நூல் அறிமுகம்: விடுதலை இராசேந்திரனின் ’ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ – பொ. நாகராஜன்

நூல் அறிமுகம்: விடுதலை இராசேந்திரனின் ’ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ – பொ. நாகராஜன்




● பெரியாரிய சிந்தனையாளர், தோழர். விடுதலை இராசேந்திரன் ‘ அறிந்திடுவீர் ஆர்எஸ்எஸ்ஸின் கதையை ‘ என்ற தலைப்பில் ‘ கங்கை கொண்டான் ‘ என்ற புனைப்பெயரில், விடுதலை நாளேட்டில், 1980ல் தொடராக எழுதி வந்தார். தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 1982ல் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியானது தான் இந்த படைப்பு !

● அன்றும் இன்றும் இந்தியாவை உள்ளிருந்தே அழிக்கும் நச்சுக் கிருமியாகவும், மதத்தின் அடிப்படையில் நாட்டை துண்டாட துடிக்கும் பாசிச அமைப்பாகவும், இந்துத்துவா என்ற பிரிவினை வாதத்தை விதைத்து வரும் அரசியல் கருத்தாகவும் விளங்குகின்ற ஒரே அமைப்பு – ஆர்எஸ்எஸ் ! அதைப் பற்றிய விரிவாக எழுதப்பட்டதே இந்த நூல் !

● விடுதலை இராசேந்திரனின் அயராத உழைப்பில் ஆர்எஸ்எஸ் பற்றிய எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாக நூல் அமைந்துள்ளது. மக்களுக்கு கெடுதல் தரும் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கம் பற்றி, ஒரு சிலரே இந்த அளவு மெனக் கெடலுடன் தரவுகளை சேகரித்திருப்பார்கள் !

● நூலில் காணக் கிடைக்கும் தகவல்கள் :
ஆர்எஸ்எஸ் தோற்றம் | ஹெட்கேவர் தலைமை | கோல்வால்கர் பங்களிப்பு | கோல்வால்கரின் ஞான கங்கை நூல் | காந்தி கொலையின் பின்னணி | சாவர்க்கர், கோட்சே பற்றிய திடுக்கிடும் தகவல்கள் | ஆர்எஸ்எஸ் அரங்கேற்றிய கலவரங்கள் |

● முக்கிய தலைவர்களை கொலை செய்ய நடந்த முயற்சிகள் | மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களின் சித்து விளையாட்டுகள் – இவ்வாறு ஒரு துப்பறியும் நாவலைப் படிக்கும் போது ஏற்படும் அதிர்வையும் மர்மத்தையும் மாறி மாறி நம்மால் இந்த நூலில் உணர முடிகின்றது !

● ஆர்எஸ்எஸ் – ராஷ்டிரிய சுயம்சேவக் சங் என்ற அமைப்பு 1925ம் ஆண்டு, விஜயதசமி அன்று (25.09.1925) துவக்கப்பட்டது . அதை தோற்றுவித்த ஐந்து பேரும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் !

● அவர்களில் முன்னோடி – கேசவ் பலிராம் ஹெட்கேவர் (1889 – 1940). அவரே சங்கின் முதல் தலைவர். தனது தலைமையின் போது, யாரையும் கேள்வி கேட்க விடாமல், ‘ தலைவர் சொல்லே மந்திரம் ‘ என்ற கட்டுப்பாட்டோடு இயக்கத்தை வளர்த்தார் !

● ஹெட்கேவருக்கு அடுத்து தலைவர் ஆனவரும் சித்பவன் பார்ப்பனர் தான் ! மாதவராவ் கோல்வால்கர் (1906 – 1973)
ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை உருவாக்கியவர். இவர் எழுதிய நூலான ஞான கங்கை ( Bunch of thoughts ) சங்கிகளுக்கான வேதப் புத்தகம் ! ‘ அரசியலை இந்துமயமாக்கு ! இந்துக்களை ராணுவ மயமாக்கு ! என்ற கொள்கையைப் பரப்பியவர் !

● ஆர்எஸ்எஸ்ஸின் மூன்றாவது தலைவராக ஆனவரும் அதே சித்பவன் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர். பாலாசாகேப் தேவ்ரஸ் ( 1915 – 1996 ) தீவிர இந்துத்துவா வெறியர். இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு யாரும் மாறிவிடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார் . இந்தியாவில் வேறு மதத்தினருக்கு இடமில்லை என்பதை வெளிப்படையாக பேசியவர் !

● இவ்வாறு முதலாவதாக ஹெட்கேவர், இரண்டாவதாக கோல்வால்கர், மூன்றாவதாக தேவரஸ் போன்ற மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களால் வழி நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் – இந்தியாவில் இந்து ராஷ்ட்ரா நிர்மாணம் என்ற பெயரில், மனு சாஸ்திர, வேத சாஸ்திர அடிப்படையில், பார்ப்பனர்களின் ஆட்சியை நிறுவுவதற்கே இன்று வரை தொடர்ந்து செயல் பட்டு வருகின்றது !

● தங்களது கொள்கையை ‘ இந்துத்துவா ‘ என அழைக்கின்றார்கள். அதை அடைவதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் மதக் கலவரங்களை ஈவிரக்கமின்றி நடத்தியுள்ளார்கள் .நூலில் பட்டியலிடப்பட்ட கலவரங்கள் :

● 1927ல் நாக்பூர் | 1970ல் ராஞ்சி | 1971ல் தெள்ளிச்சேரி – கேரளா | 1971ல் ஜாம்ஷெட்பூர் | 1973ல் அகமதாபாத் | 1975ல் அலிகார் | 1980ல் மொராதாபாத் | 1981ல் பீகார் ஷெரிப் |
( இந்த நூலில் பட்டியலிடப் பட்டவைகள் 1982ம் ஆண்டு வரைக்கும் மட்டுமே )

● ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம் என இந்திய மக்கள் அனைவரும் உணர்ந்த நாள் – காந்தி கொலை செய்யப்பட்ட நாள் ! 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று மகாத்மா காந்தியை, ஆர்எஸ்எஸ் சீடன், இந்து மகாசபையைச் சேர்ந்த, மராட்டிய சித்பவன் பார்ப்பனன் நாதுராம் கோட்சே, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் !

● இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் 04.02.1948 முதல் 12.07.1949 வரை தடை செய்யப்பட்டது ! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் கொலையை கோட்சே செய்தான் !

● காந்தியின் கொலை வழக்கை விசாரிக்க நீதிபதி ஆத்மாசரண் நியமிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரணை 22.06.1948 முதல் 21.06.1949 வரை நடைபெற்று தீர்ப்பும் வழங்கப்பட்டது. நாதுராம் கோட்சே 15.11.1949 அன்று தூக்கிலிடப்பட்டான் !

● காந்தியின் கொலையில் அரை டஜன் சித்பவன் பார்ப்பனர்கள் சம்பந்தப் பட்டிருந்தார்கள். அதன் காரணமாக மராட்டியத்தில் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறை நடந்தது! ஆர்எஸ்எஸ்ஸின் கோல்வால்கரை தூக்கில் போடு என முழக்கமும் கேட்டதாம் !

● அதே காலகட்டத்தில், தமிழகத்தில் தந்தை பெரியார், இங்கிருந்த பார்ப்பனர்களுக்கு எதிராக எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக் கொண்டார். காந்தியின் கொலையை கண்டனம் செய்தவர் பார்ப்பனர்களுக்கு எதிராக எதுவும் கருத்துக் கூறவில்லை !

● ” நாதுராம் கோட்சே பார்ப்பனராக இருப்பதற்காக அவனையோ அவனது சமூகத்தையோ தாக்குவதை விட , காந்தியின் கொலைக்கான உண்மையான காரணங்களை அறிந்து அதை எவ்வாறு சரி செய்வது என சிந்திக்க வேண்டும் ! ” …என்று தந்தை பெரியார் அகில இந்திய வானொலியில் பேசும் போது கருத்து தெரிவித்தார் !

● ஆர்எஸ்எஸ் காந்தியை கொன்றது மட்டுமல்ல பல்வேறு தலைவர்களை தீர்த்து கட்ட தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது ! மாற்று கருத்துக்களை எதிர் கொள்ள திராணியற்ற இயக்கம் என்பதற்கு அவர்கள் நடத்திய சில தாக்குதல் பட்டியல் :

● டெல்லியில் காமராசரை 07.11.1976 அன்று அவரது வீட்டில் தீவைத்து கொல்ல முயற்சி | அம்பேத்கரை விஷம் வைத்துக் கொல்ல சாவர்க்கரின் தம்பி பாபா சாவர்க்கர் முயற்சி | பீகார் முதல்வர் கர்பூரி தாக்கூரை 22.10.1979 அன்று கொலை வெறித் தாக்குதல் |

● உ.பி. முதல்வர் ராம் நரேஷ் யாதவை வீடு புகுந்து கத்தியால் குத்தியது | ஜனதா தள் தலைவர் ராஜ்நாராயணின் மண்டையை ராஜஸ்தான் கோட்டாவில் உடைத்தது | மைசூரில் ஜார்ஜ் பெர்னான்டசை குண்டர்கள் தாக்கியது |

● இவ்வாறு இந்திய மக்களை மதத்தால் பிரித்து, வன்முறையால் பயமுறுத்தி, அதிகாரத்தால் அடக்கி ஆள தொடர்ந்து முயற்சி செய்யும் பாசிச இயக்கமே – ஆர்எஸ்எஸ் !

● நூலைப் படிக்கும் முன்பு – ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம் என அறிந்தவன் !
நூலைப் படித்த பின்னர் –
ஆர்எஸ்எஸ் ஒரு பேரபாயம் என
உணர்ந்து கொண்டேன் !

பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
சென்னை – 09.03.2023.

நூல் : ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்
ஆசிரியர் : விடுதலை இராசேந்திரன்
விலை : ரூ.₹300/-
பக்கங்கள்: 301
முதல் பதிப்பு 1982
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]