மரங்கள் – விக்னேஷ் குமார்
மரங்களை எனக்கு நன்கு தெரியும்;
அவற்றிற்கும் என்னை.
மேலிருந்து பார்ப்பதுதானே மரங்களின் வேலை.
தினமும் நான் பார்க்க நிறைய மரங்கள்.
வீட்டெதிரேயுள்ள புங்கை மரம்,
பக்கத்து வீட்டு தோட்டத்திலுள்ள மாமரம்,
தெருக்கோடியிலுள்ள அரசமரம்,
நூலகத்தின் வேப்பமரம்,
நான்கடுக்கு மாடியுயரத்திற்கு இணையாக நிற்கும்
பெயர் தெரியாத தடித்த மரம்.
இப்படிப் பல மரங்கள் எனக்கு நன்கு அறிமுகமானவை.
ஒவ்வொரு முறையும் இந்த மரங்களை
தலை நிமிர்ந்து பார்க்கும்போது
அவை பேசத் தொடங்கிவிடுகின்றன.
அர்த்தமற்ற பேச்சுகள்.
சிலசமயங்களில் அமைதியாக பார்த்து நிற்கும்;
அவற்றில் பல அர்த்தம் நிறைந்திருக்கும்.
எப்போதாவது அரிதாக
ஒரு தழுவல் என்னை வாரியெடுத்து அணைத்துக் கொள்ளும்.
அப்போதெல்லாம் என்னுள் முளைத்துவிட்ட மரம் ஒரு கிளை விடும்.
விக்னேஷ் குமார்