இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ!
ரவீந்திர சங்கீதம் குறித்த கடந்த வாரத்தின் பதிவு நிறைய அன்பர்கள் உள்ளங்களைக் குளிர்வித்திருக்கிறது. தற்செயல் ஒற்றுமை ஒன்று இதில் பேச இருக்கிறோம். அதற்கு முன் ஒரு சுவாரசியமான விஷயம்.
வங்கி பரிவர்த்தனை தொடர்பான அய்யம் ஒன்றைக் கேட்க அழைத்தார் புதிய அன்பர் ஒருவர். அவர் கேட்ட விஷயம் முடிந்ததா என்று அவரிடமிருந்து பதில் எதிர்பார்த்த நேரம், வாட்ஸ் அப்பில் பார்க்கையில் தபலா வாசிக்கும் புகைப்படம் தனது டிஸ்பிளே படமாக வைத்திருப்பதைக் கண்டேன்.
அவரை நான் நேரில் பார்த்ததில்லை என்றாலும் அது அவராகத் தான் இருக்கவேண்டும் என்று பட்டது. அவரை அழைத்துக் கேட்கவும், தாம் குறிப்பிட்ட வேலை முடிந்தது என்று சொன்னார், அந்த தபலா வாசிப்பது நீங்கள் தானா என்றதும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டா என்று கேட்டார் சரவணன் எனும் அந்த அன்பர்.
அடுத்த சில நாளில், ஒரு வீடியோ இணைத்து அனுப்பினார். தமிழ்த் திரையின் மூத்த தபலா இசைக்கலைஞர் ஒருவரோடு ஓர் எளிய உரையாடல் நடத்தியதன் காணொளிப்பதிவு அது. எளிமையான அந்த மனிதர், இசையுலகில் ஜாம்பவான்களுக்கு தபலா வாசித்தவர். அவருடைய தந்தை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் திரையிசையில் தபலா வாசிப்பு வழங்கியவர்.
வேறு யார், சாட்சாத் பிரசாத் அவர்கள் தான்! அவருடைய அண்ணன் ராமலிங்கம், தம்பிகள் மனோகர், (மறைந்துவிட்ட) ருத்ரா எல்லோருமே தபலா கலைஞர்கள். தம்முடைய மகன்கள் மட்டுமல்ல, மகன் ரமணாவின் மைந்தன் கார்த்திக் வம்சி கூட தபலா இசைக்கிறார் என்கிறார் பிரசாத்.
ஏழு வயதில் வாசிக்க வந்திருக்கிறார் பிரசாத். வஞ்சிக்கோட்டை வாலிபனின் புகழ் பெற்ற பத்மினி – வைஜயந்திமாலா போட்டி நடனப் பாடலான ‘கண்ணும் கண்ணும் கலந்து‘ பாடலுக்கு வாசிக்கையில் அவருக்கு வயது 12. மெல்லிசை மன்னரின் குழுவில் ஒருவராக இணைந்தது 1972ல்.
அவரது நேர்காணல் எதை எடுத்துப் பார்த்தாலும், ஜி ராமநாதன், கே. வி மகாதேவன், எம். எஸ் விசுவநாதன் மூவரும் பிரும்மா, விஷ்ணு, சிவன் என்று பரவசம் பொங்கக் கூப்பிய கரங்களோடு சொல்கிறார். இளையராஜா மண்ணில் சொர்க்கத்தை வரவழைத்துவிட்டவர் என்கிறார். கொண்டாடுகிறார். பாலிவுட்டில் நவுஷத். ஆர் டி பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால் என்று முக்கிய இசை அமைப்பாளர்களுக்கு எல்லாம் வாசித்திருக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கும் வாசித்திருக்கிறார். புதிய இளம் தலைமுறை இசை அமைப்பாளர்கள் அழைப்பையும் ஏற்று வாசித்து வருகிறார்.
எம் எஸ் வி அவர்களது மகள் அவரை நேர்காணல் செய்கிறார். நிறைய பேர் அவரோடு உரையாடல் நடத்தும் வெவ்வேறு காணொளிப் பதிவுகளில், அவரது பதில்கள் ஆதாரமான செய்திகளில் மாற்றம் இல்லாத பொழிவாக இருக்கிறது.
பாடலை ஓடவிட்டு தபலா இசை வருமிடங்களில் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றனர். தமது முறை வரும்வரை அவர் கண்களில் ஆர்வம் பொங்க, எந்த இடம் என்ற எச்சரிக்கை அவரது விரல்களில் காத்திருக்க, உரிய இடத்தில் சொடுக்குப் போட்டாற்போல் பளீர் என்று எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் வாசித்த வாசிப்பை அப்படியே அழகான பிரதி எடுத்தாற்போல் வாசிப்பதைக் கண் கொண்டு பார்க்கவேண்டும், காதுகள் மட்டுமல்ல உடலே சிலிர்க்கும்.
பாரதி கண்ணம்மா (நினைத்தாலே இனிக்கும்) பாடலைத் தான் அதிகம் அவரை வாசிக்கக் கேட்டு இன்புறுகின்றனர். அத்தனை அழகு அது. எம் எஸ் வி அவர்களது கற்பனைக்கு சபாஷ் போடவேண்டும். 47வது கட்டுரையில் பார்த்த பாடல் அது. அல்லது, ராகங்கள் பதினாறு கேட்கின்றனர். அதுவும் அருமையானது.
பிரசாத் அவர்கள் குறிப்பிடும் இன்னொரு பாடல், அண்ணன் ஒரு கோயில் என்றால்…! அந்தப் பாடலுக்கான வாசிப்பை அவரிடம் வாசிக்கச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்குப் பட்டது.
பி சுசீலா தனியாகவும், எஸ் பி பி தனியாகவும் பாடியிருக்கும் அந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத வரிசையில் வருவது. அதிலும், எஸ் பி பி பாடியிருப்பது சோக கீதம். எந்த மனநிலையில் இருந்தாலும், துயரமான சூழலுக்கான கீதங்கள் எனில் ஆழ்ந்து கேட்டு அந்தச் சூழலுக்குள் போய் நின்று லயித்துச் சொக்கி நிற்கும் எனக்கு உயிரான பாடல் இது.
எம் எஸ் வி ரசிகர்கள் வலைத்தளம் ஒன்றில், ஹிந்துஸ்தானி பாணியில் சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல் என்று கொண்டாடப்படும் இந்தப் பாடலின் தொடக்கத்தில், பேரமைதியின் இடையே எங்கோ தொலைதூரத்தில் தொடங்கி மெல்ல மெல்ல அருகே நெருங்கும் ஒலியில் எஸ் பி பி அவர்களது அசத்தல் ஆலாபனையுடன் தொடங்குகிறது பாடல்.
தனிமைத் துயரில் ஒரு பெருவெளியில் யார் அழைத்தாலும் திரும்பக் கூடாது என்று நடப்பவரை இதமாகப் போய்த் தீண்டும் காற்றின் குரலாக, உன் சோகம் என்னதும் தான் என்று தோள் தடவி முகத்தைத் திருப்பித் தலையைச் சாய்த்துக் கேவல் தணிக்கும் படிக்கு இழைக்கிறார் பாலு, அந்த ஆலாபனையை! அதனூடே அழுத்தமாக வயலின் இழைப்பு!
ஆலாபனை தொடர்ந்து, ஓடோடி வந்து மடியில் விழுந்து சிணுங்கும் குழந்தையைப் போல் பின்தொடர்கிறது சிதார் வாசிப்பு. அப்புறம் தொடங்குகிறார் பாலு,பல்லவியை, ‘அதன் பேர் பாசம் அன்றோ‘ எனுமிடத்தில் குழையும் சுவை தனித்துவமானது. பல்லவியை ஏந்திப் பிடிக்கும் தாளலயத்தின் சுகம், தபலா எனும் அற்புதக் கருவியின் வரம். பாசம் குறித்த ஒரு நீண்ட சொற்பொழிவைக் குறுகத் தறித்த குறளாக அவர் குரல்.
சரணங்களுக்கு இடையே சிதாரும், தபலாவும் உருக்கத்தின் ஆணிவேர் தேடிச் சங்கிலித்தொடர் போல் பின்னிப் பிணைந்து நடத்தும் தேடல் அத்தனை இதமான இசை அனுபவமாக வாய்க்கிறது.
முதல் சரணத்தை, ‘பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்துப் பார்ப்பதற்கு‘ என்ற வரியை இதயத்தைப் பிழிந்து இசைக்கிறார் பாலு. அதில் ‘பார்ப்பதற்கு‘ என்ற இடத்திற்கான தாள கதி, ஒற்றைக் காலில் படியிலேறி இறங்குவதுபோல் இருக்கும் தபலா வாசிப்பு. மீண்டும் இரண்டாம் முறை அந்த வரியைப் பாடுகையில், இடத்தினிலே என்ற சொல்லை அத்தனை சங்கதிகள் போட்டு உருக்கம் கூட்டுவார் அவர். அதே போல், அண்ணன் இன்றி யாரும் உண்டோ என்ற வரியை இரண்டாம் முறை பாடுகையில் அந்த ‘யாரும்‘ சொல் அத்தனை தவம் செய்திருக்கும் பாலுவின் அலங்கரிப்புக்கு! மீண்டும், ‘அதன் பேர் பாசமன்றோ‘ என்ற உயிர்ப்பு !
இரண்டாம் சரணத்தைக் கொண்டுவந்து இணைக்கிறது மெல்லிய குழலிசை கீற்று. ‘தொட்டில் இட்ட தாயுமில்லை தோளில் இட்ட தந்தையில்லை‘ என்ற வரிகளைத் தாலாட்டிச் சீராட்டிப் பாடி இருப்பார் எஸ் பி பி. அதுவும், தாயுமில்லை என்ற சொல்லை இரண்டாம் வருகையில் மயிலிறகால் வருடிக் கொடுத்துப் பாடுவார். ‘கண் திறந்த நேரமுதல்‘ என்ற விழிப்பின் சிலிர்ப்பும் அப்படி தெறிக்கும். அந்த உணர்வுகளை தபலா உருட்டி உருட்டிப் பரிமாறும்.
‘கண்ணன் மொழி கீதை என்று‘ எனும் மூன்றாம் சரணத்திலும் தபலா அபாரமான கதியில் ஒலித்துக் கொண்டிருக்கும். பாடல் முழுவதும், தீபமன்றோ என்ற சொல்லை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் துயரப்பெருக்கின் வலியாகக் கடத்தி இருப்பார் பாலு. பிரசாத் அவர்களது வாசிப்பு பரிதவிப்பின் பேச்சு மொழிபோலவும், வேதனையை ஆற்றுப்படுத்தும் மாயா ஜாலமாகவும் ஒரே நேரத்தில் ஒலிவடிவெடுக்கிறது.
பிரசாத் உள்ளத்தில் இன்னும் மறவாத மற்றொரு பாடலாக, நான் அவனில்லை திரைப்படத்தின் புகழ் பெற்ற, ராதா காதல் வராதா பாடல். அதுவும் கண்ணதாசன் அவர்களது பாடல் தான். 1970களின் குரலில் பாலுவை இப்போது கேட்டாலும், அவரது மகத்தான சாதனையின் எளிய காரணம், அவரது இசை ஞானம், அர்ப்பணிப்பு, அபார உழைப்பு என்பதாக விரிகிறது. எம் எஸ் வி அவர்களது அருமையான இசைக்கோவை அந்தப் பாடல். தபலாவின் மந்திர விசையை உருகியுருகிக் கேட்டுக் கொண்டே இருக்கவைக்கும் பாடல்.
பாடல் முழுக்க மெல்லிசை மன்னர் கோரஸ் குரல்கள், ஏற்ற இசைக்கருவிகள், தாள லயம் அத்தனை அம்சமாகப் படைத்திருப்பார்.பாடலின் திறப்பே, ‘ ஹரே நந்த ஹரே நந்த ஹரே நந்த ஹரே ஹரே‘ என்ற கோரஸ் வளர்ந்து, டிரம்ஸ் ஆர்கெஸ்ட்ரா தாள லயத்தில் ‘கோகுல பாலா கோமகள் ராதா‘ என்று பெருகியோடி நிற்குமிடத்தில், ‘ஹே ராதா….’ என்று எடுக்கும் எஸ்பிபி அவர்களது ஆலாபனை விவரிப்பும் இந்துஸ்தானி பாணி தான் என்று தோன்றுகிறது. (இதெல்லாம் கற்றுக் கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்).
‘ராதா காதல் வராதா‘ என்ற சொற்களில் போதையேற்றிக் கொண்டே இருப்பார் பாடல் முழுவதும் பாலு. அதுவும், காதல் என்பதில் முதல் எழுத்தான ‘கா‘ அத்தனை கிறக்கத்தில் வந்து விழும். ‘நவ நீதன் கீதம் போதை தராதா‘ என்பது ஒரு ஜோர் எனில், ‘ராஜ லீலை தொடராதா‘ என்பது இன்னொரு வகை ஜோர்.
சரணத்தை நோக்கிய கொண்டாட்டத்திலும் கோரஸ் குரல்கள், டிரம்ஸ் தாள லயம். அதைப் பற்றி வாங்கிக் கொள்ளும் சிதார் இசையும், அதன் உயிர்த் தோழன் தபலா, தோழி ஷெனாய், புல்லாங்குழலும் வளர்த்தெடுக்கும் இசையைப் பின்னர் வயலின் மென்மையாகக் கைமாற்றிக் கொண்டு தருகிறது எஸ் பி பி யிடம்.
அவர் தொடங்குகிறார், ‘செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளைத் தாலாட்டும் புல்லாங்குழல்‘ என்று. அங்கே அதை ஆமோதிக்கும் குழலிசை கேட்போரை எல்லாம் காதலர்களாக மாற்றிவிடுகிறது. ‘செந்தூர நதியோடும் செவ்வாயின் இதழோரம் கண்ணா உன் காதல் கடல்‘ என்று நிறுத்தும் இடத்தில், தபலா நடத்தும் சொற்பொழிவு எங்கோ கொண்டு சென்றுவிடும். அடுத்துவரும் சிருங்கார வரிகளை, பாலுவின் தாபமிக்க குரல்களில் கேட்டுத் திணறத்தான் வேண்டும், விவரித்து என்ன ஆகப்போகிறது! ‘சுகம் என்ன சொல்லடி ராதா, ராதா‘ என்ற இடத்தை அசாத்திய கற்பனை உள்ள பாடகரால் தான் வண்ணம் தோய்த்துப் பாட முடியும்.
மீண்டும் கோரஸ் நுழைந்து விடுகின்றனர். கோலாட்டக் கும்மியாட்ட உணர்வுகளின் வேக வேக தாளகதியில் இசைக்கருவிகள் கொஞ்சிக்கொண்டே செல்ல, ஷெனாய் வாத்தியத்தின் மோகப் பிடிமானம் பிடித்து, ‘மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு கொண்டாடும் இசை என்னடி‘ என்ற இடத்திலும் பாலு அத்தனை காதல் போதையை ஊட்டுகிறார். ‘மார்கழி ஓடை போலொரு வாடை‘ தொடர்ந்து ‘என்னிடம் ஏனடி ராதா‘ என்ற இடத்தில் தனது முத்திரை சிரிப்பும் தாளக்கட்டுக்குள் தீப்பொறி போல் பற்ற வைக்கிறார் பாலு. அத்தனை ஒயிலாகவும், மயக்கமாகவும் ஒலிக்கும் ஜாலக்குரல் பாடல் முழுவதும். தாள வாத்திய கொண்டாட்டத்திற்கு, பிரசாத் அவர்களது கைவிரல்களை எத்தனை கொண்டாடினாலும் தகும்.
இப்போது வருவோம் ரவீந்திர சங்கீத் இசைக்கு! 1905ல் பிறந்த அற்புத இசைக் கலைஞர் பங்கஜ் மல்லிக் அவர்களைப் பற்றிய குறுங்கட்டுரை இரண்டு வாரங்களுக்குமுன் தி இந்து ஆங்கில நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பில் வந்திருந்தது. திரை இசையில் எத்தனையோ முதல் விஷயங்கள் சாதித்த அந்த அபார மனிதரைப் பற்றிய தகவல்களில் முக்கியமானது தபலா பற்றியது!
ரவீந்திர சங்கீதத்திற்கு தபலா தாளக்கட்டு சேர்த்து இசைக்கும் முயற்சியை முதன்முதல் செய்தவர் பங்கஜ் தான்! இந்துஸ்தானி இசையின் த்ருபத், கயல், தப்பா வடிவங்களில் தேர்ச்சியான பயிற்சி பெற்றுக் கொண்டபின், கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களது நெருங்கிய உறவினரான தினேந்திரநாத் தாகூர் அவர்களோடு தற்செயலாக ஏற்பட்ட இசையார்ந்த நட்பை அடுத்து, ரவீந்திர சங்கீதத்தில் ஆர்வம் கொள்கிறார் அதைத் தனது உயிர் மூச்சாகக் கொள்கிறார். அவர் அதில் செலுத்திய கற்பனைகளின் இசை விளைவுகளை அறிந்த தேசிய கவி தாகூர் அவரை அழைத்துக் கொண்டாடுகிறார். பதின்ம வயதுகளில் தான் இருந்திருக்க வேண்டும் பங்கஜ் அப்போது, எத்தனை அரிய பேறு ! அப்போதுதான், தபலாவை பக்கவாத்தியமாகக் கொண்டு ரவீந்திர சங்கீதம் இசைக்கும் பரிசோதனையில் வெற்றி பெறுகிறார் பங்கஜ் மல்லிக்.
தீபா கணேஷ் அவர்களது ஆய்வுக்கட்டுரை, இரத்தினச் சுருக்கமாகப் பல வரலாறுகளை உள்ளடக்கி இருக்கிறது. வானொலி சாதனம் இந்தியா வந்தடைந்தபோது, அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்ட பங்கஜ் மல்லிக், 45 ஆண்டுகள் வான்வழி இசைப் பயிற்சி வழங்கி இருக்கிறாராம். 1931ல் கொல்கத்தா வானொலி நிலையத்திற்குத் தற்செயலாகச் சென்ற இன்னொரு மகத்தான கலைஞரைக் குரல் பரிசோதனை செய்யும் பொறுப்பு அவருக்கு வாய்த்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட பிணைப்பில், இந்த இணையர் பின்னர், மறக்க முடியாத பாடல்களை வழங்கினர் என்கிறார் தீபா. அந்த மனிதர் கே எல் சைகல்.
அதுமட்டுமல்ல, பங்கஜ் மல்லிக், வேறொரு முக்கிய மாற்றத்தைத் திரை இசையில் கொண்டுவரக் காரணமாக இருந்தவர். 1935ல் இரண்டு திரைப்படங்களுக்கு இசை அமைக்கையில், ஒத்திகைகள் செய்து பார்ப்பதிலேயே களைத்துப்போய் விட்ட நடிகர்கள் காமிரா முன் ஆடிப் பாடுகையில் சோர்ந்து போய் சரியாக வராமல் போயிருக்கிறது. இசையமைப்பதில் ஈடுபட்டிருந்த பங்கஜ் மல்லிக், ஆர் சி போரல் எனும் புகழ் பெற்ற இசையமைப்பாளர் மற்றும் ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர் டெம்மிங் மூவரும் சேர்ந்து ஒரு புதிய ஆலோசனை முன்வைத்தனர். அதன்படி, பாடல்களை முன் கூட்டியே இசையமைத்து, அதை ஷூட்டிங் நேரத்தில் ஓடவிட்டு நடிகர்களை இயக்கிப் படங்கள் எடுப்பது என்பது. முதல் பாடகர் – நடிகராக பங்கஜ் நடித்துத் தானே இசையும் அமைத்த படம் முக்தி. வெளியான ஆண்டு 1937. தாகூரின் கவிதை இசை வடிவில் முதலில் பயன்படுத்தப்பட்ட படமாகவும் அது அமைந்ததாம்.
“….ஏ ஆர் ரஹ்மான் அவர்களது ‘சைய்யச் சைய்ய‘ கேட்டிருப்பீர்கள், என் தாத்தா பங்கஜ் மல்லிக், அந்தக் காலத்திலேயே டாக்டர் படத்திற்காக ரயிலோடும் ஓசையை இசையில் கொணர்ந்தவர்” என்று பங்கஜ் மல்லிக் அவர்களது 115வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசி இருந்தாராம் பேரன் ராஜீப் குப்தா.
திரையிசையில் ஹார்மோனியத்தைக் கடந்து பியானோ நுழைந்தது முதல் மேற்கத்திய கருவிகளின் இசை கலந்ததில் பங்கஜ் அவர்களது பங்களிப்பு மகத்தானது என்று சொல்லப்படுகிறது.
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி
என்றார் மகாகவி. தமது நேர்காணல் ஒன்றில், தபலா கலைஞர் பிரசாத் சொல்கிறார், மனிதர்கள் வாசிக்கும் கருவிகளின் இசை தான் கொண்டாட்டமானது, கீ போர்டில் எல்லாக் கருவிகளையும் ஒலிக்கவைப்பது அத்தனை சுவாரசியம் அற்றது! வல்லினம், மெல்லினம் எல்லாம் தனித்துவமாக ஒலிக்குமா எந்திரத்தில் என்று கேட்கிறார் பிரசாத்!
காசு, பிழைப்பு, பெயர், புகழ், பாராட்டு இவற்றுக்கு அப்பாற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க மனிதர்கள் இசையே வாழ்க்கையாக வாழ்வதன் இசை தான் நம்மை வாழ்விக்கிறது. தாள லயம் பிசகாத வாழ்க்கைக்கு இசை பின்னணியாக அமைகிறது. அப்படியான வாழ்க்கை முன்னணியில் நிற்க வேண்டியது.
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
முந்தைய கட்டுரைகள் படிக்க:
இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்