Varugirargal Book By Karan Karki Bookreview By Vetriyarasan நூல் அறிமுகம்: கரன் கார்க்கியின் வருகிறார்கள் - வெற்றியரசன் 

நூல் அறிமுகம்: கரன் கார்க்கியின் வருகிறார்கள் – வெற்றியரசன் 

வணக்கம் ஒரு நாவலுக்கு கருத்துரை பின்னூட்டம் வழங்குவது இது இரண்டாவது முறை. மிகுந்த மகிழ்ச்சியுடன் சற்று தயக்கமும் இருக்கிறது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் புத்தக வாசிப்பை தொடங்கியபின் சென்னையின் வரலாற்றை யாராவது எழுதி இருக்கிறார்களா குறிப்பாக வடசென்னை பற்றி எழுதி இருக்கிறார்களா என்று தேடும் பொழுது சில மாதங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை கண்டடைந்தேன். அவர் வலையொளி ஊடகங்களில் கொடுத்த செவ்விகளை அதிகமாக கேட்க தொடங்கினேன். அப்போதுதான் தெரிந்தது இவர் தான் நான் தேடிய எழுத்தாளர் அதுவும் நம்ம வியாசர்பாடி கன்னிகாபுரம் என்று கேள்விப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் அவர் எழுதிய புத்தகங்களை தேடினேன். தற்பொழுது இரு நாவல்களை வாங்கிவிட்டேன். அவர்தான் கருப்பர் நகரம் மற்றும் வருகிறார்கள் என்ற புதினங்களை எழுதிய எழுத்தாளர் கரன் கார்க்கி.
வருகிறார்கள் என்னைப்போல் சென்னையில் வாழும் எளிய மக்களுக்கு இருக்கும் சிக்கல்களை அடுக்கடுக்காய் பட்டியலிட்டு சொல்லியிருக்கிறார் சிறப்பாக கதைமாந்தர்கள் மூலமாக. 95க்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள் வருகிறார்கள் அதில் மகிழன், முகுந்தன், பழனி, இளவேனில், சிவா , சித்தார்த், மல்லிகா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
சென்னையில் குடி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை ஒவ்வொருவர் வீட்டிலும் எப்படி வந்தது என்று இன்றுவரை எவருக்கும் ஏன் என்று தெரியாது. Can தண்ணீர் வாங்குவதையே கௌரவமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அவலத்தை துடைத்தெறிய என்ன செய்ய வேண்டும் என்பதை சிறப்பாக கதையின் ஊடாகவே சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் நுகர்வுக் கலாச்சாரத்தை விரும்புவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக மகிழன் சித்தார்த் இளவேனிலையும், நுகர்வு கலாச்சாரத்தால் வாழ்க்கையையே தடம் மாறி இழக்கும் வித்யா க்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார். புத்தக வாசிப்பால் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை தக்காளி விற்கும் பழனி மூலமாகவும் அதே பழனியிடம் தக்காளியை வைத்து எப்படி ஆதிக்க சக்திகள் நம்மை சுரண்டுகிறார்கள் என்பதை சொல்லும் நிகழ்வு அருமை.
இளைஞர்கள் புத்தகங்கள் வாசிக்கிறார்கள் அரசியல் பேசுகிறார்கள் என்பதை பல பக்கங்களில் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். நாவலை வாசிக்கும்பொழுது அந்தப் பக்கங்கள் ஒவ்வொருவருக்கும் தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இளைய தலைமுறையினர் புத்தகங்கள் வாசிப்பார்கள் அரசியல் பேசுவார்கள்.
மேலும் எந்தெந்த புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்பதை சொல்லி இருப்பது என்னைப்போல் உள்ள வாசகர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது. மதுப்பழக்கத்தால் இறந்த கணவரின் இறப்பிற்குப்பின் இளம் வயது மல்லிகாவுக்கு ஏற்படும் சிக்கல்கள். இயல்பாகவே இயற்கையாகவே மகிழனுக்கும் மல்லிகாவுக்கும் தோன்றிய ஒரு புரிதல் பிணைப்பு எந்த ஒரு இடத்திலும் எல்லைமீறிய சொற்கள் இல்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார்.
இளம் வயதில் பூவையும் பொட்டையும் இழந்தவர்கள் எத்தனை கோயிலுக்குச் சென்றாலும் பூவும் பொட்டும் கிடைப்பதில்லை. பூவையும் பொட்டையும் கொடுத்து மல்லிகாவிற்கு மறுவாழ்வு கொடுத்த மகிழன் உண்மையில் கடவுள் தான்.அம்மா வைத்த விஷாலினி என்ற பெயரை மாற்றி இளவேனில் என்று மாற்றிய இளம் பெண்ணின் மூலமாக இளைஞர்கள் முற்றும் முழுதுமாக சமஸ்கிருதத்தை விட்டொழித்து தூய தமிழில் பெயர் வைக்க விரும்புகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
சுரண்டல் காரர்களால் ஆதிக்க சக்தியினால் ஏற்படும் பல சிக்கல்களை அதிலும் கல்விமுறை பொருளாதாரம் சாதியவன்கொடுமை என ஒவ்வொன்றைப் பற்றியும் விவரித்து…. சாதிய வன்கொடுமையால் மார்க்கம் மாறினாலும் அதிலும் நீங்கள் புதிதாய் மாறியவர்கள் நீங்கள் பரம்பரையாய் மார்க்கத்தவர்கள் அல்ல என்று சாய்ரா பானுவுக்கு 35 வயதைத் தாண்டியும் திருமணம் தள்ளிப் போவதையும், கலப்புத் திருமணம் செய்ய முன்வந்த சித்தார்த்தின் அண்ணனையும் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலி கொடுப்பதும், அதற்குப் பின்வரும் முகுந்தன் சாய்ராபானு விற்காக நான் மதம் மாறவும் தயார் என வரும் பக்கங்கள் துயரம் தோய்ந்து இருந்தாலும். இந்த காலத்து இளைய தலைமுறை எல்லாவிதமான சாதிமத அடக்குமுறைகளையும் வெட்டி வீச தயாராக இருக்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் உணர்த்துகிறது – உணர்த்தும்.
இளவேனில் உடைய அம்மா ஸ்வர்ணாம்மாள் வாழ்க்கை வரலாறு முன்னோர்கள் வாழ்ந்த முறை அதில் ஒன்று விலை மதிக்க முடியாத பல்லாக்கு. பல்லாக்கு -க்கு பின்னிருக்கும் அரசியலை மிக நுண்ணியமாக சொல்லி விட்டு நகர்கிறார் எழுத்தாளர். இரண்டு கிளிகளின் மூலமாக காதலையும், மற்ற காதல் இணையர்களிடம் இருக்கும் உரையாடல்கள் ஏற்படும் தழுவல்கள் முணுமுணுப்புகள் எந்தவிதமான காமச் சொற்கள் அத்துமீறல் இன்றி கவிதை நயத்துடன் தூய தமிழில் சொல்லியிருப்பது அருமை.
எடுத்துக்காட்டாக அறை குளிர்ச்சியையும் மீறி உடல்கள் சூடேறி அசைந்தன. அவர்களது முணங்கல்களை காகிதம் ஒட்டப்பட்ட சுவர் பிடித்து வைத்துக் கொண்டன. ஒவ்வொரு நரம்பும் விம்மி புடைக்க இன்பத்தால் விளைந்த கண்ணீரும் காதலுமாய் நடந்தேறியது இயற்கையான ஒன்று. இந்த நிகழ்வை மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதி இருப்பார்கள் என்பது தெரியவில்லை. புதினம் முழுவதும் தூய தமிழ்ச் சொற்கள், வழக்கிலுள்ள சொற்களே மிக எளிமையாக பரவி விரிகிறது . பிறமொழிச் சொற்களை மிக எளிதாக பொறுக்கி எடுத்து விடலாம்.
மகிழுந்து
சுமையுந்து
கைப்பேசி
மருத்துவ தாதி …. அடடா சிறப்பு சிறப்பு… முற்போக்குத் தன்மை கொண்ட காதல் பிற்போக்குத்தனம் கொண்ட சில மனிதர்கள் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் இளைஞர்கள் புத்தக வாசிப்பால் அரசியல் வாழ்வியலை கற்றுக் கொள்ளும் எளிய மக்கள் …என தன் எழுத்துக்களால் புரட்சி செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர் திரு.கரன் கார்க்கி அவர்களை வணங்குகிறேன். வாழ்த்துக்கள்

நூல்: வருகிறார்கள்
ஆசிரியர்: கரன் கார்க்கி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 370
புத்தகத்தை வாங்க கமெண்டில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்: thamizhbooks.com