திரை விமர்சனம்: திட்டம் இரண்டு – இரா. இரமணன்
திட்டம் இரண்டு (PLAN B) ஜூலை 2021இல் சோனி லைவில் வெளியான தமிழ் திரைப்படம்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காவல் அதிகாரி ஆதிரா தன்னுடைய பள்ளி தோழி சூர்யா கொலையை துப்பு துலக்க வேண்டிவருகிறது. சூர்யாவின் கணவர், அவளைக் காதலித்த ஒரு வாலிபன், ஆதிராவின் காதலன் அர்ஜுன் என கொலை செய்தவர் யார் என மர்மம் தொடர்கிறது. இறுதியில் அவள் கொலை செய்யப்படவேயில்லை என்றும் சிறு வயதிலிருந்தே ஆணாக மாறும் உணர்வு கொண்ட மூன்றாம் பாலினத்தவர் என்றும் அவருடைய கணவரே அவரை அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாற்றிவிட்டார் என்றும் விளக்கப்படுகிறது.
மூன்றாம் பாலினத்தவரின் உணர்வுகள், பிரச்சினைகள் அழுத்தமாகக் காட்டப்படவில்லை என்பதே பெரிய குறையாக உள்ளது. இயக்குனரின் நோக்கம் ஒரு மர்மக் கதை சொல்வது. அதற்கு பெண் ஆணாக மாறுவது என்கிற கிளைமாக்சை பயன்படுத்தியிருக்கிறார். ஆணாக மாறிய பெண் கொஞ்சம்கூட மூன்றாம் பாலினத்தவரின் அடையாளங்கள் இல்லாமல் இருப்பது இயக்குனரின் பிரதான நோக்கம் அதுவல்ல; ஒரு மர்மக்கதைக்கான இறுதி திருப்பம் மட்டுமே என்பதைக் காட்டுகிறது. காஞ்சனா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாகக் காட்டியிருக்கிறார்கள்.
த்ரில்லர் ஜானரில் ஒரு மெசேஜ் என்றும் தமிழ் சினிமாவில் திருநம்பிகள் குறித்த முதல் விவாதத் திறப்பை ஏற்படுத்தியதற்கு திட்டம் இரண்டு குழுவிற்கு பாராட்டுகள் என்றும் புதிய தலைமுறை பாராட்டுகிறது. அதே சமயம் பாலினம் பற்றிய புரிதலில்லாமல், முற்போக்கு பேசமுனைகிறது என்கிற விமர்சனமும் உள்ளது. ( திட்டம் இரண்டு (2021) திரைப்படம் எதன் அடிப்படையில் ட்ரான்ஸ்போபியா? (bulbulisabella.com))
தன்னுடைய மனைவி ஒரு மூன்றாம்பாலினத்தவர் என்று தெரிந்ததும் அவரை அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாற்றி அவருடைய காதலியை அடைய உதவும் ஒரு கதாபாத்திரம் சற்று புதுமையானது; ஆனால் எதார்த்தமானது என்று சொல்ல முடியாது. காவல் துறை துப்பு துலக்கும் முறையும் பல திரைப்படங்களில் பார்த்ததுதான். இருந்தாலும் ஒரு பெண் காவல் அதிகாரியை மையப்படுத்தி அதிக சினிமாத்தனங்கள் இல்லாமல் எடுத்திருப்பதைப் பாராட்டலாம். நடிப்பும் கதையில் வரும் திருப்பங்களும் ஒரு ஜனரஞ்சகமான படமாக பார்க்க முடிகிறது. எதார்த்தமானது என்றோ முற்போக்கானது என்றோ கூற முடியாது.