தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
அண்ணன் ஜீவன் அவர்கள் இயக்கி, இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த “மயிலு” படத்தின் பாடலொன்றில் நான் எழுதி வைக்கமுடியாமல் போன நான்கு வரிகள் என் வாழ்வில் மறக்க முடியாதவை ஆகும். நானும் அண்ணன் சீனுராமசாமி அவர்களும் இலக்கியத்தின் பாலும் கொண்ட கொள்கையின் பாலும் மிக நெருக்கம் கொண்டவர்கள். என் பாடல்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவர் “மக்கள் கவிஞன்” என்றே சொல்லுவார். அவரிடம் ஒரு உதவி கேட்டு முடிக்கும் நேரத்திற்குள் அந்த உதவியைச் செய்து முடிக்கும் கொடையாளர். அதன் மூலம் துளியும் விளம்பரம் தேடிக் கொள்ளாதவர்.
ஒரு மாலை நேர உரையாடலின் போது அவரிடம் அந்த நான்கு வரிகளைச் சொன்னேன். அமைதியா இருந்தார். மீண்டும் ஒரு முறை வரிகளைச் சொல்லச் சொன்னார் சொன்னேன். அடுத்தும் அமைதியாகவே இருந்தவர் தனது கைப்பேசியை எடுத்து ஒரு நபரை அழைத்து நான் சொல்லிய வரிகளைச் சொன்னார். கேட்ட நொடியில் ஃபோனில் இருந்த நபர் சிரித்தார். பின் இவரும் சிரித்தார். ஃபோனில் இருந்த நபர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள். அந்த நான்கு வரிகள்:
“எலும்பு கடிக்காம
எரப்பையி நெறையாது
சாம்பார் சோறு எங்க
சாதியில கெடையாது”
இந்த நிகழ்வு நடந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “படத்தின் பெயர் “ஆடுகளம்”. ஒரு காதல் பாடல் எழுதவேண்டும். படத்தின் கதை மதுரை பின்புலத்தில் நகர்கிறது” எனத் தொடர்ந்தவர் பாடலுக்கான சூழலை மிகச் சுருக்கமாக தெளிவாக விளக்கினார். நான் பழகிய அளவில் நேரத்தை விரையம் செய்யாமல் மிகச் சரியாகப் பயன்படுத்தும் திரை ஆளுமைகளில் இவரும் ஒருவர்.
வாங்கி வந்த மெட்டு கேசட்டை டேப் ரெக்கார்டரில் போட்டு ஒன்றுக்கு பத்துமுறை கேட்டேன். ஜீ.வி. பிரகாஷ்குமாரின் இசை என் இதயத்தில் சிறகைக்கட்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. ஒரு சாமானிய இளைஞனின் காதலுக்குள் நுழைந்து மயங்கினேன். பல்லவியும் சரணமும் மூடு புற்று ஈசல்களாய் வந்து விழுந்தன. அள்ளிக் கொண்டு போனேன். அப்போது மலர்ந்த வெற்றிமாறன் அவர்கள் தன் முகத்தை இப்போதுவரை என்னிடம் சுருக்கிக் கொண்டதே இல்லை. அதிலும் “பாடலுக்கான வரிகளை கிடைத்த பின்புதான் அது தொடங்கும் புள்ளியை காட்சி படுத்தினேன்” என்று அவர் சொன்னபோது ஆனந்தக் கூத்தாடினேன்.
“ஒத்த சொல்லால ஏ உசுரெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்னத் தின்னாடா
பச்ச தண்ணி போல் – அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சே என்னக் கொன்னாடா
ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சு
ஆறொண்ணு ஓடுறதப் பாரு
அட பட்டாம் பூச்சி தான்
ஏ சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால ஏ மூச்செடுத்துப் போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேண்டா”
இந்தப் பாடல் யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் அண்ணன் கேட்டபோது நான் பாடகர் வேல்முருகனை சொன்னேன். அவரோடு இயக்குநரும் இசையமைப்பாளரும் என் யோசனையை ஏற்று பாடலை வேல்முருகனை வைத்துப் பதிவு செய்தனர். பாடல் வெளியாகி நாட்டில் சிறுசு பெருசெல்லாம் ஆடினர். “நான் அதற்கு முன்னரே திரைப்படப் பாடல்கள் சில பாடியிருந்த போதிலும்
எனக்கு பேரையும் காரையும் வாங்கித் தந்தது இந்த “ஒத்த சொல்லால” பாடல் தான் ” இப்போதும் என்பார் வேல்முருகன். எனக்கும் கூட இந்தப் பாடல்தான் என் பயணத்தின் வேறொரு திறப்பை ஏற்படுத்தியது. எளிய உவமைகளால் எளிய சொற்களால் காதலைச் சொன்ன விதத்தில் இன்றுவரை இந்த பாடல் மக்கள் மத்தியில் நிற்கிறது.
“பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன
ஒரு வாட்டி”
இந்தப் பாடலில் இந்த வரிகளும் இந்தப் படத்திற்குக் கிடைத்த 8 தேசிய விருதுகளில் ஒன்று நான் எழுதிய பாடலுக்கு நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டருக்கு கிடைத்ததும் அம்மைத் தழும்பாய் அழியாமல் இருக்கின்றன எனக்குள்.
எனது பெரும்பாலான தனி இசைப் பாடல்களுக்கான மெட்டு அண்ணன் கரிசல்குயில் கிருஷ்ணசாமியாலும் கரிசல் கருணாநிதி, கரிசல் திருவுடையான், சுகந்தி மற்றும் இசையமைப்பாளர்கள் செல்வநம்பி,. ஜெய கே. தாஸ் போன்றோர்களால் போடப்பட்டதுதான். எத்தனையோ மனித உறவுகளைப் பற்றி பாடல்கள் எழுதி கேட்போர் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறேன். ஆனால் “அப்பா” பற்றி எழுதாமலேயே இருந்தேன். காரணம் எனக்கு ஒரு வயதாக இருக்கும்போதே என் அப்பா என் அம்மாவைப் பிரிந்து இன்னொரு திருமணம் செய்து கொண்டார். என் அம்மா வாழ் நாளெல்லாம் இந்த மண்ணோடு மல்லுக்கட்டி அழுதுகிடந்ததற்கு என் அப்பாவே காரணம். அதனால் தான் நான் அப்பா என்கிற உறவின் மீது தீராத வெறுப்புக்கு ஆளாகியிருந்தேன். எனக்கு அப்பாவின் ஸ்பரிசம் தெரியாது.
பின்பொரு நாள் நான் அப்பாவான பின் அப்பா என்கிற பிரியத்தின் சாயலை என்னிலிருந்தும் உள்ளங்கை காய்க்க உழைக்கும் கூலி தகப்பன்களின் பாத வெடிப்புகளிலிருந்தும் அந்தப் பாடலை எழுதத் தொடங்கினேன். உலகத் தமிழ் நெஞ்சங்கள் கண்கலங்கக் கேட்கும் அப்பா பாடலை எழுதியவனுக்கு அப்பா பாசமே என்னவென்று தெரியாதாம் என்றால் யாராவது நம்புவார்களா… ஆனால் உண்மை அதுதானே.
எனது சிறந்த முதல் ஐந்து தனி இசைப் பாடல் பட்டியலில் “அப்பா கையப் புடிச்சு நடந்தா” பாடலும் இருக்கிறது. நண்பரும் மிகச் சிறந்த பாடகருமான கரிசல் கருணாநிதியும் நானும் கால் நூற்றாண்டு கால நண்பர்கள். கருமாத்தூர் “திசைகள்” கலைக்குழுவில் இருந்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திலும் இருவரும் இயக்கப் பணிகளை செய்து வருகிறோம். அவரது மனைவி அக்கா பிரேமா மற்றும் அவர்களது குழந்தைகள் ஹர்கிசன், இனியன் எனதருமை மாப்பிள்ளைகள் எனக்கு மிக நெருக்கம். மூத்தவர் 2009 ல் நான் இயக்கிய “எருக்கம் பூ” குறும்படத்திலும், இளையவர் எனது “அருவா” திரைப் படத்திலும் நடித்தனர். அவர் எண்ணற்ற என் பாடல்களுக்கு மெட்டமைப்பதை அருகிருந்து பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் உள்ள அவர் வீடு சென்று எழுதிக்கொண்டு வந்த பாடல்களை மெட்டமைக்குமாறு தொல்லையும் தந்ததுண்டு.
ஒரு நாள் காலை நண்பர் கருணாநிதி சென்னை வந்திருந்தபோது அவரும் நானும் எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தோம். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் என் கையில் ஒரு பாடல் இருப்பது போல் அன்றைக்கும் இருந்தது, அது தான் “அப்பா கையப் புடிச்சு நடந்தா” பாடல். கையில் வாங்கி வாசித்தவர் கண்களில் நீர் கட்டிப் போனார். காரணம் அன்று அவரது அப்பாவின் நினைவு நாள். அப்படியே அந்த தந்தையரின் பாதங்களுக்கு என் பாடலை சமர்ப்பணம் செய்தேன்.
“அப்பா கையை புடிச்சி நடந்தா – தெரு அழகாக மாறும்
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது மீசமுடி கீறும்
பாக்கதான் ஆளு கொஞ்சம் அழுக்காக இருப்பாரு
பிச்சிப்பூவ போல தான் எங்கப்பா சிரிப்பாரு”
இந்தப் பாடலுக்கு கரிசல் கருணாநிதி மெட்டமைத்து ஊரெல்லாம் பாடினார். இதே பாடலுக்கு வேறு விதமாக மெட்டமைத்து மேடைகளில் பாடிக் கொண்டிருந்தார் மறைந்த தோழர் திருவுடையான். இந்தப் பாடலை ஒருமுறை விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்கை ராஜலட்சுமி செந்தில்கணேஷ்
பாடினார் பாருங்கள்., நடுவர்கள் அழுதார்கள். பார்வையாளர்கள் அழுதார்கள் நடுவில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களும் அழுதார்கள். அரங்கம் கண்ணீர் குளமானது.
யூ ட்யூபில் அப்பா பாடலைக் கேட்டுவிட்டு ஒருபெண், எனது இன்பாக்ஸில் தன் கண்ணீரை வார்த்தைகளாக மொழிமாற்றம் செய்திருந்தார். நன்றியையும் ஆறுதலையும் கூறினேன். அவர் பெயர் விஜயா. அவரது அப்பா அவருக்கு உயிரெனவும் அவர் தற்போது உயிருடன் இல்லை எனவும் கூறி, இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அப்பா ஞாபகம் வருவதாகவும் மீண்டும் ஒரு நாள் கூறினார். “என் அப்பாவை வைத்து எழுதியது போல் இருக்கிறது” என்றொரு நாளும் “அப்பா நினைவு வரும்போதெல்லாம் இந்தப் பாடலை கேட்டுக் கொள்கிறேன்” என்றொரு நாளுமென என்னிடம் உரையாடலை ஒவ்வொரு நாளும் தொடர்ந்தவர் ஒரு நாள்,
“உங்களை நான் அப்பான்னு கூப்பிடலாமா”
என்று தயங்கினார்.
கண்களில் நீர் பெருக நான்,
“அப்பான்னு அழைக்க அனுமதி எதற்கு மகளே” என்றேன்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி