Posted inPoetry
வேர் மனிதர்கள் கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
தேனுறுஞ்சப்படும்போது மலர்கள்
மௌனிக்குமே தவிர
மரணமடையா;
தேன்கூடு ஆபத்துறும்போது
தேனீக்கள் மரணமெனினும்
மௌனமாகா;
மௌனத்தால் நேராத மரணம்(1),
மரணத்தால் நேராத மௌனம்(2),
இந்த இரண்டு வகையுமின்றி
சமுதாயத்தின் மௌனம் சிலரை
மரணிக்கவே வைத்துவிடுகின்றது.
கிளைமுறியும்போது கூடு
இழக்கும் பறவைகளை மரம்
ஒதுக்குவதில்லை;
அடியோடுமுறியும்போது வேர்
இழக்கும் மரத்தில் பறவைகள்
தங்குவதில்லை;
மரத்தால் ஒதுக்கப்படாத பறவைகள்(1),
பறவைகளால் தங்கமுடியாத மரம்(2),
இந்த இரண்டு வகையுமின்றி
சமுதாயத்தின் உயிர்க்கூடுகள்
சிலரின் ஈரவேர்களில்தானே
இருக்கின்றன.
யார் அந்தச் சிலர்?
வேறு மனிதர்களா?
இல்லை,
வேர்மனிதர்களான
விவசாயத் தொழிலாளிகள்தான்