சிறுகதைச் சுருக்கம் 79: புதுமைச் செல்வனின் விடிவை நோக்கி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
அதிகார வர்க்கத்தின் திமிரையும் உழைப்பவர்கள் அடிபணியும் அறியாமையையும் ஏமாறும் விதங்களையும் யதார்த்தமாக எழுதிச் செல்கிறார்.
விடிவை நோக்கி
புதுமைச் செல்வன்
“என்னப்பா கலுசு, இன்னும் என்ன ஒரேயடியாக யோசிச்சுக்கிட்டே இருக்க? சட்டு புட்டுன்னு உடனே கிளம்பு. யோசிச்சு யோசிச்சு நீ இருக்கறதையும் கோட்டை விட்டுறப்போற” ஏஜெண்ட் கடற்கரை, கலுசு என்கிற பவர் லூம் ஓட்டும் தொழிலாளியிடம் தான் இதோடு இதே மாதிரி நூறு தடவையாவது சொல்லி இருப்பார்.
கலுசுவும் வேலை இல்லாமல் எத்தனை நாள்தான் சும்மா இருப்பார். திருப்பூருக்கு வர நல்ல கூலி கிடைக்கும். மேற்கொண்டு ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ், குடியிருப்பு இலவசம் என ஏகப்பட்ட வர்ண மத்தாப்புகளை காட்டி கடற்கரை ஆட்களை வளைத்துப் போடுகிறார்.
“சரிப்பா கடற்கரை, உன் சொல்லுக்கு சம்மதம். ஆனா பத்தாயிரம் அட்வான்ஸ் உறுதியா கிடைக்குமா?”
கடற்கரை ஓங்கிய குரலில் பதில் சொன்னார். “நான் என்ன பொய்யா சொல்றேன். குறைவா கொடுத்தா நான் ஒரு மாசம் ஓசியில் உனக்கு சாப்பாடு போடுறேன். அந்த பாரு குருசாமி, ஆறுமுகம் கூட இன்னக்கி ராத்திரி எங்கூட திருப்பூருக்கு வாராங்க சந்தேகம்னா கேளு. எல்லாம் உன் நன்மைக்குத்தான்.”
குருசாமியும் ஆறுமுகமும் அருகில் வந்து விட்டார்கள். இருவரும் கலுசுவிற்கு அடுத்த வீட்டுக்காரர்கள்தான். நெருங்கிய சொந்தமும் கூட. அன்று இரவு எல்லோரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டார்கள். நேராக இராஜபாளையம் பஸ் பிடித்து மதுரை போனார்கள். அங்கிருந்து திருப்பூர் பஸ் ஏறினார்கள். அதிகாலை ஆறு மணிக்கு திருப்பூர் வந்துவிட்டது. நால்வரும் இறங்கி சூடாக டீ அருந்தி பயண களைப்பை தட்டி விட்டார்கள். வேறொரு பஸ்ஸில் எல்லோரும் ஏறினார்கள்.
“இந்த இடம்தான், எல்லோரும் இறங்குங்க” கடற்கரையின் வார்த்தைகளை கேட்டதும் வேகமாய் இறங்கினார்கள். நீண்ட பயணம் அது. சுற்றிலும் பார்த்தார்கள். எல்லோருக்கும் முகம் வெளிறி விட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் பொட்டல் வெளி ரோட்டிலிருந்து வடக்கே ஒரு தறி செட் அங்கே நடுநாயகமாய் எழும்பி இருந்தது. சின்ன சின்ன குடிசைகளும், ஒரே ஒரு டீக்கடையும் மாத்திரம் அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்தது.
“என்னப்பா கடற்கரை, இப்படி பொட்டக்காட்டுக்கு கூட்டியாந்துட்ட” அவர்கள் கோபம் வார்த்தைகளில் ஒட்ட துடித்தன.
“ஆமாய்யா இடம் துண்டா இருந்தாலும், நல்ல ரூம் வசதி, தண்ணீர் வசதி எல்லாம் உண்டு. எல்லாத்துக்கும் மேல நல்ல மொதலாளி அவரு.”
எல்லோரும் அந்த தறிசெட்டை நோக்கிப் போனர்கள்.
தறி செட் ஓடிக்கொண்டிருந்தது. நாற்பத்து எட்டு தறிகள் கொண்ட நடுத்தரமான தறி செட் அது. உள்ளே பாதி தறிகள்தான் ஓடின. மீதிபாதி ஆட்கள் இல்லாமல் ஆனால் பாவுகள் ஏற்றப்பட்டு ஓடாமல் நின்றிருந்தன. உள்ளே எட்டிப் பார்ததார்கள். தறிகளின் வேகமான அசைவும் சத்தமும் அவர்களை வா வா என்று கூப்பிடுவது போலிருந்தது.
முதலாளி அவர் ரூமில் இருந்தார். உள்ளே போனார்கள்.
“முதல்ல எல்லோரையும் சாப்பிட சொல்லு. பிறகு வேலை பாக்கட்டும்” என்று முதலாளி கூறிவிட்டு கடற்கரையிடம் நூறு ரூபாய் நோட் ஒன்றை நீட்டினார். தறி செட்டின் காலை ஷிப்ட் ஏழு மணிக்கு தொடங்கும் என்பதால் தினசரியும் முதலாளியும் அவ்வேளையில் வந்துவிடுவது வழக்கம்.
தறிசெட்டின் பின்னால் உள்ள ரூமிற்கு கடற்கரை கூட்டிச் சென்றார். பத்து ரூம் அங்கே கட்டி இருந்தார்கள். “குடும்பமா வந்து இங்க தங்கிக்கலாம். நான் அப்பவே சொன்னனே பாத்தியா! ரூமிற்கு வாடகை எல்லாம் கிடையாது. கரண்ட் செலவுக்கு மட்டும் மாதம் ஐம்பது ரூபாய் கட்டணும்.”
“இத்தனை சின்ன ரூமிலா சாப்பிட்டு குடும்பத்தோட தூங்க” கடற்கரை பெருமையை ஆறுமுகம் உடைத்தார்.
மறுபடியும் ரோட்டோரம் வந்து சாப்பிட்டுக் கொண்டார்கள். “ம்.. ம் சீக்கிரம் முதலாளி வேற இடத்துக்குப் போகணும். உடனே ரூபாயை வாங்கிருவோம்” கடற்கரை அவசரப்படுத்தினார்.
ரூபாய் என்றதும் எல்லோரும் சுதாரிப்பு கூட்டிக் கொண்டார்கள்.
தறிசெட்டு ஆபிஸில் கணக்குப் பிள்ளையிடமிருந்து ஆளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கைமாறியது. எல்லோரது பெயரையும் விலாசத்தையும் தனித் தனியாக ஒரு பத்திரத் தாளில் கணக்குப் பிள்ளை எழுதினார். கையெழுத்துப் போட அழைத்தார். கலுசு வாங்கிப் படித்தார்.
“இதுல எவ்வளவு ரூபாய்னு போடலியே! பின்னால சிக்கல் வந்துரக் கூடாது பாருங்க” கலுசு சொன்னதும் கணக்குப் பிள்ளை பதில் அளித்தார். “இங்க எல்லார் கிட்டயும் அப்பிடித்தான் வாங்குறது பழக்கம்.”
“என்னமோப்பா இவ்வளவு தூரம் நீ சொல்லி வந்துட்டோம். நல்லா இருந்தா குடும்பத்தோட வருவோம். ஆமா மீதி ஐந்தாயிரம் எப்ப வரும்?” கலுசு பேசினார்.
ஆறுமுகமும் குருசாமியும் உடனே கேட்டார்கள் “பத்தாயிரம் வாங்கித்தர்றேன்னுதான கூட்டி வந்தார்கள்.”
கணக்குப்பிள்ளை பதில் சொன்னார் “உங்க வேலைத் திறமையையும் விசுவாசத்தையும் பாத்த பிறகு மீதி ஐந்தாயிரம் வாங்கிக்குங்க சரியா?”
முதலாளி இடை மறித்தார் “அடுத்த வாரம் வாங்கிக்குங்க சந்தேகமே வேண்டாம்”.
மூவரது கண்களிலும் பிரகாசம் குவிந்தது. புரோநோட் பத்திரங்களில் சந்தோசம் அவர்களது விரல்களை நகர்த்தியது. கணக்குப் பிள்ளை மூவரையும் அவரவர் தறிகளை வந்து காண்பித்தார். ஒவ்வொருவரும் தங்கள் தறிகளை உற்றுப் பார்த்து விட்டு பின் கைகளால் தொட்டு வணங்கிக் கொண்டார்கள். கலுசு நாடாவை கையிலெடுத்து குழல் மாட்டி தறியை ஓட விட்டார்.
முதல் ஷிப்ட் ஓட்டி முடித்தார்கள். ஆறுமுகம் குருசாமி கலுசுவிடம் வந்தார்கள்.
“கலுசு இந்த ஆப்நைட் ஷிப்டையும் பாக்கணும்னு சொல்றாங்க. என்னால முடியாதுப்பா கண்ணு ஒரே இருட்டிட்டு வருது.”
கணக்குப்பிள்ளை வந்து நின்றார். அவரிடம் இருவரும் அதையே ஒப்பித்தார்கள்.
“என்ன செய்வீங்களோ தெரியாது, நீங்க மூணு பேரும் இப்பவே நின்னு ஓட்டணும். ரெண்டு பேர் திடீர்னு வரலை ஆர்டர் அர்ஜெண்ட்.”
புதிதாய் வந்தவர்கள் உள்ளே ஓட்ட ஆரம்பித்தார்கள். குருசாமியும் ஆறுமுகமும் தயங்கினார்கள். உடம்பு அசதி களைப்பு கால் கை அலுப்பு. மறுபடியும் கணக்குப் பிள்ளை அவர்களிடம் வந்தார்
“வேலையை நாளைக்குப் பாத்துக்கிறோம்” இருவரும் வார்த்தைகளை கசிய விட்டார்கள்.
“அப்ப முதலாளி கொடுத்த பத்தாயிரத்தை உடனே வச்சுட்டு வெளியேறுங்க.”
“காலையில ஐயாயிரம்தான் கொடுத்துங்க. மீதி ஐந்தாயிரத்தை கையில் வச்சுட்டு சொல்லுங்க நீங்க” கலுசு அவரை நோக்கி கோபமாய் சொன்னார்.
“யோவ், நீங்க ஆளுக்கு பத்தாயிரம் வாங்கினதா புரோ நோட்ல எழுதி இருக்கோம். எங்க வேணும்னாலும் போய் சொல்லுங்க.”
அதிர்ச்சியில் அவர்கள் உறைந்தே போனார்கள்.
“ஆகா மோசம் போயிட்டோமே, நல்லா சிக்கிக்கிட்டோம். ஐநூறு மைல் தொலைவில் வந்து வசமா மாட்டிக்கிட்டோம்.”
“சரி, சரி போயி வேலையைப் பாருங்க.”
மனதில் பாரத்துடன் இந்த இரண்டாவது ஷிப்டையும் முடித்தார்கள். தங்கள் ரூமிற்கு வந்தார்கள். வெறும் தரையில் தூங்கிப் போக சாய்ந்தார்கள்.
திடீரென கதவு தட்டப்பட்டது. வெளியே முரட்டுத்தனமாய் ஒரு ஆள் நின்றிருந்தான்.
“என்ன வேணும்?” கலுசுதான் கேட்டான்.
“நீங்க தான புதுசா வந்திருக்கிற ஆளுங்க. இந்த புல் நைட் ஷிப்டலயும் நீங்க யாராவது ஒரு ஆள் நிக்கணும். உள்ளே ஆள் குறையுது ம்.. அவசரம்.”
“என்னய்யா இப்பத்தான் இரண்டு ஷிப்ட் பாத்துட்டு வந்திருக்கோம். ரெஸ்ட் எடுக்க விடுங்கய்யா!” குருசாமி கெஞ்சினார்.
“யாராவது ஒருத்தர் வாங்க போதும். இல்லைன்னா மூணு பேருக்கும் நாளைக்கு வேலையும் கிடையாது.”
“ஒரு ஆளு தானய்ய, நான் வர்றேன் போ” கலுசுவே பேசினார்.
எப்படியும் இந்த ஷிப்ட் ஓட்டி விட்டு நல்ல பெயர் எடுப்போம். மீதி ஐந்தாயிரம் முதலாளி தராமலா போய் விடுவார். நம்பிக்கை அவரை உசுப்பியது. என்றாலும் உடம்பின் மொத்த அசதியும் வலியும் கூடிக் கொண்டே போயின.
சுற்றிலும் தறிகளின் இரைச்சல் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. வியர்வை கொட்டியது. தூக்கம் நிறைந்து வழியும் கண்களால் வேலை கனத்தது. கால்கள் நகர மறுத்தன.
திடீரென அவரது தறிநாடா வெளியேறி விழுந்தது. அதை எடுத்துவிட வேண்டி குனிந்தார். களைப்பும் அசதியும் ஏற்படுத்திய தூக்கக் கலக்கம் அவரது கால்களை இடறியது.
ஓடிக்கொண்டிருந்த அந்த ராட்சத தறியின் கனத்த பெல்ட் அவரை உள்ளுக்குள் இழுத்துப் போட்டு அணைத்து விட்டது. அவரது மரண ஓலம் அந்த தறிசெட்டையே நிறுத்தியது. நசுங்கிய அவரது உடலை வெளியே இழுத்துப் போட சுற்றிலும் தொழிலாளிகள் நின்றார்கள். உள்ளே ஓடி வந்த குருசாமியும் ஆறுமுகமும் நெஞ்சிலும் முகத்திலும் அடித்தபடியே கதறி கதறி அழுதார்கள். கலுசுவின் குடும்பம் அவர்கள் மனக்கண் முன் வந்து இதயத்தில் தீ மூட்டியது.
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.