Kaviyoviyathodar Yuthageethangal - Viduthalai 28 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- விடுதலை 28

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: விடுதலை 28 – நா.வே.அருள்




விடுதலை
****************
ஒரு விவசாயியின் அரிசியில்
கடவுளின் கையெழுத்து இருக்கிறது
சாத்தான்களால் படிக்க முடிவதில்லை.

ஒரு விவசாயி
மணிலாவை உரிக்கிறபோது
உள்ளே உருளும் இரண்டு பிணங்கள்!.

வயக்காட்டின் சேற்றில்
விவசாயிகளின் வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது.

அவர்கள் குடிக்கும் கூழ்
உங்கள் மதுக்கோப்பைகளில்
போதையைத் தருவதில்லை.

குருவிக்காரப் பெண்மணிகள்
மார்பில் குழந்தைகளைக் கட்டி வருவதுபோல
உழைத்துக் களைத்த விவசாயப் பெண்களின்
மடி நிறைய கீரைக் குழந்தைகள்.

இரவு எட்டு மணிக்கு மேல்தான்
அவர்கள் அடுப்பு புகைய ஆரம்பிக்கிறது.
அப்போதெல்லாம் உங்கள்
மதுச் சாலைகளில்
கோப்பைகளின் கிண்கிணியோசைகள்.

அவர்களின் நெற்றிப் பட்டைகள்
தேசியக் கொடிகள்
அவர்களின் வயிற்றுச் சுருக்கங்கள்
தேச வரைபடம்.

மனித மூக்குக்கு
மூக்கணாங்கயிறா?
அவர்கள் காளைகளின் திமில்கள்.

உங்கள் காதுகளில் அடைத்திருக்கும்
பஞ்சினை அகற்றித்தான்
அவர்களின் காயங்களுக்குக் கட்டுப்போட முடியும்.

முன்னோர்களின் ரத்தக்கறை படிந்த
விடுதலை மண்ணை விழுங்கிச் செரிக்க
நவீன சட்டங்களின் கறுப்பு எழுத்துகள் திணறுகின்றன.

உயிரை நீக்கியபின்
பிணத்திற்கு மருத்துவம் பார்க்கிற
விசித்திரங்களே
புதிய வேளாண் சட்டங்கள்!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
அவர்களின் டிராக்டர்களுக்கு
விடுதலை விவசாயம் தெரியும்!!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்