையாடல்கள் நினைவலைகளாகத் தொகுத்து அருமையான கட்டுரைகளாக்கி, இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட வெங்கட் சாமிநாதன் 2015இல் இயற்கையெய்தினார். அவருடைய மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீராநதி இதழில் ஒரு தொடரை எழுதினார். ஓராண்டு காலம் வெளிவந்த அத்தொடரில் வெங்கட் சாமிநாதனுடன் பழகிய நினைவுகளையும் உரையாடிய தருணங்களையும் நினைவுகூர்ந்து பன்னிரண்டு கட்டுரைகளை எழுதினார். பிறகு 2017இல் அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெற்று வெளியானது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாசகனுக்கு ஒரு புதிய புத்தகத்தையோ, நாடகத்தையோ, கதை பற்றிய ஆழத்தையோ உணர்த்துவதாக வருகிறது. இலக்கியம் சார்ந்து இருவர் சந்தித்துக் கொள்ளும்போது கிளர்ந்தெழும் சுவாரசியம் புத்தகமெங்கும் வழிந்தோடுகிறது.
பாவண்ணன் இயல்பிலேயே அமைதியானவரும் பிறரோடு உரையாடுவதில் ஆர்வமும் கொண்டவர் படைப்புகளை ஆழ்ந்து வாசித்து அதன் அழகுகளையும் அழகுக்குறைபாடுகளையும் மிக அழகாக முன்வைப்பவர். படைப்புகளை நெருங்கி நின்று அணுகி அறிய முயற்சி செய்வதுபோலவே, பாவண்ணன் மனிதர்களையும் நெருங்கி நின்று புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்.
முன்னுரையில் பாவண்ணன் முதலில் தான் வெ.சா.விடமிருந்து விலகி நின்றிருந்ததாகவும் ஏதோ ஒரு தருணத்தில் நெருங்கிச் சென்று பழகத் தொடங்கியதாகவும் குறிப்பிடுகிறார். அந்த முதல் சந்திப்பைப்பற்றிய குறிப்புகளை மிகவும் நேர்த்தியாகத் தொகுத்து முன்வைத்திருக்கிறார் பாவண்ணன். அந்தச் சந்திப்பிலேயே அவருடன் ஏன் மற்றவர்கள் சாதாரணமாக நெருங்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை உரையாடலின் ஒரு சிறு துணுக்கின் வழியாக காட்டிவிடுகிறார். தொடர்ந்து வரும் கட்டுரைகள் வழியாக வெ.சா. என்னும் ஆளுமையைப்பற்றிய சித்திரத்தை வாசகர்களின் நெஞ்சில் அழுத்தமாக தீட்டிவிடுகிறார் பாவண்ணன். புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருணத்தில் அவரை இழந்துவிட்ட வலியை உணரமுடிகிறது.
வெ.சா.வின் உண்மையான வருத்தங்கள், தமிழிலக்கியம் பல்வேறு வகைகளில் சிறப்பாக வளரவேண்டும் என்ற நெஞ்சார்ந்த கனவுகள், அப்படி வளரவில்லையே என்ற அவருடைய ஆதங்கங்கள் எல்லாவற்றையும் ஒருசேரப் படிக்கும்போது, தமிழிலக்கியத்தில் இவைசார்ந்த வளர்ச்சி உருவாகாததன் வருத்தம் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

வங்காள எழுத்தாளர் ஒருவர் மகாகவி பாரதியாரை, அவரது பாஞ்சாலி சபதத்தை, அதன் நாடகத்தன்மை பற்றியெல்லாம் சொன்ன நிகழ்ச்சியை வெ.சா.விடம் விவரித்து பெருமைப்பட்ட போது, அந்த வங்காள எழுத்தாளரிடம் வங்காள இலக்கியம் பற்றி என்ன கேட்டுத் தெரிந்துகொண்டீர்கள் என்றொரு கேள்வியைத் தொடுக்கிறார் வெ.சா. தான் எதுவும் கேட்கவில்லை என்று பதில் சொல்கிறார் பாவண்ணன். அப்போது மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள நாம் ஏன் கூச்சப்பட வேண்டும் என வெ.சா. கேட்ட கேள்வி இலக்கிய ஆர்வமுடைய ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்ட கேள்வியாகவே இருக்கிறது.
நாடகம் என்றொரு இலக்கிய வகை தமிழில் பெரிதாக வளரவில்லை என்ற தன் வருத்தத்தையும் அவர் பதிவு செய்த விதத்தை பாவண்ணன் அழகாக எழுதியிருக்கிறார். கன்னடத்தில் சிறந்த நாடகங்களாக விளங்கக்கூடிய ஹயவதனன், துக்ளக், ஊருபங்க போன்றவற்றைப்பற்றி வாசகர்களும் தெரிந்துகொள்ள முடிகிறது. கன்னட இலக்கியத்தின் வளர்ச்சியையும் கன்னடத்தின் தலைசிறந்த எழுத்தாளரான சிவராம காரந்தரைப்பற்றியும் அவருடைய முக்கியமான நாவல்களான ‘மண்ணும் மனிதரும்’ , ‘பித்து மனத்தின் பத்து முகங்கள்’ போன்றவை பற்றியும் ஒரு கட்டுரை வழியாக நமக்கு அறிமுகம் கிடைக்கிறது.
மற்றொரு கட்டுரையின் வழியாக ந.பிச்சமூர்த்தியின் முக்கியமான படைப்புகளான ‘தவளை ஜபம்’, ’பதினெட்டாம் பெருக்கு’, ‘’மாங்காய்த்தலை’, ‘மோகினி’, ’தாய்’, ‘காவல்’ போன்றவற்றைப்பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. ‘குடும்பக்கதை’ என்னும் கதையைப்பற்றிய வெ.சா.வின் பார்வை, அந்தச் சிறுகதையை எப்படி அணுகவேண்டும் என்று அவர் எடுத்துரைக்கும் பாங்கு அனைத்தும் சேர்ந்து அவற்றையெல்லாம் தேடியெடுத்து உடனே வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
இன்னொரு கட்டுரையில் ரயில்வே ஸ்டேஷனில் வெ.சா.வுடன் பாவண்ணனும் மற்றும் சில நண்பர்களும் உரையாடுகிறார்கள். இதுபோன்ற எழுத்தாளுமைகள் சந்தித்துக்கொள்ளும்போது, இயல்பாகவே அவர்களுடைய உரையாடல்கள் இலக்கிய நுட்பங்கள் சார்ந்த பகிர்தல்களாக எப்படி மலர்கின்றன என்பதை உனர்ந்துகொள்ள முடிகிறது. ரயில்வே ஸ்டேஷன் பற்றிய கதைகளைக் குறித்த பகிர்தலாகவே அந்த உரையாடல் அமைந்துவிடுகிறது. கு.அழகிரிசாமியின் ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன்’, பாரதியாரின் ‘ரயில்வே ஸ்தானம்’, கு.ப.ரா.வின் ‘விடியுமா?’ தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ என பல கதைகளை அறிமுகப்படுத்துகிறது.
பாரதியாரின் ‘ரயில்வே ஸ்தானம்’ கதையைப்பற்றி வெ.சா. சொல்லும்போது இந்தக் கதையையெல்லாம் வாசிக்கவில்லையே என்றொரு ஏக்கம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. தான் கூட இக்கதையை தொடக்கத்தில் ஒரு நடைச்சித்திரமாகவே நினைத்துக் கொண்டிருந்ததாக பதிவு செய்கிறார் பாவண்ணன். வெ.சா. அந்தக் கதையில் வரும் மூன்று திசைவழி செல்லவிருக்கும் தடங்களையும் பயணிப்பதற்காக அமர்ந்திருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையையும் இணைத்துச் சொல்லும் விதத்தில் இருக்கும் அழகைக் கவனித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.
ஒரு கதையில் இடம்பெறக்கூடிய ஒவ்வொரு தகவலையும் ஏதோ ஒரு நுட்பமான வகையில் கதையின் மையத்தோடு பிணைத்தே ஒரு படைப்பாளி எழுதிச் செல்கிறான். அந்த நுட்பத்தைக் கண்டடைந்து மகிழ்பவனே உண்மையான வாசகன். வாசிப்பதால் கிடைக்கும் பேரின்பமே அதுதான். பாவண்ணனும் வெ.சா.வும் நிகழ்த்தும் உரையாடல் வழியாக, புனைகதை வாசிப்பு சார்ந்த ஒரு பேருண்மையை வாசகர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படியெல்லாம் கதைகளை அணுக வேண்டும் என்பதையும் வாசகனுக்கு உணர்த்துவதோடு கதைகளின் விவரிக்கப்படும் விவரங்களுக்கும் கதைக்கும் உள்ள இணைப்பையும் கண்டடைந்து படிக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
மற்றொரு கட்டுரையில் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையைப் பற்றிய உரையாடலும் மிக முக்கியமானது. அந்த உரையாடல் வழியாக அந்தக் கதையை ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு திறப்பு கிடைக்கிறது.

படைப்புகளைப்பற்றி அழகாகச் சொல்வது போலவே வெங்கட் சாமிநாதன் தன் வாழ்வில் தான் சந்தித்த முக்கியமான மனிதர்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார். தன்னை வளர்த்த பாட்டி, தன்னை வாழ்க்கையில் கைதூக்கிவிட்ட மாமா, தனக்கு விமான நிலையத்தில் உதவி செய்த பணியாளர் என எல்லா மனிதர்களையும் மறக்காமல் தன் மனத்தில் பதித்திருக்கிறார். இளகிய மனம் உடையவராகவும் தன் கண்களைத் தானம் செய்யும் பெரிய உள்ளம் கொண்டவராகவும் வெ.சா. வாழ்ந்திருக்கிறார் என்னும் செய்தி அவர் மீது பெருமதிப்பை உருவாக்குகிறது.
ஒரு மனிதர் அடுத்த மனிதர் மீது ஏன் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்றும், ஏன் சாடிக்கொண்டே இருக்கிறார் என்றும் புரிந்துகொள்ளாமலேயே, அவரைச் சிடுமூஞ்சி என ஒதுக்கி வைப்பது அனைத்தும் மனித இயல்பாகவே மாறிவிட்டது. அவர்களுடைய கோபம் அல்லது சிடுசிடுப்புக்குப் பின் உள்ள உண்மைப்பொருளை சரியாகப் புரிந்து கொள்ள மறுப்பதும் இயல்பாகிவிட்டது. அப்படி, பலராலும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் போன, ஒரு நல்ல இலக்கிய விமர்சகரை, இலக்கிய ஆளுமையை சரியாக வெளிக்கொண்டுவர இந்தக் கட்டுரைத்தொகுதி வழியாக பாவண்ணன் முயற்சி செய்திருக்கிறார்.
வெ.சா. என்பவர் வம்பிழுப்பவர் அல்லர். மாறாக, ஒரு சவாலான அழைப்பு விடுப்பவர். சிறப்பாகவும் வித்தியாசமாகவும் இலக்கியங்களைப் படைக்க படைப்பாளர்களுக்கு அறைகூவல் விடுப்பவர். நன்றாகப் படிக்கச் சொல்லி கண்டிக்கும் ஆசிரியரைப்போன்றவர். கண்டிப்பான தந்தையைப்போன்றவர் என ஆங்காங்கே பாவண்ணன் கூறுகிறார். இக்கட்டுரைகளின் மூலம் வாசிப்பவராலும் இதை உணரமுடிகிறது.
பாவண்ணன் கன்னட இலக்கியம் சார்ந்து இயங்கும் தமிழ்ப்படைப்பாளராக இருப்பதனால் பல இடங்களில் கன்னடத்தில் முக்கியமான படைப்புகள் பற்றிய உரையாடல்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் கன்னட இலக்கியத்தின் முக்கியப்படைப்புகள் குறித்த அறிமுகம் வாசகர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. 117 பக்கங்களில் பன்னிரண்டு கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல சிறுகதைகள், நாடகங்கள் பற்றி வாசகர்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.
பாவண்ணன் உரையாடல்களை மிகச்சரியாக குறிப்பெடுத்துக்கொண்டோ கவனத்திலும் நினைவிலும் கொண்டோ மிக அருமையான கட்டுரைகளாக ஆக்கியிருப்பது பாராட்டுக்குரியது. வெ.சா. மூலம் பல படைப்புகளைப்பற்றிய அறிமுகம் வாசகர்களுக்குக் கிடைக்கிறது. இது இப்புத்தகத்தின் மிகப்பெரிய பயன். உரையாடல்களை மிகச்சிறப்பான கட்டுரைகளாக்கித் தந்திருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். புத்தகத்தை அழகான வடிவமைப்போடு வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகமும் பாராட்டுக்குரியது.
(வெங்கட் சாமிநாதன் : சில பொழுதுகள் சில நினைவுகள். பாவண்ணன், சந்தியா பதிப்பகம், 53 வது தெரு, 9 வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. விலை. ரூ.120)