தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் “அசுரன்” திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு. எப்பவும் போல் இயக்குநரின் அழைப்பின் பேரில் அலுவலகம் சென்றேன். கதையின் அவுட் லைன் சொல்லிவிட்டு பாடலின் சூழலைச் சொன்னார். சூழல் காதல் தான், ஆனால் காலம் 1980. களம் திருநெல்வேலி. அன்று அவர் என்னிடம் சொன்ன விசயம் ரகசியமானது. இன்று எல்லாம் உலகம் அறிந்தது. ஏனெனில் அப்போது படப்பிடிப்பு நடந்திடாத சூழல். ஒரு பாடலாசிரிருக்குச் சொல்லப்படும் கதையை அவர் படம் வெளியாகும் வரை யாரிடமும் சொல்லக்கூடாது. அதேபோல் கொடுக்கப்படும் மெட்டும் இசை வெளியேறும்வரை பாதுகாக்கப்பட வேண்டும்.
அசுரனில் எனக்குக் கொடுக்கப்பட்ட சூழலுக்கு நான் எழுதிய பாடல்,
ஆண்:
கத்தரிப் பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
ஒன்னோட நெனப்பு
சொட்டாங்கல்லு ஆடயில
பிடிக்குது கிறுக்கு
பெண்:
வரப்பு மீசக்காரா
வத்தாத ஆசக்காரா
ஒன்ன நா கட்டிக்கிறேன்
ஊரு முன்னால – அட
வெக்கப்பட வேணா என்ன
பாரு கண்ணால
ஆண்:
மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே
பெண்:
காத்தாடி போல நானும் – ஒன்ன
நிக்காம சுத்துறேனே
ஆண்:
கழுத போலத்தான்
அழக சொமக்காத
எனக்குத் தாயேண்டி
கொஞ்ச வேணும் நானும்
பெண்:
அருவா போல நீ
மொறப்பா நடக்குறிய
திருடா மொரடா
இருப்பேன் உன்னோடதான்
சரணம் – 2
ஆண்:
கரகாட்டம் ஆடுது நெஞ்சு – ஒன்ன
கண்டாலே தெருவுல நின்னு
பெண்:
நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம்நீ
ஆண்:
ஆலம் விழுதாட்டம்
அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான்
தோது செஞ்சு தாடி
ஆண்:
இலவம் பஞ்சுல நீ
ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும்
அணைச்சா நிக்காதுடா
இப்படியான ஒரு பாடலை எழுதுவதற்கு திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களை வாசித்துவிட்டு அதே வாசத்துடன் எழுத நினைத்து சென்னைக்குள் நூல் தேடி அலைந்தேன். கடைசியாக திருநெல்வேலி நாட்டுப்புறவியல் ஆய்வில் பேர்போன பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் வீட்டிற்கே சென்று சில நூல்களை அவரின் கைகளாலே வாங்கிக் கொண்டு வந்தேன்.
இந்தப் பாடலின் இதே மெட்டுக்கு நான் எழுதியிருந்த வேறு சில பல்லவிகளையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் “கத்தரிப் பூவழகி” மெட்டில் பின் வரும் பல்லவிகளையும் பாடிப் பார்க்கலாம்.
பல்லவி: (1)
ஆண்:
ஒருதரம் தொட்டுக்கிறேன்
ஒன்னநா கட்டிக்கிறேன்
செல்லமே ஒன்னவிட
ஒண்ணும் நல்லாலே – நம்ம
ரெண்டுபேரும் ஓடிடுவோம்
போடு தில்லாலே
பெண்:
தொட்டுக்க வேணாமுங்க
தொணைக்கும் வேணாமுங்க
மொத்தமா அள்ளிக்கங்க
ஒன்னோட வாறேன் – என்ன
மொழம் போட்டு வச்சுக்கோங்க
முன்னால போறேன்
பல்லவி: (2)
ஆண்:
கொட்டடி சத்தத்துக்கும்
கொல செய்யும் அழகுக்கும்
ஒடம்புல தழும்பாச்சு
ஒன்னப் பாத்தது – நெனச்சா
ஒருவருசம் பெய்யும் மழ
ஒண்ணா ஊத்துது
பெண்:
மல்லுவேட்டி கட்டிவந்தா
மந்தையில திருவிழாதான்
மருகிறேன் ஒண்ணாச் சேர
செம்மறி ஆடா – மனுசா
தாலிஒண்ணு வாங்கிக்கிட்டு
சீக்கிரம் வாடா
கத்தரிப் பூவழகி பாடல் மாபெறும் வெற்றியைப் பெற்றுத்தந்தது. இதை நண்பர் வேல்முருகனும் தங்கை ராஜலட்சுமியும் பாடியது கூடுதல் மண்வாசனையை கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியதற்காக நானும் நண்பர் யுகபாரதியும் பாண்டிச்சேரி தீண்டாமை முன்னணியினரால் பாராட்டப்பட்டோம்.
“கத்தரிப் பூவழகி கரையா பொட்டழகி” இதன் இரண்டாவது வரியின் முதல் வார்த்தை “கரையா” , இது பாடகர் வேல்முருகனின் உச்சரிப்புப் பிழையின் காரணமாக மற்றவர்களுக்கு “கரையான்” என்று புரியப்பட்டது, ஆனால் இதையும் பாராட்டியவர்கள் ஏராளம். இதே போல் தான் “ஆடுகளம்” படத்தில் ஒத்துச் சொல்லால பாடலை ஒத்தக் கண்ணால என்று சொல்லி மேடையில் சிலர் அறிமுகம் செய்து வைப்பார்கள் என்னை. இப்படியான காரியங்கள் வெளியுலகில் எங்காவது நடந்தவண்ணம் இருந்து கொண்டேயிருக்கும்.
இதாவது பரவாயில்லை சில மியூசிக் சேனல்கள் என் பாடலுக்கு மற்றவர் பெயரையும் மற்றவர் பாடலுக்கு என் பெயரையும் போட்டுவிட்டு என்னையும் மக்களையும் குழப்புவது வாடிக்கையாகிவிட்டது. இன்னும் கொடுமை என்னவென்றால் எனது திரைப்படப் பாடல்களை வாங்கும் நிறுவனங்கள் என் பெயரை ஏழு விதமான ஸ்பெல்லிங் பயன்படுத்தி எனது ராயல்டிக்கு ஆப்பு வைக்கிறார்கள். ஆதார் கார்டுக்காக எடுக்கிற ஃபோட்டோவும் ஸ்மார்ட் கார்டில் அச்சடித்துள்ள ஸ்பெல்லிங்கும் போலத்தான் இங்கே பல மியூசிக் கம்ப்பெனிகள் டெக்னீஷியன்கள் பெயரை இஷ்டத்திற்குப் போட்டு விடுகிறார்கள்.
அசுரனில் “எள்ளு வய பூக்கலையே” பாடல் நண்பர் யுகபாரதி எழுதியிருப்பார். உண்மையில் இந்தப் பாடல் என் ஜார்னர். எனது தனி இசைப் பாடல்கள் பெரும்பாலும் இப்படி மக்களின் வாழ்வியல் பிரச்சனை குறித்தது தான். இயக்குநர் வெற்றிமாறனைப் பொருத்தவரை நான் ஒரு காதல் துள்ளல் பாட்டுக்காரன். அவரின் படங்களில் சோகப் பாடல்களும் எழுத வேண்டும் என்பது என் அவா.
இயக்குநர் சீனு ராமசாமி அண்ணன், அவரது இரண்டாவது படமான “தென்மேற்கு பருவக்காற்று” படத்திற்கு வசனம் எழுத என்னை அழைத்து அவரது திரைக்கதையைப் படிக்கக் கொடுத்தார். அவரின் அலுவலகத்திலேயே உட்கார்ந்து வாசித்தேன். அவ்வளவு பிடித்திருந்தது. அவரது கதையில் என் வம்சாவழியின் வாழ்விருந்தது. அந்த கதை நடக்கும் காலம் என் பால்யம் பார்தத்து. ரசித்து ரசித்து வசனம் எழுத நினைத்திருந்த அன்றைய நாளின் இரவில் தான் நான் என் முதல் படத்தை இயக்க ஒப்பந்தமானேன். நான் இயக்குநராகப் பரிணமித்தேன்.
ஆனால் பிற்காலத்தில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற ஒரு படத்தின் வசனகர்த்தா பணியைத் தவறவிட்டேன். ஒரு வேளை அந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதியிருந்தால் இன்னொரு தேசிய விருது கிடைக்கத் தான் செய்திருக்கும். அப்படியெனில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்திற்கு மொத்தம் நான்காகியிருக்கும், அதில் ஏகாதசிக்கு ஒன்று என்று தானே கணக்குப் பார்க்குறீர்கள், இல்லை ஏகாதசிக்கு இரண்டு கிடைத்திருக்கும். இது தனிக்கதை.
அதே படத்தில் வசனம் மட்டும் இல்லை எனது “ஆத்தா ஓஞ்சேலை” பாடலை பயன்படுத்துவதாகவும் இருந்தது. அப்படி பயன்படுத்தப் பட்டிருந்தால் நிச்சயமாக இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற வைரமுத்து அவர்களின் “கள்ளிக்காட்டில் பொறந்த தாயே” வுக்குப் பதிலாக “ஆத்தா ஓஞ்சேலை” பாடல் எனக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்திருக்கும். இதுவும் நடந்திருந்தால் நான்கில் எனக்கு இரண்டு என்கிற கணக்கு சரிதானே. விருதுக்கெல்லாம் எனக்குக் குறையில்லை, ஏனெனில் ஆத்தா ஓஞ்சேலை ஒவ்வொரு நாளும் யாரோ ஒரு தாயால் ஒரு மகனால் நிசமான அன்போடு நான் பாராட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.