விடிந்துவிட்டது எழுந்திருங்கள் சிறுகதை – பேரா. எ. பாவலன்
அது ஒரு பாழடைந்த குகை. ஆள் அரவமற்று பார்ப்பதற்கே மிக பயங்கரமாக அச்சமூட்டியது. தப்பித்தவறி கூட அங்குச் சென்றால் பயத்தாலேயே செத்து விடுவோம். ஆனாலும், அங்கு அச்சத்தைத் தாண்டி ஒரு வசீகரம் மின்னியது. தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது அந்த இடத்திற்கு சென்று வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
ஏனென்றால்? அந்தக் கட்டுக்கதைகளையும், அச்சத்தையும் தாண்டி, ஒரே ஒரு முறையேனும் அந்த ராணுவ ரகசியத்தை மிஞ்சும் இரகசியம் பொதிந்த அவ்விடத்தைக் காணவேண்டும் என்ற ஒரு பேராசை எல்லோருக்கும் எழுவது இயல்புதானே? நான் மட்டுமென்ன விதிவிலக்கா?.
நானும், என் எழுத்தாள அண்ணனும் இருள் மண்டிக் கிடந்த அந்தக் குகையை தாண்டி உள்ளே சென்றோம். புதர்கள் அண்டிய இரண்டடுக்கு மாடிவீடு ஒன்று தெரிந்தது.
சிறிய வெளிச்சத்தில் ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடலமைப்புக் கொண்ட சிலர் எங்களைப் பார்வையாலேயே அளந்தனர்; அச்சமூட்டினர்.
சாம்பல் நிறத்தில் சபாரி உடை அணிந்து கொஞ்சம் மிடுக்கான இருவர் எங்கள் இருவர் மீதும் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தனர். சோதனையில் வென்றதால் உள்ளே செல்ல அனுமதிபெற்றோம்.
எதிரே தெரிந்த படிக்கட்டுகளில் ஏற முயன்ற எங்களுக்குச் சரியான பாதையைக் காட்டினார் முறுக்கு மீசைக்காரர். எங்களிடம் மட்டுமல்ல அவர்களுக்குள்ளேயும் ஒருவரும் பேசிக் கொள்ளவில்லை. அந்த இடம் பெரிய மயான அமைதியால் சூழப்பட்டிருந்தது. வார்த்தைகள் என்னுள் எழுந்து எழுந்து அமிழ்ந்தன. சமயம் வாய்க்கையில் பேசலாமென்று, வார்த்தைகளில் சிலவற்றைத் தடவி எடுத்து தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். மற்றவர்களைப்போல உடன்வந்தவரும் பேசாதவராக மாறியிருந்தார். எல்லாவற்றையும் அதன் எதிர் – நேர், குறுக்கு – நெடுக்கு என எல்லாத் திசைகளிலும் துருவி ஆராய்ந்து கூடுதலாகப் பேசிவிடும் அவர் எதுவுமே பேசவில்லை. எதற்காகப் பேச வேண்டும் என்பதை அவரின் செயல்கள் அப்பட்டமாகத் தெரிவித்தன. மொழி உயர்ந்ததுதான் – மொழியின்றி எதுவுமில்லைதான். எல்லா நேரங்களிலும் மொழி அவசியமில்லை என்பதை மெதுவாகப் புரிந்துகொண்டேன்.
முதல் தளத்தில் மருத்துவர்கள் பரபரப்புடன் இருந்தனர். அவரைப் பற்றிய கூடுதல் அச்சம் என்னைத் தொற்றிக் கொண்டது. அவர் இறந்து விடக்கூடாது. ஒருமுறையேனும் அவரை உயிரோடு பார்க்க வேண்டும் என்பது என் வாழ்நாள் பெருங்கனவு. அதுமட்டுமல்ல.
இலட்சக்கணக்கான குரலற்ற அடிமைகளின் நல்வாழ்வும் சுதந்திரமும் அவர் உயிருடன் பிணைக்கப்பட்டிருந்தது. அவர் உயிர் அவரைவிடவும் குரலற்ற அந்த மக்களுக்குத்தான் அதிகம் தேவைப்பட்டது. அந்த மனிதரின் ஒற்றை அதட்டலுக்குத்தான் அரசாங்கம் அடங்கும். அவர் பேசினால் ஆதிக்க மனதுடையோர் வாய்களை மூடிக் கொள்வார்கள். இப்படியான துழாவல்களோடு அவரைக் காணச் சென்றேன்.
அங்கிருந்த அழகான வெள்ளைக்கார மருத்துவப் பெண்மணிகளில் ஒருவர், மௌனம்மீறி ப்ளீஸ் வெயிட் என்றார். அந்த ஒரு வார்த்தை மட்டும் தான் உதட்டிலிருந்து கொஞ்சம் மென்மையாக அவருக்கே தெரியாமல் உடைந்து கீழே வீழ்ந்து அந்த இடம் முழுவதையும் நிறைத்தது.
நூல் அளவு மட்டுமே திறந்திருந்த கதவு. எங்கள் கண்கள் கதவின் இடுக்கில் நுழைந்திட விரும்பின. அந்த அறைக்குள் மென்மையான இரைச்சல் ஒலி. அந்த குரலை கேட்டதும் ஆனந்தம்….. பேரானந்தம். சிலவற்றைப் பேசலாம் – சிலவற்றை எழுதலாம் – சிலவற்றை உணரமட்டுந்தான் முடியும். அது அந்தக் கணத்துக்கானது மட்டுமல்ல. எண்ணி எண்ணி சுவைத்து அசைபோடத் தூண்டுபவை. உயிர் திரும்ப வந்ததைப் போன்ற உணர்வு. நாங்கள் இருவரும் நெடுநேரம் கழித்துப் பார்த்துக் கொண்டோம்.
காத்திருந்த கணம் வந்தது. சிலையானேன். மீண்டும் உயிர்த்தேன். ஒரு மனிதன் உள்ளிருந்து கதவைத் திறந்தான். முதல் நபரைப் பார்த்தோம். பெருத்த ஏமாற்றம். அடுத்த நபரைப் பார்த்தோம். மூச்சு உள் ஒடுங்கியது. அதோ!…. அதோ!….. அவர்தான்! ……அவரேதான்!…….. அவரைப் பார்த்தவுடன் ஆனந்தத்தில் பூரிப்படைந்தோம். மகிழ்ச்சியில் திக்கமுக்காடினோம்.
அவரும் எங்களைப் பார்த்தார். புன்முறுவல் பூத்தார். இருவரும் எழுந்து நின்றோம். இரு கைகளை கூப்பியதைத்தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. பொறுக்கி வைத்திருந்த சொற்களும் தொலைந்து போயின.
நல்லா இருக்கிறீர்களா என்பதற்கு எழுத்தாள நண்பர் நல்லா இருக்கிறேன் அய்யா என்கிறார்.
அடுத்து என்னைப் பார்த்து நீங்கள்?
பதட்டத்தில் வார்த்தைகள் வரவில்லை…….. ஆசை இருந்தது. பேசுவதற்குத்தான் சொற்கள் இல்லை.
கட்டுக்கோப்பான உடல் – நல்ல உயரம் – சிவந்த மேனி – எந்த உடைக்கும் கச்சிதமாகப் பொருந்தும் உடல்வாகு. 128, 129 வயது என்கிறார்கள். நம்பமுடியவில்லை. 80ஐ தாண்டாதவர்போன்ற தோற்றம்.
பல்லாண்டுகள் கழித்து வீடுவந்த தகப்பன், தன் குழந்தைகளைக் கொஞ்சுவதைப்போல் அவரைத் தூக்கிக் கொஞ்சிட தோன்றியது. குழந்தைக்கும் தெரியாமல் முத்தங்களைப் பதிக்கும் தந்தையாக மாறிட ஆவலித்தேன். முடியவில்லை.
என் அன்பனைத்தும் கண்ணீரானது. ஆனமட்டும் தேம்பி தேம்பி அழுதேன்.
ஏன் அழுகிறாய்? என்றார்.
இல்ல…. இல்ல….. நீங்க 1956 டிசம்பர் மாசம் ஆறாம் தேதியே செத்துப் போயிடிங்கனு சொன்னாங்க. குந்திக் குந்தி தெளிவற்று வெளிவந்தன வார்த்தைகள்.
சிரித்தார்.
அதற்குத் தாம்தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
என் உருவம் தாங்கிய பிணத்திற்குத் தீ மூட்டி இறந்துவிட்டதாகப் பொய்க்கதை பரப்பச்சொன்னேன். மக்கள் சமமாகப் பார்க்கப்படுகிறார்களா? சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெறுகிறதா? என்று வேவு பார்க்கவே யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்கிறேன். என்னை பெரும் படிப்பாளி என்கிறார்கள். நான் படிப்பதற்கு இன்னும் இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். உடல்மெலிவும் என்னை வருத்துகிறது. ஆகவேதான், நான் விலகி நின்று வேலை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று பதில் அளித்தார்.
உங்களுக்கு வெண்கலத்தில் சிலை வைத்து, மலர் தூவி, மரியாதை செய்து – உம்மால் உயர் பதவிகளை அடைய முடிந்தது என எங்கள் ஆட்சியாளர்கள் வானளாவ உம்மைப் புகழ்வது உமக்குத் தெரியுமா? உம் சட்டம்தான் தங்களின் பாதுகாப்பரண் என்பது நீர் அறியாததல்ல என்றே நினைக்கிறேன் என்றார் எழுத்தானள நண்பர்.
சட்டமா? இந்த நாட்டிலா? நீண்ட அமைதி நெடுநேரம் தங்கியது.
நாங்களும் மௌனித்தோம்.
அவரே தொடர்ந்தார்.
சட்டத்தை மதிக்காத இதுபோன்ற ஆட்சியாளர்களை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
நீங்கள்தான் அப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் துணையாக இருப்பதாகக் கூறுகிறார்களே என்றேன் அடக்கமாக. இன்னும் நீங்கள் விரும்பிய தேசத்தை கட்டமைக்க வில்லை. நீங்கள் எதையெல்லாம் எதிர்த்தீரோ அதையெல்லாம் அடாவடியாய்த் திணித்து எல்லோரையும் ஏற்க செய்கின்றனர். மதச்சார்பற்ற இந்த நாட்டை இந்து நாடாக்கும் பணிகள் வேகமாய் நிகழ்கின்றன. சனாதனம் உயிர் பெற்றுள்ளது. அது சரியென மக்கள் மூளைகளை சலவை செய்யப்படுகிறன. மாட்டுக்காக சிறுபாண்மை மக்களும் பட்டியலினத்தவரும் அவமானப்படுத்துகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.
கல்வி பொதுவில் இல்லை. கல்வி எளியவர்க்குக் கூடவே கூடாது என்கிற புதிய மனப்போக்குடன் செயல்பாடுகள் மிகுந்துவிட்டன. கல்விக்காக நீங்கள் உன்னத சட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை. உயர் பதவிகள் வகிப்பதற்கான ஒரே தகுதி பூநூல் மட்டுமே என்றாகிவிட்டது. நீதிபதிகள் விலைபோய்விட்டனர். அவர்களின் பணிவிடைக்கு நாடாளுமன்ற பணிகள் தானாகக் கிடைக்கின்றன.
இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்த வேண்டுமென்ற திட்டமிடலும் அதற்கான செயல்பாடுகளும் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு நாளும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு மரணம் எந்த வகையில் மரணம் வருமென்றுதெரியாது? நீங்கள் இதுபோல மறைந்திருந்தால்…. எங்களுக்கு யார் பக்கத் துணையாக நிற்பார்கள்? என்று வினவினேன்.
எல்லாம் மாறும். எதுவும் நிரந்தரமில்லை. விரைவில் நான் இந்த உலகில் புதிய மனிதனாக வலம் வருவேன். சாதி என்பது அடையாளம் அல்ல அது ஒரு அவமானச் சின்னம் என்பதை உணருங்கள், சாதியைத் தூக்கி எறிந்துவிட்டு, தாழ்வு மனப்பான்மையை அகற்றி, பொதுவெளியில் மைய நீரோட்டத்தில் வருவதற்கு முயற்சியுங்கள், அறிவைக்கொண்டு கேள்வி கேளுங்கள், போராடுங்கள், எல்லோரையும் தன் வசப்படுத்துங்கள், புத்தரையும் அவர் அன்பையும் அவர் போதித்த கருத்துகளையும் கொண்டு சேருங்கள், அது போதும் என்றார்.
அடுத்த வார்த்தையைப் பேச எத்தனிக்கையில்,
மாமா மணி 6.10 ஆயிடுச்சு பசங்களை எழுப்பி குளிப்பாட்டுங்க…… என்றவுடன் திடுக்கிட்டேன்… என் முன்னால் நவீனமான தோற்றத்தில் நின்று கொண்டு புன்னகை பூத்தார் சட்டமேதை படுக்கையிலிருந்து எழுந்து அன்றாடத்தில் நுழைந்தேன்.
பேரா. எ. பாவலன்
[email protected]